இந்திய கிரிக்கெட் அணி தேர்வு எப்படி நடக்கிறது?- சர்ச்சையும், நிபுணர்களின் விளக்கமும்
BBC Tamil November 08, 2025 04:48 AM
Getty Images

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ புதன்கிழமை (நவம்பர் 5) அறிவித்திருக்கிறது. மொஹம்மது ஷமி மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் இந்தத் தொடரில் இடம்பெறாதது தற்போது விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

இப்போது மட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே இந்திய கிரிக்கெட்டின் வீரர்கள் தேர்வுகள் குறித்து பல கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அனைத்து ஃபார்மட்டிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி பலரும் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஷமி இடம்பெறாதது மேலும் கேள்விகளை எழுப்பியது. அதேசமயம் பேட்டர் சர்ஃபராஸ் கான் பெயர் இந்திய ஏ அணியில் கூட இடம்பெறாதது, அபிமன்யூ ஈஸ்வரன் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படாததும் கூட சிலரால் விமர்சிக்கப்படுகிறது.

எதன் அடிப்படையில் அணித் தேர்வுகள் நடக்கின்றன? அணித் தேர்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் என்னென்ன?

சர்ஃபராஸ், ஈஸ்வரன், சாய் சுதர்ஷன், ஷமி, ஹர்ஷித் ராணா ஆகியோரின் சூழ்நிலைகளை உதாரணங்களாக வைத்து அணித் தேர்வு பற்றி பிரபல வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் பிபிசி தமிழிடம் பேசியிருக்கிறார்கள்.

எண்கள் மட்டுமே முக்கியம் இல்லை:

ஒரு வீரர் ஏன் அணியில் இருக்கிறார், ஏன் இல்லை என்று கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் எண்களை முன்னிலைப் படுத்தியே கேட்கப்படுகின்றன. பொதுவெளியில் ஒரு வீரர் அடித்த ரன்களும், அவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்களுமே முன்வைக்கப்படுகின்றன. அதனால் தான் முதல் தரப் போட்டிகளில் எட்டாயிரம் ரன்கள் குவித்தவரான அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற ஒரு வீரருக்கு இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

ஒரு தருணத்தில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஈஸ்வரன் தேர்வு செய்யப்பாடதது குறித்துக் கேட்டதற்கு, பதிலளித்த தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் "இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு மூன்றாவது ஓப்பனர் தேவையில்லை" என்று கூறினார் .

Getty Images ஆஸ்திரேலியா & இங்கிலாந்து சுற்றுப் பயணங்களில் இடம்பெற்றிருந்த ஈஸ்வரனுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இவர் அணியில் இருந்தும் ஓப்பனர்களாக தொடர்ந்து சீனியர் வீரர்களையே மாற்றி மாற்றி ஆடவைத்தார்கள். இங்கிலாந்தில் நம்பர் 3 வீரரே இல்லாதபோது கூட சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். பின்னர் கருண் நாயருக்குக்கூட வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், ஈஸ்வரன் அந்த வாய்ப்பை பெறவில்லை.

ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் எண்களை விட நிறைய விஷயங்கள் அணித் தேர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன், "எண்களை வைத்து மட்டுமே வீரர்களைத் தேர்வு செய்துவிட முடியாது. ஒரு பேட்டரை எடுக்கிறோம் என்றால் வெறுமனே அவர் எத்தனை ரன் அடித்தார் என்று பார்க்கமாட்டார்கள். அவர் யாருக்கு எதிராக அடித்தார், எங்கே அடித்தார், எந்த சூழ்நிலையில் அடித்தார், அவர் அடித்த ரன்கள் ஆட்டத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதெல்லாம் மிகவும் முக்கியம்" என்றார்.

பி.சி.சி.ஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (முன்பு: தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர்களுள் ஒருவரான ஆர்த்தி சங்கரன், "ஒரு வலைப்பயிற்சி ஒரு வீரர் பற்றி பயிற்சியாளர்களுக்கு நிறைய சொல்லிவிடும். சில சமயங்களில் நெட்களில் விளையாடும்போதே அந்த வீரர் சர்வதேச அரங்கில் விளையாடத் தயாராக இருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். சர்வதேச கிரிக்கெட் கொடுக்கும் சவால்களை அவரால் சமாளிக்க முடியுமா என்று சில நெட் செஷன்கள் அந்த பயிற்சியாளருக்கு சொல்லிவிடும்" என்று கூறினார்.

Getty Images இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் சாய் சுதர்ஷன்

இந்த இடத்தில்தான் ஈஸ்வரன் போன்ற ஒரு வீரர் வாய்ப்பு பெறாததற்கும், சாய் சுதர்ஷன் வாய்ப்பு பெற்றதற்குமான வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். சாய் சுதர்ஷன் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது இந்த விஷயத்தில் அவருக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கிறது.

அவர் ஐ.பி.எல் அரங்கில் சர்வதேச பௌலர்களை நன்கு எதிர்கொண்டிருக்கிறார், பல்லாயிரம் ரசிகர்களுக்கு முன் நெருக்கடியை சமாளித்து சிறப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறார், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திருக்கிறது. ஆனால், ஈஸ்வரன் இப்படி தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார்கள் வல்லுநார்கள்.

கிரிக்கெட் வர்ணனையாளரான நானீ இதுபற்றிப் பேசும்போது, "டொமஸ்டிக் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. தொடர் போட்டிகளின் நடுவே அது சாத்தியப்படுவதுமில்லை. அதனால் டொமஸ்டிக் போட்டியின் தரம் முன்பைப் போல் இல்லை. ஆகவே அங்கு ஒரு வீரர் ஜொலித்தாலும், 'அவரால் மிகப் பெரிய அரங்கில் தாக்குப்பிடிக்க முடியுமா' என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் ஆர்ச்சர், மார்க் வுட் போன்ற உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களையும், குல்தீப், சஹல் போன்ற முன்னணி ஸ்பின்னர்களையும் சாய் சுதர்ஷன் சிறப்பாகக் கையாள்கிறார். அது பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் நிச்சயம் நம்பிக்கை கொடுக்கும்" என்றார்.

Getty Images ஐ.பி.எல் தொடரில் உலகத்தர பௌலர்களை சிறப்பாகக் கையாண்டது சாய் சுதர்ஷனுக்கு சாதகமான அம்சமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்

"தேர்வுக்குழுவில் 5 பேர் இருக்கிறார்களென்றால் அவர்கள் நிறைய உள்ளூர் போட்டிகளை, நிறைய வீரர்களைப் பார்ப்பார்கள். ஆனால், பயிற்சியாளராலோ, கேப்டனாலோ அப்படிப் பார்க்க முடியாது. அதனால், அவர்கள் தாங்கள் பார்த்த, தங்களுக்குப் பழகிய வீரரை பிராதானப்படுத்துவார்கள்" என்று கூறிய டபிள்யூ.வி.ராமன், ஈஸ்வரன் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று கூறினார். யார் என்ன பார்க்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

"தேர்வாளர்கள் ரஞ்சிப் போட்டியைப் பார்த்து அவரை ஸ்குவாடில் எடுத்துவிட்டார்கள். ஆனால், அணியின் பயிற்சியாளருக்கு அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்" என்கிறார் அவர்.

அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் முக்கியமான தருணத்தில், நெருக்கடியான சூழ்நிலைகளை நன்கு சமாளித்து விளையாடுபவர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் தமிழ்நாடு முன்னாள் கிரிக்கெட்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு விளையாடியவருமான கே.பி.அருண் கார்த்திக்.

ஆரம்ப காலம் முதலே அந்த பெரிய போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் தினேஷ் கார்த்திக்.

Getty Images தேர்வாளர்கள் ஒரு வீரரிடம் பார்ப்பதும், பயிற்சியாளர் & கேப்டன் பார்ப்பதும் வேறு வேறாக இருக்கிறதா?

"2003-04 ரஞ்சி சீசனின் நாக் அவுட் சுற்றில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருப்பார். அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடிவிட்டு வந்து அரையிறுதி, இறுதி என இரண்டு போட்டிகளிலுமே சதமடித்திருப்பார். அது அவருக்கு இந்திய அணிக்கான கதவுகளைத் திறந்தது. அப்படி மிக முக்கியமான போட்டியில் சிறப்பாக செயல்படும்போது நிச்சயம் எந்த வீரருமே கவனிக்கப்படுவார்" என்றார் அருண் கார்த்திக்.

அவர் சொன்ன 2003-04 சீசனில் மொத்தமாக 11 இன்னிங்ஸ்களில் தினேஷ் கார்த்திக் அடித்தது 438 ரன்கள் ( சராசரி 43.8). அதில் 279 ரன்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் (சராசரி 139.5) வந்தது. முந்தைய 8 இன்னிங்ஸ்களில் அவர் அடித்திருந்தது 159 ரன்கள்.

இதுதான் இந்த நிபுணர்கள் அனைவருமே சொல்லவரும் விஷயம். "நெருக்கடி நிறைந்த அரங்கில் நல்ல செயல்பாட்டைக் காட்டுபவர்களுக்கு அணித் தேர்வு சாதகமாகிறது. ஆனால், ஈஸ்வரனுக்கு இப்படியான சூழலில் தன்னை நிரூபிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். இதை துரதிர்ஷ்டம் என்று மட்டுமே சொல்லமுடியும்" என்கிறார் டபிள்யூ.வி.ராமன்.

வேறு என்ன காரணம் இருக்கலாம்?

ஒரு பயிற்சியாளருக்கோ, கேப்டனுக்கோ நன்கு அறிமுகமானவர்கள் வாய்ப்பு பெறுவது சற்று எளிதாக இருக்கிறது என்பதைத்தான் இந்த விஷயங்கள் உணர்த்துகின்றன. ஆனால், இதுதான் சமீபத்தில் ஹர்ஷித் ராணா விஷயத்தில் பல விவாதங்களைக் கிளப்பியது.

Getty Images கம்பீரின் ஆதரவு இருப்பதால் தான் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்படுகிறார் என்ற விமர்சனம் எழுகிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மொஹம்மது ஷமி புறக்கணிக்கப்பட்டது இதை இன்னும் தீவிரமாக்கியது. அவர் சேர்க்கப்படாததற்கு ஃபிட்னஸ் காரணமாகக் கூறப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஷமியோ, "ரஞ்சிக் கோப்பையில் 4 நாட்கள் ஆடமுடியும் என்றால் ஒருநாள் போட்டிகளிலும் ஆடமுடியும்" என்று கூறியிருந்தார். இதைச் சொல்லிவிட்டு இப்போது மூன்று ரஞ்சி போட்டிகளில் ஷமி 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்க, அந்த கேள்விகள் மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் கூட ஷமி தேர்வு செய்யப்படவில்லை.

முன்னதாக ஆஸ்திரேலிய தொடரில் ஷமி தேர்வு செய்யப்படாதது பற்றியும், ஷமி தான் ஃபிட்டாக இருப்பதாகச் சொன்னது பற்றியும் தேர்வுக் குழு தலைவர் அகர்கரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர், "அவர் என்னிடம் நேரடியாக சொன்னால், நிச்சயம் நான் அவருடன் உரையாடுவேன். எந்த வீரரும் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். நான் அவருடனும் கடந்த சில மாதங்களில் பலமுறை உரையாடியிருக்கிறேன். அவர் ஃபிட்டாக இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா சென்றிருப்பார். ஆனால் அவர் ஃபிட்டாக இல்லை. நம்முடைய டொமஸ்டிக் சீசன் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" எனக் கூறினார்.

Getty Images கம்பீரின் அணித் தேர்வுகள் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன

கம்பீருடன் கே.கே.ஆர் அணியில் ஒன்றாகப் பணியாற்றியதால் தான் ஹர்ஷித் இந்த வாய்ப்பைப் பெறுகிறார் என்கிறார்கள். அதேபோல், சாய் சுதர்சன் அணியில் முன்னுரிமை பெற்றதற்கும், இந்திய கேப்டன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவரோடு ஆடுவது காரணமாக இருக்கலாம் என்கிற மேலோட்டமான விமர்சனங்களை பரவலாக சமூகவலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்த இடத்தில்தான், அணியின் குறிப்பிட்ட தேவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விவாதிக்கவேண்டியிருக்கிறது.

சாய் சுதர்ஷன் தேர்வு குறித்துப் பேசிய அருண் கார்த்திக், "சாய் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றதற்கு அவர் இடது கை பேட்டராக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும். கம்பீர் இடது-வலது கை பேட்டர் காம்பினேஷனை ரொம்பவே விரும்புபவர். அதை நாம் ஐ.பி.எல் தொடரிலும் பார்த்திருக்கிறோம். டெஸ்ட் அணியிலும் அதைத்தொடர அவர் நினைத்திருக்கலாம்" என்றார்.

அதுமட்டுமல்லாமல், இடது கை பேட்டராக இருப்பது வாஷிங்டனுக்கும் சாதகமாக இருக்கிறது என்கிறார் அருண் கார்த்திக். மேலும், சமீபத்திய போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு முன்பு அக்ஷர் பட்டேல் களமிறங்குவதற்கும் அதுதான் காரணம் என்று கம்பீரின் இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் மீதான காதலை சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல் ஹர்ஷித் ராணாவின் 'ஹிட் தி டெக்' (Hit the deck) பந்துவீச்சு அவருக்கு சாதகமான அம்சம் என்று சொல்கிறார் நானீ. "ஹர்ஷித் ராணாவை இந்திய அணி 2027 உலகக் கோப்பைக்காக தயார்படுத்துகிறது. பௌன்ஸ் நிறைந்த ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.

அவரும் அவ்வப்போது தன் பந்துவீச்சில் அதை வெளிப்படுத்துகிறார். அவரிடம் 'நிப்பி பேஸ்' (வேகமாக நகரும் தன்மை) இருக்கிறது. அது பேட்டர்களுக்கு சவால் நிறைந்த விஷயம். கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினால் அவரால் நல்ல செயல்பாட்டைக் கொடுக்க முடியும்" என்கிறார் நானீ.

Getty Images ஹர்ஷித் ராணாவின் 'ஹிட் தி டெக்' (Hit the deck) பந்துவீச்சு அவருக்கு சாதகமான அம்சம் என்று கருதப்படுகிறது

அவர் சொன்னதில் இன்னொரு முக்கியமான அம்சம், உலகக் கோப்பையை நோக்கிய பார்வை. இப்போது இந்திய அணியில் உலகக் கோப்பையை மனதில் வைத்து பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், ரோஹித்துக்குப் பதில் கில் கேப்டனானதுக்கும் அதுதான் காரணம் என்றும் சொல்கிறார் நானீ. அதனால் தான் 2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஹர்ஷித் ராணா போன்ற பௌலருக்கு வாய்ப்புக் கொடுப்படுவது முக்கியம் என்றும் சொல்கிறார்.

இதை டபிள்யூ.வி ராமனுமே ஏற்றுக்கொள்கிறார். இந்திய தேர்வுக் குழுவின் தலைவரான அஜித் அகர்கரே ஒரு முன்னணி பௌலராக இருந்தவர் எனும்போது, ஒரு பௌலர் விஷயத்தில் திறமையைப் பார்க்காமல் அவரும் சம்மதிக்கமாட்டார் என்கிறார் அவர்.

அதுமட்டுமல்லாமல் தொலைநோக்கோடு யோசிக்கும்போது இயல்பாகவே இப்போது இளம் வீரர்கள் பிரதானப்படுத்தப்படுகிறார்கள் என்கிறார்கள். 30 வயது ஈஸ்வரனுக்குப் பதில் 24 வயது சாய் சுதர்ஷன் தேர்வானதற்கும், 36 வயது ஷமிக்குப் பதில் 23 வயது ராணா தேர்வானதற்கும் அது முக்கியக் காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இவற்றையெல்லாம் கடந்து புதியதொரு பார்வையையும் கொடுக்கிறார் அருண் கார்த்திக். ஒரு வீரர் அணிக்குக் கொண்டுவரும் 'கேரக்டர்' முக்கியமான விஷயம் என்கிறார்.

Getty Images நடப்பு ரஞ்சி சீசனின் முதல் 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் ஷமி, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.

"ஒரு வீரர் செயல்பாடுகள் தாண்டி அணிக்குள் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறார் என்பதும் முக்கியம். களத்தில் அவர்கள் அணிக்குக் கொடுக்கும் எனர்ஜி, கேப்டனுடனான தகவல் தொடர்பு, ஆடுகளம், பந்து, டர்ன் (turn) அளவு போன்றவை பற்றி அவர்கள் கொடுக்கும் தகவல்கள் (inputs) ஆகியவையெல்லாம் முக்கியம். இந்த விஷயங்களில் பங்களிக்கக்கூடிய வீரர்களை ஒரு கேப்டனாக எனக்குப் பிடிக்கும்" என்கிறார் நெல்லை ராயல் கிங்ஸ் டி.என்.பி.எல் அணியின் கேப்டனான அருண் கார்த்திக்.

இது காலம் காலமாக நடப்பதுதான்!

எண்களைக் கடந்து மேற்கூறிய விஷயங்களுக்காக வீரர்களைத் தேர்வு செய்வது மிகவும் இயல்பான விஷயம் என்று சொல்லும் வல்லுநர்கள், இதுபோன்ற முடிவுகள் காலம் காலமாகவே நடந்து வருவதுதான் என்கிறார்கள்.

இதுபற்றிப் பேசிய நானீ, "ஒவ்வொரு கேப்டனுக்குமே விருப்பத்துக்குரிய சில வீரர்கள் இருக்கத்தான் செய்வார்கள். உதாரணமாக எம்.எஸ்.தோனி கேதர் ஜாதவை எந்த அளவுக்கு நம்பினார் என்று சொல்லத் தேவையில்லை. அதேபோல், பத்ரிநாத் மீதும் அவர் அளவுகடந்த நம்பிக்கை வைப்பார். எப்போது மோசமான சூழ்நிலை வந்தாலும், அவர் முதலில் அனுப்புவது பத்ரியைத்தான். காரணம், அந்த வீரர்கள் அவருக்குக் கொடுத்த நம்பிக்கை" என்றார்.

தோனியின் நம்பிக்கை பெற்ற வீரர்கள் பற்றி நானீ சொல்ல, தோனி அணிக்குத் தேர்வானதே இப்படியொரு முடிவால்தானே என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான பகவதி பிரசாத். தோனி மீது கங்குலி கொண்டிருந்த நம்பிக்கையால் தானே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்கிறார் அவர்.

Getty Images

தோனியைப் பற்றி கேள்விப்பட்ட கங்குலி, அவருக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கவும், 2004-05 சேலஞ்சர்ஸ் டிராஃபி தொடரில் தன்னுடைய 'இந்தியா சீனியர்' அணிக்கு தேர்வு செய்யவும் அறிவுறுத்தியதாக 'லெவன் காட்ஸ் அண்ட் எ பில்லியன் இந்தியன்ஸ்' (Eleven Gods and a Billion Indians) என்ற புத்தகத்தில் கூறியிருப்பார் போரியா மஜும்தார்.

இது, ஒரு கேப்டன் தான் நம்பிக்கை வைத்த வீரரைப் பிரதானப்படுத்தியதற்கான உதாரணம் என்பது பகவதியின் வாதம்.

இதே கங்குலி 2003 உலகக் கோப்பையில் அனுபவ வீரர் வி.வி.எஸ்.லக்ஷமணுக்குப் பதிலாக தினேஷ் மோங்கியா வேண்டும் என்று அவரைத் தேர்வு செய்திருப்பார். மோங்கியா ஆல்ரவுண்டர் என்பதும், இன்னும் சிறந்த ஃபீல்டர் என்பதும் அப்போது சொல்லப்பட்ட காரணம். இது கங்குலியின் விருப்பம். இதே கங்குலியை ஃபீல்டிங் காரணமாக ஓரம்கட்டி இளைஞர்களை 2007 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு தோனி தேர்வு செய்ததும் நடந்திருக்கிறது. இது தோனியின் விருப்பம்.

2011 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் ரெய்னா, யுசுஃப் பதான் பிரதானப்படுத்தப்பட்டது, 2019 உலகக் கோப்பையில் அம்பதி ராயுடுவுக்குப் பதில் '3டி' பிளேயர் தேவை என்ற காரணத்துக்காக விஜய் ஷங்கர் விளையாடியது, 2017 சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனல் தோல்விக்குப் பிறகு 'ஃபிங்கர்' ஸ்பின்னர்களை விட 'ரிஸ்ட்' ஸ்பின்னர்களே வேண்டுமென்று கூறி அஷ்வின் & ஜடேஜாவுக்குப் பதில் குல்தீப் & சஹலை முன்னிறுத்தியது என டெக்னிக்கல் காரணங்களுக்காக சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கும், சிலர் பிரதானப்படுத்தப்பட்டதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

தொன்றுதொட்டே தலைமை இடத்தில் இருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒருசில வீரர்கள் பிராதனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த விஷயங்கள் உணர்த்துகின்றன.

Getty Images ஆல்ரவுண்டர் என்பதால் 2019 உலகக் கோப்பைக்கு அம்பதி ராயுடுவுக்குப் பதில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டிருந்தார் சர்ஃபராஸ் தவறவிட்டது எங்கே?

வல்லுநர்கள் கூறும் மேற்கூறிய காரணங்கள் ஈஸ்வரன், ஷமி ஆகியோர் இல்லாததை ஒருவகையில் ஏற்றுக்கொள்ள உதவுகிறது. ஆனால், சர்ஃபராஸ் கான்?

இந்தியாவில் நன்கு ஆடியவருக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் ஆடக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு ஒட்டுமொத்தமாகவே தேர்வு செய்யப்படவில்லை. இப்போது அவருக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் கொடுக்கப்படவில்லை. இதையெல்லாம் விட, சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிராக 4 நாள் போட்டியில் ஆடிய இந்திய ஏ அணியில் கூட அவருக்கு இடம் தரப்படாதது அனைவருக்குமே புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பற்றிப் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர், "சில நேரங்களில் நீங்கள் அணிக்கு எது நல்ல முடிவு என்று பார்த்து எடுக்கவேண்டும். சர்ஃபராஸ் முதல் டெஸ்ட்டில் (நியூசிலாந்துக்கு எதிராக) சதமடித்தார் என்று எனக்குத் தெரியும். இந்தத் தருணத்தில் கருண் நாயர் டொமஸ்டிக் போட்டிகளில் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். சில சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். கவுன்ட்டி கிரிக்கெடிலும் (இங்கிலாந்து டொமஸ்டிக் போட்டி) ஆடியிருக்கிறார். விராட் இல்லாத நிலையில், அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். எங்களால் 50 வீரர்களை எடுத்துவிட முடியாது. அதனால் 18 வீரர்களை மட்டும் தேர்வு செய்யும்போது சில வீரர்கள் வாய்ப்பை தவறவிடுவார்கள்" என்று கூறினார்.

Getty Images தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லை பயிற்சியாளரின் ஆதிக்கம்

இப்போது கேள்விகள் அதிகமாக எழுவதன் காரணமே பயிற்சியாளரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகப் பலரும் கருதுவதால்தான்.

இளம் கேப்டன்கள் இருப்பதால் தற்போது கம்பீரின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் நானீ. "வழக்கமாக கேப்டன்களிடம்தான் அதிகார மையம் இருக்கும். தோனி, கோலி, ரோஹித் போன்றவர்கள் பெரிய ஆளுமைகளாக இருந்ததால் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது கில் இளம் கேப்டனாக இருக்கிறார். இப்போதுதான் மெல்ல அதிகாரத்தை அடைந்துகொண்டிருக்கிறார்." என்கிறார் அவர்.

இந்திய கிரிக்கெட்டில் பயிற்சியாளர் மீதான விமர்சனங்களும் புதிதல்ல. கங்குலி - சேப்பல், கோலி - கும்பிளே என பல கேப்டன் - கோச் மோதல்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், அப்படி கேப்டனோடு எந்த பிரச்னையும் ஏற்படாதபோதே கம்பீர் மீது விமர்சனங்கள் அதிகம் வைக்கப்படுவதன் காரணம், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக பலரும் நினைக்கிறார்கள்.

Getty Images கே.கே.ஆர் அணியில் கம்பீரோடு பணியாற்றியிருந்தார் மோர்னே மோர்கெல் இந்த சூழ்நிலையில் வீரர்கள் என்ன செய்வது?

அதிகார மையத்தில் இன்று ஐ.பி.எல் அணிகள் இருக்கின்றன எனும்போது, அதுதான் வீரர்களுக்குமான நுழைவுத் தேர்வாக மாறிக்கொண்டிருக்கிறது எனும்போது, வீரர்கள் அதைப் புரிந்து தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது வல்லுநர்கள் சொல்லும் ஆலோசனை.

இதுபற்றிப் பேசும் நானீ, "சில வீரர்கள் தவறான காலகட்டத்தில் பிறந்துவிடுவார்கள். பத்ரிநாத்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லியிருக்கிறோம். டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஷ்மண் நிறைந்த மிடில் ஆர்டரில் அவருக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான சூழ்நிலைகள் இனியும் வரவே செய்யும். அப்படியிருக்கும்போது வீரர்கள் வேறு திறமைகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். தங்கள் ஆட்டத்தை மாற்றத் தயாராக இருக்கவேண்டும்" என்கிறார்.

மிடில் ஆர்டர் பேட்டராக வந்து பின்னர் ஓப்பனராக மாறிய சேவாக் மற்றும் எந்த இடத்தில் இறக்கினாலும் ஆடும், எந்த வேலை கொடுத்தாலும் செய்யும் கே.எல்.ராகுல் ஆகியோரை அதற்கு உதாரணாமாகச் சொல்கிறார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு ஓப்பனர் இடத்துக்கு நிறைய போட்டிகள் வந்துவிட்டதால், தற்போது தன்னை மிடில் ஆர்டர் பேட்டராக நிறுவ முயற்சி செய்வதையும் குறிப்பிட்டுப் பேசினார் அவர். பல்துறைத் திறமையை (versatility) வளர்த்துக்கொள்வது இனி வீரர்களுக்கு முக்கியம் என்கிறார் நானீ.

இதே கருத்தை ஆமோதிக்கும் பகவதி பிரசாத், பல இடங்களில் விளையாடும் தன்மையோடு, அவர்களின் ஆட்ட முறையிலேயே மாற்றம் கொண்டுவர வீரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்கிறார். "இப்படி ஐ.பி.எல் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனும்போது, ஈஸ்வரன் போன்ற வீரர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்கலாமோ என்ற சிந்தனை எழுவதை தவிர்க்க முடியவில்லை" என்கிறார் பகவதி.

Getty Images தன் கரியரின் பிற்பகுதியில் ஃபினிஷராக சிறப்பாக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்கை ஒரு உதாரணமாகக் கூறும் பகவதி, "தோனி அணியில் இருந்ததால் தினேஷ் கார்த்திக்குக்கு விக்கெட் கீப்பராக அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு அவர் அப்படியே இருந்திடவில்லையே! தன் ஆட்டத்தை மாற்றினார், ஒரு ஹிட்டராக தன்னை மேம்படுத்திக்கொண்டார், கடைசியில் ஒரு ஃபினிஷராக நல்ல தாக்கம் ஏற்படுத்தினாரே" என்கிறார்.

இன்னொரு தமிழ்நாடு கிரிக்கெட் வீரரான விஜய் சங்கர் கூட தற்போது பெரிய மாற்றங்கள் செய்துகொண்டிருப்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார் அவர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதாலேயே இந்திய அணிக்காக உலகக் கோப்பையை விளையாடியவர் விஜய் சங்கர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு 'X Factor' அவசியம் என்பதால், மிஸ்டிரி பௌலராக தற்போது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். வருண் சக்கரவர்த்தியிடம் சில ஆலோசனைகள் பெற்று தன் மிஸ்டிரி ஸ்பின்னை மேம்படுத்தியிருக்கும் அவரை தொடர்ந்து அதில் பயிற்சியெடுக்க சி.எஸ்.கே பயிற்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தங்கள் ஆட்டத்தை மாற்றத் தயாராக இருக்கும்போது, ஈஸ்வரனும் ஏதேனும் புதுமையாக முயற்சி செய்திருக்கலாம் என்கிறார் பகவதி. ஈஸ்வரன் மட்டுமல்ல, ஒவ்வொரு கிரிக்கெட்டருமே மென்பொருள் பொறியாளர்களைப் போல் தங்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்கிறார் அவர்.

Getty Images அபிமன்யூ ஈஸ்வரன் வேறு ஏதேனும் புதுமையாக முயற்சித்திருக்கலாமோ என்ற கேள்வியை வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஜொலித்த எத்தனையோ வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. இன்று உலகக் கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அமோல் மஜும்தார் முதல் தரப் போட்டிகளில் 11167 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

அதேபோல் பங்கஜ் தர்மானி என்ற பஞ்சாப் விக்கெட் கீப்பர் முதல் தரப் போட்டிகளில் 9312 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் ஒருநாள் போட்டி ஒன்றில் மட்டும் ஆடியிருக்கிறாரே தவிர, டெஸ்ட் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1992/93 முதலே முதல் தரப் போட்டிகளில் ஆடியவருக்கு, பார்த்திவ் அறிமுகத்துக்கு முன்பு கூட டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.