இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மேகாலயாவைச் சேர்ந்த 25 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஆகாஷ் குமார் சௌத்ரி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டின் அதிவேக அரைசத உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வெய்ன் ஒயிட் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து ஆகாஷ், கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளார்.
“>
மேகாலயா அணி 576 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது 8வது வீரராகக் களமிறங்கிய ஆகாஷ், வந்த வேகத்திலேயே அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். இதில், லீமர் டாப் என்ற பந்துவீச்சாளரின் ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
டி20 போட்டிகளில் கூடக் காண்பதற்கு அரிதான இந்த அதிரடியால், 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர், மேகாலயா அணி 6 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய உதவினார். இதன் மூலம், ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீரின் பண்டேவ் சிங் 15 பந்துகளில் அடித்த இந்தியச் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.