Serenity Strull/ Getty Images
பூண்டு, ஆல்கஹால், இறைச்சி மற்றும் விரதம் இருப்பது கூட நம் உடல் வாசனையைப் பாதித்து, மற்றவர்களுக்கு நம்முடைய நறுமணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது என்பதையும் மாற்றலாம்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் கைரேகையைப் போலவே, ஒரு தனித்துவமான வாசனைப் பண்பு உள்ளது. நமது ஆளுமை வகை (extroversion, dominance and neuroticism) முதல் நமது மனநிலை மற்றும் ஆரோக்கியம் வரை அனைத்தும் நாம் மணக்கும் விதத்தைப் பாதிக்கின்றன.
ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியர் கிரெய்க் ராபர்ட்ஸ் கூறுகையில், "நமது வாசனை நமது மரபணுக்கள், ஹார்மோன்கள், ஆரோக்கியம், மற்றும் சுகாதாரம் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது என்பது கடந்த சில தசாப்தங்களாக தெரியவந்துள்ளது. நாம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், இளமையாக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும், தன்பாலினச்சேர்க்கையாளராக இருந்தாலும், சாதாரணமாக இருந்தாலும், ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தாலும், அடங்கிப் போகிறவராக இருந்தாலும், கருவுற்றவராக இருந்தாலும், கர்ப்பமாக இருந்தாலும், நோய்வாய்ப்பட்டவராக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது சோகமாக இருந்தாலும் வாசனை மாறும்."
இந்தக் காரணிகளில் பல நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை – ஆனால் அனைத்தும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை அல்ல. நாம் மணக்கும் விதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது நாம் உண்ணும் உணவு. ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் ஆராய்ச்சியின் படி, இது நமது ஒட்டுமொத்த நறுமணத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு நாம் எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறோம் என்பது உட்பட, நாம் உணரப்படும் விதத்தையும் பாதிக்கிறது.
சுவாசம் மற்றும் வியர்வைஉயிரியல் மட்டத்தில், உணவு இரண்டு முக்கிய வழிகளில் நமது உடல் வாசனையைப் பாதிக்கிறது என்று பிங்காம்டனில் உள்ள நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் (SUNY) உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆய்வுகளின் உதவிப் பேராசிரியர் லினா பெக்தாசே கூறுகிறார். அவை நமது குடல் மற்றும் நமது தோல்.
முதலாவதாக, குடல். நீங்கள் உங்கள் உணவைச் செரிக்கும்போது, குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதை வளர்சிதை மாற்றம் செய்ய வேலை செய்கின்றன. உணவு ரசாயனங்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையிலான சில இடைவினைகள் வாயுக்களை வெளியிடுகின்றன – இந்த எளிதில் ஆவியாகும் மூலக்கூறுகள், உணவு உள்ளே சென்ற அதே வழியில் உங்கள் உடலை விட்டு வெளியேறுகின்றன என்று பெக்தாசே கூறுகிறார்.
இது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து வாய் துர்நாற்றம் அல்லது ஹலிடோசிஸை ஏற்படுத்தும் (இதன் பற்றிப் பின்னர் பார்க்கலாம்). உலகளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெரியவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் ஹலிடோசிசால் (துர்நாற்றத்தால்) பாதிக்கப்படுகின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் செரிமானத்தைத் தவிர வேறு காரணங்களும் உள்ளன.
Getty Images உணவு நம் வாசனையைப் பாதிக்க முக்கிய வழி நம் சுவாசம் மூலம்தான், ஆனால் அது உங்கள் வியர்வையின் வாசனையையும் மாற்றும்.
இரண்டாவதாக, தோல். உங்கள் உணவில் இருந்து வரும் ரசாயனக் கூறுகள், வளர்சிதை மாற்றத்திற்குப் பிறகு, இரத்த ஓட்டம் மற்றும் உடலின் பல திசுக்கள் வழியாகவும் பயணிக்கின்றன. சில தோலின் வழியாக வியர்வையாக வெளியேற்றப்படுகின்றன, அங்கு அவை தோலின் பாக்டீரியாவுடன் வினைபுரிந்து அங்கேயும் ஒரு வாசனையை உருவாக்குகின்றன. (ஆம், வியர்வை தன்னளவில் மணமற்றது; வியர்வையில் செழித்து வளரும் தோல் பாக்டீரியா தான் வியர்வையை மணக்க வைக்கிறது.)
வெவ்வேறு உணவுகளில் வெவ்வேறு நிலைகளில் செயல்படும் பல்வேறு ரசாயன கலவைகள் உள்ளன, இதன் விளைவாக மாறுபட்ட துர்நாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளில் பெரும்பாலும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது பொதுவானது: கந்தகம் (Sulphur). ஆனால் இதில் ஆச்சரியமூட்டும் வகையில், சில ஆய்வுகள் இந்த துர்நாற்றமூட்டும் கலவைகள் நாம் மேலும் கவர்ச்சியாகத் தோன்றும் எதிர்பாராத விளைவைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், முளைக்கட்டியவை (Brussels sprouts) மற்றும் காலிஃபிளவர் ஆகியவை ஆரோக்கியமான உணவின் முக்கியப் பகுதியாக இருக்கலாம் – ஆனால் அவை கந்தகக் கலவைகளால் நிரம்பியுள்ளன. இவை பெரும்பாலும் அழுகிய முட்டையின் வாசனையை நினைவூட்டுகின்றன. இந்த கலவைகள் இரத்த ஓட்டம் வழியாகச் சென்று தோல் பாக்டீரியாவுடன் வினைபுரியும் போது, உங்கள் வியர்வை ஒரு கடுமையான துர்நாற்றமுள்ள திரவமாக மாறலாம் என்று ஊட்டச்சத்து சிகிச்சையாளர் கெர்ரி பீசன் கூறுகிறார்.
பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த உணவுகளும் நமது வியர்வை மற்றும் சுவாசத்தின் வாசனையைப் பாதிக்கலாம். ஏனெனில், அவை மனித உடலால் வளர்சிதை மாற்றப்படும்போது, அவை டைஅல்லைல் டைசல்பைடு மற்றும் அல்லைல் மெத்தில் சல்பைடு போன்ற துர்நாற்றமுள்ள கலவைகளாக உடைக்கப்படுகின்றன. இவை சற்று வித்தியாசமான காலக்கெடுவில் உங்கள் உடலால் வெளியேற்றப்படுகின்றன – உண்ட உடனேயே, பின்னர், அல்லைல் மெத்தில் சல்பைடு விஷயத்தில், 30 நிமிடங்களுக்குப் பிறகு உச்சத்தை அடைகின்றன.
ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் பூண்டு நிச்சயமாக மக்களின் சுவாசத்தை துர்நாற்றமாக்குகிறது என்றாலும், அது மக்களின் அக்குள் வியர்வையை மிகவும் கவர்ச்சியாக மாற்றுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. விஞ்ஞானிகள் 42 ஆண்களை 12 மணி நேரம் அக்குள் பட்டைகளை அணியச் செய்து வியர்வையைச் சேகரித்தனர். அவர்களில் சிலர் குறைந்த பூண்டு சாப்பிட்டனர், சிலர் அதிக பூண்டு சாப்பிட்டனர், சிலர் பூண்டுச் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டனர். பின்னர், 82 பெண்கள் அந்தப் பட்டைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட வாசனையை இனிமை, கவர்ச்சி, ஆளுமை மற்றும் செறிவு ஆகியவற்றின் அகநிலை மதிப்பீடுகளின்படி மதிப்பிட்டனர். குறைந்த பூண்டு உட்கொண்ட ஆண்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் அதிக பூண்டு சாப்பிட்டவர்கள் மிகவும் கவர்ச்சியாகக் கருதப்பட்டனர். மேலும், சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டவர்களும் அதிக கவர்ச்சியுடையவர்களாக இருந்தனர்.
"நாங்கள் இந்த ஆய்வை மூன்று முறை மீண்டும் செய்தோம், ஏனெனில் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம்," என்று இந்த ஆய்வுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானியான, செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மனித நடத்தை மற்றும் ரசாயனத் தொடர்பு பற்றி ஆய்வு செய்யும் ஜான் ஹவ்லிசெக் கூறுகிறார். பூண்டில் ஆக்ஸிஜனேற்றம், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால், அவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதுவே இந்த ஆண்களின் வாசனையை பெண்களுக்கு மிகவும் இனிமையானதாக மாற்றுகிறது என்று அவர் ஊகிக்கிறார்.
Getty Images அதிகப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு அதிக மலர் மற்றும் இனிமையான வாசனை உள்ளது
மற்ற காய்கறிகள் நமது வாசனையில் ஒரு தனித்துவமான விளைவைக் கொண்டுள்ளன. அஸ்பாரகஸ் தாவரம் அஸ்பாரகஸ் அமிலம் எனப்படும் ஒரு கலவையை உற்பத்தி செய்கிறது, மேலும் அது உங்கள் உடலால் செரிக்கப்படும்போது, அது கந்தகக் கலவைகளையும் வெளியிடுகிறது. மெத்தனெத்தியோல் மற்றும் டைமெத்தில் சல்பைடு போன்ற இந்த ரசாயனங்கள் தான் உங்கள் வியர்வை மற்றும் சிறுநீரை ஒரு குறிப்பிட்ட வழியில் மணக்கச் செய்கின்றன.
கந்தகக் கலவைகள் மிகவும் எளிதில் ஆவியாகக்கூடியவை, எனவே அவை காற்றில் எளிதில் பரவுகின்றன. அதனால்தான் அவை கழிப்பறையிலிருந்து எளிதில் வாசனை வீசுகின்றன. இந்த வாசனை பொதுவாக ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்.
அனைவரும் இந்த வாசனையை வெளியிடுவதில்லை, இருப்பினும் இதைப் பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு கண்டுபிடிப்புகளுடன் வந்துகொண்டே இருக்கின்றன. 1950-களில், 50% க்கும் குறைவானவர்களே அஸ்பாரகஸ் சிறுநீர் வாசனையை வெளியிடுவதாக ஆராய்ச்சி கூறியது, அதேசமயம் 2010-இல், 90% க்கும் அதிகமானோர் அதைச் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே இது தெளிவாக இல்லை. மேலும் அனைவரும் அந்த துர்நாற்றத்தை உணர முடிவதில்லை: ஒருவரின் அஸ்பாரகஸ் சிறுநீர் வாசனையை நுகரும் திறன் மரபியல் காரணமாகவும் இருக்கலாம்.
இருப்பினும், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பொறுத்தவரை, அவற்றை அதிகமாகச் சாப்பிடுவது மிகவும் கவர்ச்சிகரமான வாசனையை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியாவில் 2017-இல் நடந்த ஒரு ஆய்வு, அதிகப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது, ஆண்களின் உடலில், பழங்கள், மலர்கள் மற்றும் இனிமையான வாசனை இருப்பதுடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்தது.
அந்த ஆய்வில், சுவாரஸ்யமாக, மக்கள் முகங்களை மதிப்பிட வேண்டியிருக்கும் போது, கரோட்டினாய்டு (கேரட், பூசணி, தக்காளி மற்றும் பப்பாளி போன்றவற்றில் உள்ள ஒரு மூலக்கூறு) நிறைந்த சற்று மஞ்சள் நிறத் தோல் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதே ஆய்வு, குறைந்த கொழுப்பு, இறைச்சி, முட்டை மற்றும் டோஃபுவை உட்கொண்ட உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கும் மிகவும் இனிமையான வாசனை வீசும் வியர்வை இருந்தது என்றும் கூறுகிறது. அதிக மாவுச்சத்துள்ள உணவுகள் தான் மிகவும் கவர்ச்சியற்ற வாசனையை உருவாக்கின.
இறைச்சி மற்றும் மீன்இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றால் ஒரு தனித்துவமான உடல் வாசனை ஏற்படலாம். ஏனெனில், விலங்கு புரதங்கள் உடலால் அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்புகளாக உடைக்கப்படுகின்றன, பின்னர் அவை வியர்வை வழியாக வெளியேற்றப்படுகின்றன – அங்கு அவை தோல் பாக்டீரியாவுடன் வினைபுரிகின்றன.
எடுத்துக்காட்டாக மீன் மற்றும் பீன்ஸில், மிகவும் கடுமையான வாசனையுள்ள கலவையை கொண்டுள்ள ட்ரைமெதிலமைன் (trimethylamine) நிரம்பியிருப்பதால் உடல் வாசனையை ஏற்படுத்தலாம். ட்ரைமெதிலமைனை மணமற்ற கலவையாக உடலால் மாற்ற முடியாதபோது ஏற்படும் "மீன் வாசனை நோய்க்குறி" எனப்படும் ட்ரைமெதிலமினூரியா என்ற ஒரு ஆரோக்கிய குறைபாடு கூட உள்ளது என்று பீசன் கூறுகிறார். "இது ஒரு கடுமையான உடல் வாசனையை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார், ஆனால் இந்தக் குறைபாடு மிகவும் அரிதானது. எடுத்துக்காட்டாக, 2025 ஆம் ஆண்டு 10 மாத குழந்தை வாள்மீன் உட்பட மீன்களை சாப்பிட்ட பிறகு ட்ரைமெதிலமினூரியா ஏற்பட்டு, அழுகிய மீன் போல மணக்கத் தொடங்கியது என்று விவரிக்கிறது. இந்தக் குறைபாடு தற்காலிகமானது, கவனமாகச் சமாளிப்பதன் மூலம் அறிகுறிகள் மீண்டும் ஏற்படாமல் அவர் இறுதியில் மீன் சாப்பிட முடிந்தது.
Getty Images இறைச்சி இல்லாத உணவைப் பின்பற்றும் மக்கள் பெரும்பாலும் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள்.
இறைச்சி நம்மை மிகவும் கவர்ச்சியாக ஆக்குகிறதா இல்லையா என்பது ஹவ்லிசெக்கின் குழுவால் 2006 ஆம் ஆண்டில் வயது வந்த ஆண்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளலாம் விஞ்ஞானிகள் 30 ஆண்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களில் ஒரு சிலர் இரண்டு வாரங்களுக்கு இறைச்சி உணவைச் சாப்பிட்டனர் அல்லது இறைச்சி இல்லாத உணவைச் சாப்பிட்டனர். இனிமை, கவர்ச்சி, ஆளுமை மற்றும் செறிவு ஆகியவற்றிற்காகப் பெண்கள் அவர்களின் வாசனையை மதிப்பிட்டனர். இறைச்சி இல்லாத உணவைப் பின்பற்றிய ஆண்களின் வாசனை சராசரியாக அதிக கவர்ச்சியாகவும், இனிமையாகவும் மற்றும் குறைவாக தாக்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது.
"இறைச்சி சாப்பிட்டவர்கள், இறைச்சி சாப்பிடாதவர்களை விடச் சற்று மோசமாக மணந்தது எங்களுக்கு ஆச்சரியமளித்தது," என்கிறார் ஹவ்லிசெக்.
பரிணாம வளர்ச்சியில் இறைச்சி மனித உணவின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுவதால், அவர் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், இன்றைய சிக்கலான, தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில் பொதுவாக இருப்பது போல், எந்த ஆரம்பகால மனிதரும் இவ்வளவு இறைச்சியைச் சாப்பிடவில்லை. "நம்முடைய பரிணாம வளர்ச்சியின் போது தினமும் இறைச்சி சாப்பிடுவது என்பது பொதுவானதல்ல," என்று ஹவ்லிசெக் கூறுகிறார்.
ஆல்கஹால் மற்றும் காபிஆல்கஹால் – குறிப்பாக அதிக அளவில் மற்றும் வழக்கமான இடைவெளியில் உட்கொண்டால் – இரைப்பைக் குடல் பாதை மற்றும் வியர்வை சுரப்பிகள் இரண்டிலிருந்தும் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பெக்தாசே கூறுகிறார்.
உங்கள் உடல் ஆல்கஹாலை கல்லீரலில் உடைப்பதன் மூலம் செயலாக்கும்போது, அது அசெட்டால்டிஹைடு (acetaldehyde) எனப்படும் மக்கிய மதுவைப் போன்ற வாசனையை உடைய ஒரு நச்சுத்தன்மை மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய கலவையை வெளியிடுகிறது. (மக்கள் எவ்வளவு அதிகமாகக் குடித்தார்கள் என்பதைப் பொறுத்து 60 முதல் 85% நேரம் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் வாயின் வாசனையிலிருந்து மட்டுமே குடித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்று ஒரு ஆய்வு காட்டியது.)
மேலும் ஆல்கஹால் உங்களை நீர்ச்சத்து இழக்கச் செய்து உமிழ்நீர் ஓட்டத்தைக் குறைப்பதால், அது உங்கள் வாயில் அதிக பாக்டீரியாக்கள் தங்க அனுமதிக்கிறது. இது துர்நாற்றம் தொடர காரணமாகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு ஆய்வில் 235 பேரில், தினமும் ஆல்கஹால் உட்கொண்டவர்களே அதிகம் வாய் துர்நாற்றம் ஏற்பட்டதாக புகார் கூறினர். மேலும் அவர்களின் சுவாசத்தில் ஆவியாகும் கந்தகக் கலவைகளின் செறிவு அதிகமாக இருந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டின் மற்றொரு ஆய்வு, ஒரு பரிசோதனையின் போது பியர் குடித்த ஆண்களையும், அதற்குப் பதிலாகத் தண்ணீர் குடித்தவர்களையும் ஆய்வு செய்தது. பியர் குடித்தவர்கள் அதிக கவர்ச்சியாக இருந்தார்கள் – ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கவர்ச்சியாக இருந்தது கொசுக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், காபி மற்றும் தேநீரில் காணப்படும் காஃபின், அபோக்ரைன் சுரப்பிகளைத் (apocrine glands) தூண்டுகிறது என்று பீசன் கூறுகிறார். அக்குள் மற்றும் இடுப்புப் பகுதி போன்ற பகுதிகளில் வியர்வையை உற்பத்தி செய்வதற்கு இவை பொறுப்பாகும்.
இந்த அதிகரித்த வியர்வை உற்பத்தி பாக்டீரியாக்கள் செழிக்க மிகவும் சாதகமான சூழலை உருவாக்கலாம், இது வலுவான உடல் வாசனையை ஏற்படுத்தும். மேலும், காஃபின் மூலக்கூறுகள் வியர்வையில் கூடக் காணப்படுகின்றன என்று ஒரு ஆய்வு காட்டியது – ஆனால் காஃபின் உடல் வாசனையைப் பாதிக்கிறதா என்பது குறித்த தரவு எதுவும் இல்லை.
"நாம் பாலூட்டிகள், மற்றும் அனைத்துப் பாலூட்டிகளைப் போலவே, சமூக ஊடாடலில் வாசனை நிச்சயமாக ஒரு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று வாசனை மற்றும் சமூக ஊடாடல்களை ஆய்வு செய்யும் ராபர்ட்ஸ் கூறுகிறார்.
மக்கள் நம்மை எவ்வளவு கவர்ச்சியாகக் கருதுகிறார்கள் என்பதைப் பாதிக்கும் பல காரணிகளில் வாசனை ஒன்றாகும். மக்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள் போன்ற மற்ற சமூகக் குறிப்புகளிலிருந்து வாசனையின் விளைவுகளைப் பிரித்தெடுப்பது மிகவும் சவாலானது, ஏன் சாத்தியமற்றதும்கூட " என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.
ஆனால், இந்த நுட்பமான, புலன்கடந்த மாற்றங்களை மிக நுணுக்கமாக அளவிடும் விஞ்ஞானம் கூட ஒன்றுக்கொன்று முரண்பட்ட கண்டுபிடிப்புகளுடன் வந்துகொண்டே இருக்கிறது.
உதாரணமாக, ஹவ்லிசெக் ஒரு சோதனையைச் செய்தார். அதில் சில பெண்கள் சாதாரணமாகச் சாப்பிட்ட பின்னரும், மற்றவர்கள் 48 மணி நேரம் சாப்பிடாமல் இருந்த பின்னரும், அவர்களின் அக்குள் வியர்வைப் பட்டைகளின் வாசனையை இனிமை, கவர்ச்சி, பெண்மை மற்றும் செறிவு ஆகியவற்றிற்கு ஆண்கள் மதிப்பிட்டனர். குழுக்களிடையே பெரிய வேறுபாடு இல்லை என்றாலும், சாப்பிடாமல் இருந்த பெண்களுக்கு வழக்கம் போல் சாப்பிட்ட பெண்களை விட அதிக கவர்ச்சியான வியர்வை இருந்தது. "இதுவும் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என்று ஹவ்லிசெக் கூறுகிறார்.
ஆனால் தெளிவான முடிவுகளைப் பெற இந்த ஆய்வு மீண்டும் செய்யப்பட வேண்டும். மேலும், உங்கள் வியர்வை நன்றாக மணக்கக்கூடும் என்றாலும், 2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு ஆய்வு, சாப்பிடாமல் இருப்பதால் மக்களின் சுவாசம் மோசமாக மணப்பதாகக் கண்டறிந்தது.
எப்படியிருந்தாலும், அவர்களின் ஆய்வின் முடிவுகளில் இருந்து எழும் தொடர்ச்சியான ஆச்சரியம், உணவு நம் உடல் வாசனை மற்றும் கருத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு ஒரு தெளிவான சூத்திரம் இல்லை என்பதை ராபர்ட்ஸ் மற்றும் ஹவ்லிசெக் போன்ற ஆராய்ச்சியாளர்கள் உணரச் செய்துள்ளது. இதில் நிறைய மாறுபாடு உள்ளது.
"நிறைய நறுமணமுள்ள கலவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நமது உடல் வாசனையை எவ்வாறு பாதிக்கின்றன என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது," என்கிறார் ஹவ்லிசெக்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு