சௌதிக்கு எஃப்35 விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் - இஸ்ரேலின் ஆதிக்கம் என்ன ஆகும்?
BBC Tamil November 10, 2025 04:48 AM
Win McNamee/Getty Images மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்.

அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.

செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

இது குறித்து இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து 48 விமானங்களை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்-35 ஒப்பந்தம் குறித்து அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

எஃப்-35, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செளதி அரேபியா

ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கான பாதை இப்போதைக்கு தெளிவாக இல்லை, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க அரசு, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலும் அவசியம்.

செளதி எழுத்தாளர் முபாரக் அல்-அத்தியா கூறுகையில், இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு, சட்டப்படி அமெரிக்க அரசு மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்பதை செளதி அரேபியா புரிந்து கொண்டுள்ளது.

அவர் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தை இணங்க வைக்க முடிந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செளதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்கள் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார், ஏனெனில் அவர் செளதி அரேபியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாகக் கருதுகிறார், எனவே அதன் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கீழ் அவசியம் என்றும் அவர் நம்புகிறார்.

செளதி அரேபியாவின் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மறுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரிகளை செளதி அரேபியா நாடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி அரேபியா மீண்டும் மீண்டும் போர் விமானங்களுடன் சேர்த்து, மற்ற வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது பற்றிப் பேசியுள்ளது என்று அல்-அத்தியா விளக்கினார்.

SAUL LOEB/AFP via Getty Images செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப் 35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் கவலை

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கும். இதன் பொருள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ சக்திக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், செளதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் ராணுவ மேலாதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் வகையில் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்படலாம்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறார், ஏனெனில் செளதி தலைமையின் நோக்கங்களை அவர் புரிந்துகொள்கிறார். செளதி அரேபியாவின் இலக்கு அதன் எல்லைகளின் பாதுகாப்பைத் தாண்டி இல்லை என்று டிரம்ப் நம்புகிறார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் சில அண்டை நாடுகளைப் போலல்லாமல், செளதி அரேபியாவுக்கு விரிவாக்க விருப்பங்கள் இல்லை என்பதையும் அதிபர் டிரம்ப் அறிவார் என்று அல்-அத்தியா கூறுகிறார்.

அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் அதன் உறவுகள் இயல்புக்குத் திரும்பவில்லை என்றால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்கலாம்.

ஆனால், செளதி அரேபியாவைப் பொறுத்தவரை, இப்போது அது அரபு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் மற்றும் கடமைகளை மாற்ற விரும்பவில்லை என்றும் முபாரக் அல்-அத்தியா நம்புகிறார்.

இதில் ஒரு முக்கியமான பிரச்னை பாலத்தீனம் ஆகும், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலத்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று செளதி அரேபியா நம்புகிறது. மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இதுவே அடிப்படை நிபந்தனையாகும்.

செளதி அரேபியா எஃப்-35 போர் ஜெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா அல்லது இரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்று அல்-அத்தியா கூறுகிறார். அப்படி நடந்தால், இரான் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி முன்னேறி அதற்கு எதிராக இஸ்ரேலின் மேலாதிக்கம் குறைந்துவிடும்.

இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கவலை எழுந்தது, அப்போது அமெரிக்கா ஆபிரகாம் ஒப்பந்தங்களின் (Abraham Accords) கீழ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எஃப்-35 விமானங்களை விற்கவிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஒப்பந்தம் முன்னேற முடியவில்லை.

அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது, இதில் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளும் அடங்கும். சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள ஆழமான உறவுகள் காரணமாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டது.

செளதி-அமெரிக்கா உறவுகளின் திசை மாறுமா?

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செளதி அரேபியாவுக்கான ஆயுத ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறந்தார்.

இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவும் செளதி அரேபியாவும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விவரிக்கப்பட்டது.

டிரம்பின் செளதி பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளை மாளிகை வழங்கிய தகவலின்படி, அமெரிக்கா செளதி அரேபியாவுடன் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு விரிவான ஒப்பந்தத்தைச் செய்தது. 142 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த விரிவான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் அது அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும்.

எனினும், எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தின் உண்மையான சோதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரங்குகளில் தான் நடக்க உள்ளது.

செளதி இளவரசர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செளதி-அமெரிக்க உறவுகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், அனைத்துக் கோப்புகளும் இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் கருத்து வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக மாறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்வது அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது.

செளதி அரேபியா பற்றி முபாரக் அல்-அத்தியா கூறுகையில், அது எஃப்-35 போர் விமானங்களுடன் சேர்த்து, பிற விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, என்று கூறினார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தில் எஃப்-35 பற்றிய விவாதம் முக்கியமானது, ஆனால் அது உறவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணி அல்ல என்று அவர் கூறுகிறார்.

போர் விமானமா அல்லது பாதுகாப்பு உத்தரவாதமா?

செளதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்க உறுதிபூண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால். எந்தவிதமான தாக்குதல் நடந்தாலும் செளதி அரேபியாவை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதன் கவனம் இருக்கிறது.

அண்மையில், அமெரிக்கா-கத்தார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இதன் கீழ் கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் "அமைதி மற்றும் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்று கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அதிபரின் 'செயலாக்க உத்தரவாக' வெளியிடப்பட்டது, அதாவது அமெரிக்க அதிபர் மாறினால் இதைத் திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.

கத்தாருடனான ஒப்பந்தம் சட்டரீதியாக கட்டாயமாக அமலாக்கக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவையில்லை.

செளதி அரேபியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இப்போது இதுதான்: அதன் பாதுகாப்பை உறுதிபடுத்த, கத்தாரைப் போல அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளுமா?

அல்லது அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதிக்காத வகையில், அமெரிக்காவிடம் ஒரு திடமான சட்டரீதியான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுக்குமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.