தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையில் ஏற்பட்ட விவாதம் தாக்குதலாக மாறியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சின்னத்திரை பிரபலமான ஜி.பி. முத்து உள்பட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த முத்து மகேஷ், கடந்த 2ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, ஜி.பி. முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்று, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், “சாலையோரப் பகுதிக்கு ஒதுங்கி செல்லுங்கள்” என முத்து மகேஷ் அறிவுறுத்தியதாக தகவல். இந்த விவரம் ஜி.பி. முத்துவிடம் அவருடைய மகன்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஜி.பி. முத்துவும், அவரது மனைவி அஜிதாவும், தம்பி இசக்கிமுத்துவின் மனைவி அனிதாவும், தந்தை கணேசனும், முத்து மகேஷ் வீடு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முத்து மகேஷை வெளியே வருமாறு அழைத்தபோது, அவர் மறுத்ததாகவும், அதிலிருந்து ஏற்பட்ட பதற்றத்தில் முத்து மகேஷின் மனைவி பால அமுதாவை நால்வரும் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் பால அமுதா தலை, கை, முகத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முதலில் உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்ட அவர், பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பால அமுதா அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் ஜி.பி. முத்து உள்பட நான்கு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க