விவசாயி வெட்டி படுகொலை... உறவினர்கள் சாலை மறியல், பரபரப்பு !
Dinamaalai November 11, 2025 03:48 PM

 

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 60) இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர் ஜக்கம்மா கோயில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி, சீலையம்பட்டி அருகே உள்ள தனது வயலில் நெல் அறுவடை செய்து கீழப்பூலாந்தபுரம் பகுதியில் குவித்து வைத்திருந்தார். இந்நிலையில், இன்று (நவம்பர் 11) அதிகாலை ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, பால்பாண்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, போடி காவல் கண்காணிப்பாளர் சுனில் மற்றும் சின்னமனூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் மறியலை கைவிட்டனர்.

இந்தச் சம்பவம் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சின்னமனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.