ஈலோன் மஸ்குக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய வெகுமதியை வழங்குவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்
இந்த முன்னறிவிப்பில்லாத திட்டத்தை அங்கீகரித்து 75% பேர் வாக்களித்துள்ளனர். அதோடு, வியாழக் கிழமையன்று நடந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இது பெரும் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளது.
ஏற்கெனவே உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க், பத்து ஆண்டுகளில் மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் சந்தை மதிப்பைக் கடுமையாக உயர்த்த வேண்டும். அவர் அதைச் செய்து காட்டுவதோடு, மேலும் பல்வேறு இலக்குகளை அடைந்தால், அவருக்கு நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அளவிலான புதிய பங்குகள் வெகுமதியாகக் கிடைக்கும்.
இந்தத் தொகை கணிசமான விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது. ஆனால், இது அங்கீகரிக்கப்படாவிட்டால் ஈலோன் மஸ்க் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும் என்பதாலும், அவரை இழக்க முடியாது என்பதாலும், இதற்கு ஒப்புதல் அளித்ததாக டெஸ்லா நிறுவன பங்குதாரர்கள் தரப்பு வாதிட்டது.
ஒரு டிரில்லியன் டாலர் பெற ஈலோன் மஸ்க் என்ன செய்ய வேண்டும்?இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெக்சாஸின் ஆஸ்டினில் சுற்றிலும் மக்கள் தனது பெயரைக் கூக்குரலிட மேடையேறிய மஸ்க் நடனமாடினார்.
அப்போது அவர், "நாம் டெஸ்லாவின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை மட்டும் தொடங்கப் போவதில்லை. ஒரு புதிய புத்தகத்தையே உருவாக்கப் போகிறோம்," என்று கூறினார்.
மேலும், "பிறரின் பங்குதாரர் சந்திப்புகள் உறக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டங்கள். ஆனால் நம்முடையதைப் பாருங்கள். இது மிகவும் அற்புதமானது," என்றும் தெரிவித்தார்.
இந்த வெகுமதியை பெற அடுத்த பத்து ஆண்டுகளில் ஈலோன் மஸ்க்,
மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி ஈலோன் மஸ்க் சம்பளம் பெறமாட்டார்.
வியாழக்கிழமையன்று அவர் தொடக்கத்தில் கூறிய கருத்துகள், ஆப்டிமஸ் ரோபோவின் மீது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மின்சார வாகனங்கள் துறையில் டெஸ்லாவுக்கு மீண்டும் உயிரூட்டுவதில் ஈலோன் மஸ்க் கவனம் செலுத்த வேண்டுமென்று விரும்பும் ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நம்பிக்கையை இந்த ரோபோ தகர்த்தெறிந்தது.
"மஸ்கின் சிந்தனை முறை முக்கியமான ஒன்றைக் காட்டுகிறது. 'புதிய புத்தகம்' குறித்த அவரது பார்வை ஆப்டிமஸுடன் தொடங்குகிறது. கார்கள், ரோபோடாக்ஸி போன்றவற்றைப் பற்றி இன்னும் எதுவும் குறிப்பிடவில்லை" என்று டீப்வாட்டர் அசெட் மேனேஜ்மென்டின் நிர்வாகக் கூட்டாளியான ஆய்வாளர் ஜீன் முன்ஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
Getty Images ஈலோன் மஸ்கின் அரசியல் ஆதரவு டெஸ்லாவுக்குள் அவர் மீதான ஆதரவைப் பிளவுபடுத்தியது
பின்னர் டெஸ்லாவின் முழு தானியங்கி கார் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய மஸ்க், அது கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகக் கூறினார்.
"கார் தன்னைத் தானாகவே ஓட்டிகொள்ளும்போது மக்கள் தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்தும் அல்லது குறுஞ்செய்தி அனுப்பும் அளவுக்குப் போதுமான பாதுகாப்பை இந்தத் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக டெஸ்லா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், மஸ்கின் கூற்றுப்படி, டெஸ்லாவின் இந்த தானியங்கி அம்சம் கொண்ட கார்களில் பயணிக்கும்போது எப்போதும் சாலையில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை இந்தத் தொழில்நுட்பம் நெருங்கி வருகிறது.
சில சந்தர்ப்பங்களில், டெஸ்லா கார்கள் சிவப்பு சிக்னல்களை கடந்து சென்றுள்ளன, அல்லது சாலையின் தவறான பக்கமாகச் சென்றுள்ளன. மேலும், இந்தத் தவறுகளில் சில விபத்துகளையும் ஏற்படுத்தின, மக்கள் சிலரும் இதனால் காயமடைந்தனர். எனவே அமெரிக்க அதிகாரிகள் டெஸ்லாவின் தானியங்கி கார் தொழில்நுட்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈலோன் மஸ்க் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததில் இருந்து கடந்த ஓர் ஆண்டில் அதன் பங்குகளின் விற்பனை குறைந்தது. அவர்களின் நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
வழக்கமாக டெஸ்லா பங்குகளின் மதிப்பு, சந்தை நேரத்திற்குப் பிந்தைய வர்த்தகத்தில் சற்று அதிகமாக இருந்தது. குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களில் 62 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
டெஸ்லா பங்குதாரர் ரோஸ் கெர்பர் மஸ்கின் வெகுமதி திட்டம் பற்றி பிபிசியிடம் பேசியபோது, "வியாபாரத்தில் நீங்கள் காணக்கூடிய நம்ப முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார்.
டெஸ்லாவில் தான் சாதிக்க விரும்புவது குறித்து மஸ்க் தெளிவாகக் கூறியுள்ளார், ஆனால் நிறுவனம் மோசமான நிதி செயல்திறன் போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்வதாக கெர்பர் கவாசாகி முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கெர்பர் கூறினார்.
மனித உருவ ரோபோக்களுக்கு பெரியளவில் தேவை இருக்குமா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார் கெர்பர். தற்போதைய சூழலில், வேமோ போன்ற போட்டியாளர்களிடம் இருந்து ரோபோடாக்ஸி துறையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஸ்கின் ஆளுமை டெஸ்லா பங்குதாரர்களைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாக மாறிவிட்டது எனக் கவலைப்படுவதால், தனது நிறுவனம் சில டெஸ்லா பங்குகளை விற்றதாகவும் கெர்பர் தெரிவித்தார்.
அவரது ஆளுமை துருவமுனைப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார் அவர். "அதாவது சிலர் அவரை மிகவும் விரும்புகிறார்கள், சிலர் அவரைக் கடுமையாக வெறுக்கிறார்கள்" என்று கெர்பர் கூறுகிறார். இந்தச் சூழ்நிலை டெஸ்லாவின் நற்பெயரைப் பாதித்து, பிராண்டின் மதிப்பைக் குறைத்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
"பொது மக்களிடையே தனது கருத்துக்கான மதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற எதார்த்ததில் இருந்து மஸ்க் பெரிதும் விலகியிருப்பதாகத் தெரிகிறது" என்கிறார் அவர்.
டெஸ்லாவில் மஸ்கின் தலைமைத்துவத்தை நீண்டகாலமாக ஆதரிப்பவரான வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டான் ஐவ்ஸ், வெகுமதித் திட்டம் குறித்த வாக்கெடுப்புக்குப் பிறகு, மஸ்கை "டெஸ்லாவின் மிகப்பெரிய சொத்து" என்று அழைத்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்துவதால், அதன் மதிப்பு விரைவில் உயரத் தொடங்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அடுத்த 6 முதல் 9 மாதங்களில், செயற்கை நுண்ணறிவு மீதான வளர்ந்து வரும் கவனத்தின் விளைவாக டெஸ்லாவின் பங்குகள் விலை உயரக்கூடும்.
கொலராடோ பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியரான ஆன் லிப்டன், டெஸ்லா நிர்ணயித்த இலக்குகளை மஸ்க் அடைவாரா என்பதில் தெளிவில்லை எனக் குறிப்பிட்டதோடு, 2018இல் அவர் "அப்போதைய மைல்கற்களை முன்னதாகவே எட்டியதையும்" சுட்டிக் காட்டினார்.
அரசியலில் அவர் வெளிப்படுத்திய ஆதரவு, சில "துருவமுனைப்பை, பிளவுகளை" உருவாக்கியதாக ஆன் லிப்டன் கூறினார். அதேவேளையில் மஸ்கின் வெகுமதித் திட்டம், நிறுவனத்திற்கு வெளியிலான "அவரது செயல்பாடுகள் மீது எவ்விதத் தடைகளையும்" ஏற்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
மஸ்க் ஏற்கெனவே டெஸ்லா பங்குகளில் 13% வைத்திருந்தார். டெஸ்லாவின் சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகரித்தால், அவருக்குப் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு வெகுமதியை வழங்குவதாக பங்குதாரர்கள் அங்கீகரித்து இருந்தனர். மஸ்க் அதைச் செய்தும் காண்பித்தார்.
ஆனால் டெஸ்லா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மஸ்குடன் மிக நெருக்கமாக இருந்தனர் என்ற அடிப்படையில் டெலவேர் நீதிபதி அப்போதைய வெகுமதித் திட்டத்தை ரத்து செய்தார்.
தற்போது, டெஸ்லாவின் அதிகாரபூர்வ தலைமையகம் டெலவேரில் இருந்து டெக்சாஸுக்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில், டெலவேர் உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்ற நீதிபதியின் முடிவை மதிப்பாய்வு செய்து வருகிறது.
இந்தப் புதிய வெகுமதித் திட்டத்தை, உலகின் மிகப்பெரிய தேசிய செல்வ நிதியான நார்வேவின் சாவரின் செல்வ நிதியம், அமெரிக்காவின் மிகப்பெரிய பொது ஓய்வூதிய நிதியான கலிஃபோர்னியா பொது ஊழியர் ஓய்வூதிய அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
இது ஈலோன் மஸ்கை டெஸ்லாவின் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான சில்லறை முதலீட்டாளர்களைச் சார்ந்திருக்க வைத்தது.
டெஸ்லா நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் மஸ்க் மற்றும் அவரது சகோதரர் கிம்பல் இருவருமே வியாழக்கிழமை கூட்டத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய வாரங்களில், டெஸ்லாவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மஸ்கின் புதிய வெகுமதித் திட்டத்திற்காகப் பேசுவதில் உதவினர். இது சில நிறுவன நிர்வாக வல்லுநர்களைக் கோபப்படுத்தியது.
votetesla.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி, டெஸ்லா நிர்வாகக் குழு தலைவர் ராபின் டென்ஹோம் மற்றும் இயக்குநர் கேத்லீன் வில்சன்-தாம்சன் மஸ்கை புகழ்ந்து பேசுவதைக் காட்டியது.
வெகுமதித் திட்டம், மஸ்குக்கு டெஸ்லா மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் என்று ஆர்.பி.சி. ப்ரூவின் டால்பின் நிறுவனத்தைச் சேர்ந்த முதலீட்டு மேலாளரான கேத்ரின் ஹானன் கூறினார். "இது அவர் பல ஆண்டுகளாக விரும்பிய ஒன்று" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மக்கள் மஸ்கை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவர் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். சரியான விதிகள் மற்றும் வெகுமதிகளைக் கட்டமைப்பது, அவருக்கும் டெஸ்லாவின் பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பணியாற்ற உதவும்" என்று அவர் மேலும் கூறினார்.
சுருக்கமாகக் கூறுவதெனில், கேத்ரின் ஹானனின் கூற்றுப்படி, இந்த ஒரு டிரில்லியன் வெகுமதித் திட்டம் மஸ்குக்கு நிறுவனத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை அளித்து, நிறுவனத்தை வளர்ப்பதற்கு அவரை ஊக்குவிக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு