வந்தே மாதர கீதத்தின் தோற்றமே சுவாரஸ்யமான பின்னணியில் நிகழ்ந்ததுதான்! குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வே இதன் தோற்றுவாயாக இருந்தது என்பது ஆச்சரியமான வரலாறு.
அப்போது பெர்ஹாம்பூரில் நியமிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்ட உதவி ஆட்சியரான பங்கிம் சந்திரர் ஒரு பல்லக்கில் தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது பல்லக்கை சுமந்து சென்றவர்கள், அங்கிருந்த கிரிக்கெட் மைதானத்தின் உள் வழியே சென்று சாலையை அடைவார்கள் என்று அவருக்குத் தெரியாது. அதே நேரம், மைதானத்தில் பிரிட்டிஷ் வீரர்கள் கர்னல் டஃபின் தலைமையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தப் பல்லக்கால் விளையாட்டு தடைப்பட்டது. இது ஒரு மோதலுக்குக் காரணமானது.
கோபத்தில் கர்னல் டஃபின் பல்லக்கை நிறுத்தி, பங்கிம் சந்திரரை கீழே இழுத்து, அவரை அடித்து விட்டார். இந்த விரும்பத்தகாத நிகழ்வு, புகழ்பெற்ற சிலருக்கு முன்பு நடந்ததால் பங்கிம் சந்திரர் பெரிதும் அவமானப்பட்டதை உணர்ந்தார். முதல்வர் ராபர்ட் ஹேண்ட், ரெவரெண்ட் பார்லோ, நீதிபதி பென்பிரிட்ஜ், லால்கோலாவின் ராஜா ஜோகிந்திர நாராயண் ராய், துர்காசரண் பட்டாச்சார்யா, பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர் மற்றும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் அங்கே இருந்தனர்.
1873 டிச.16 – மறுநாளே பங்கிம் சந்திரர் கர்னலுக்கு எதிராக முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மாவட்ட நீதிபதி விண்டர் சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்தார். பலரும் அச்சத்தால் அந்த மோதலை மறுத்தனர். ஆனால் முதல்வர் ராபர்ட் ஹேண்ட் மோதலை ஒப்புக் கொண்டார். ராஜா ஜோகிந்திர நாராயண் ராயும் துர்காசரண் பட்டாச்சார்யாவும் பங்கிம் சந்திரரை ஆதரித்தனர். எனினும் நீதிபதி சாட்சியத்தை முரண்படச் செய்தார். இதனால் நீதிமன்றம் அடுத்த விசாரணையை 1874 ஜனவரி 12க்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் உள்ளூர்வாசிகள், ஐரோப்பியர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அதனால் தனி அறையில் விசாரணையைத் தொடர நீதிபதி அழைத்தார். அங்கே வழக்கை வாபஸ் பெறுமாறு நிர்பந்திக்கப் பட்டார் பங்கிம் சந்திரர். ஆனால் அவரோ குறைந்த பட்சம் அனைவர் முன்பும் கர்னல் மன்னிப்பு கோரினால் வாபஸ் பெறுவதாகக் கூறினார். இதன்படி திறந்த நீதிமன்றத்தின் முன் கர்னல் டஃபின் மன்னிப்பு கேட்டார்.
1874 ஜன.15ல் அமிர்தபஜார் பத்ரிகையில் இது செய்தியாக வெளியானது. அதில், “கர்னலும் பங்கிம் சந்திரரும் பரஸ்பரம் அறிந்திராத அன்னியர்கள். கர்னல் அவரை அவமதித்தபோது அவர் யார் என்று கர்னலுக்குத் தெரியாது. பின்னர் பங்கிம் சந்திரரின் நிலைப்பாடு குறித்து அறிந்து கர்னல் டஃபின் தனது வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். உள்ளூர்வாசிகள் மற்றும் ஐரோப்பியர்கள் என சுமார் 1000 பேர் கூடியிருந்த திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.” என்றது செய்தி.
விஷயம் அத்துடன் முடியவில்லை. கர்னல் டஃபின் மன்னிப்புக் கேட்க கைகளைக் கூப்பிய போதெல்லாம், அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் கைதட்டிச் சிரித்து கத்தத் தொடங்கினர். இப்போது கர்னல் தாம் அவமானப்பட்டதாக உணர்ந்தார். அது உடனிருந்த ஐரோப்பியர்களை கோபப்படுத்தியது. பங்கிம் சந்திரரை தீர்த்துக் கட்டும் செயலில் அவர்கள் இறங்கினார்கள். ராஜா ஜோகிந்திர நாராயண் ராய்க்கு இந்த ரகசியத் தகவல் கிடைத்ததும், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் பங்கிம் சந்திரரை அவர் லால்கோலாவுக்கு அழைத்தார்.
மன்னரின் அழைப்பை ஏற்று அவரும் லால்கோலாவுக்குச் சென்றார். அங்கே ஹிந்துக் கோயில்களால் சூழப்பட்ட விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஜகதாத்ரி, துர்கா, காளி – மூன்று வடிவங்களில் தெய்வங்களைப் பார்த்த பிறகு, ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். எனினும் விரக்தி குறையவில்லை. பிரிட்டிஷ் அட்டூழியங்களுக்கு எதிராக வங்காளத்தை இந்தியாவின் பிற பகுதிகளுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து யோசித்தார். அவர் மனத்தில் ஒரு மந்திரம் உருப்பெற்றது.
லால்கோலாவில் ‘மாகி பூர்ணிமா’ (முழு நிலவு) இரவு, பங்கிம் சந்திரர் 13 எழுத்துகள் கொண்ட ‘வந்தே மாதரம்’ சொற்றொடரை உருவாக்கினார். பின்னாளில் அந்த மந்திரம் பூர்வீக மக்களின் ரத்தத்தை உசுப்பேற்றியது. ஆங்கிலேயரின் ரத்தத்தையும் கொதிக்க வைத்தது.
இந்தப் பாடலுடன், ஆனந்தமடம் நாவலின் ஒரு பகுதி முதன்முதலில் 1881ல் வங்கதர்ஷன் பத்திரிகையில் (தொகுதி 7) வெளியிடப்பட்டது. அவரது காவிய நாவலான ஆனந்தமடம் ஏப்ரல் 1882இல் முழுதாக வெளியிடப்பட்டது. இந்த நாவல் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சன்னியாசி கிளர்ச்சியின் போது, பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு எதிரான சுதந்திரப் போராளிகளின் முயற்சிகளை சித்திரித்தது. அதன் பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். நாவலின் கணிசமான பகுதியை மாற்றுமாறு வற்புறுத்தினர். தொல்லையைத் தாங்க முடியாத அவர் 1885-86ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் உருவாக்கிய மந்திரச் சொல்லான ‘வந்தே மாதரம்’, அடுத்த எழுபது ஆண்டுகள் பாரதத்தை ஆண்டது. ஆங்கிலேயரை விருப்ப ஓய்வு பெறச் செய்து நாட்டை விட்டே விரட்டி அடித்தது.
ஆங்கிலேயன் விளையாடிய கிரிக்கெட் மைதானமும் வந்தேமாதர தோற்றமும்! News First Appeared in Dhinasari Tamil