“தாயும் தந்தையும் இல்லாத எனக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்த தம்பதியர், பாசம் காட்டி என்னிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்து விட்டார்கள்” என பிரபல கிராமிய பாடகி மகா கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குசலாக்குடி வீரமுத்து நகரை சேர்ந்த மகா என்ற இளம் பெண், “புதுகை மகா” என்ற பெயரில் கிராமிய பாடல்கள் பாடி வருகிறார். யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் பிரபலமாக உள்ளார். இவரது யூடியூப் சேனலுக்கு மட்டும் ஒன்றரை லட்சம் பாலோவர்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.
தனக்கு உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி - கார்த்திக் பாண்டியன் என்ற தம்பதியினர், “நாங்கள் உன் அக்கா - மாமனார் மாதிரி இருப்போம்” எனக் கூறி மகாவுடன் நெருங்கிய உறவில் பழகியுள்ளனர். அந்த நம்பிக்கையால், அவர்கள் கூறியபடி பலமுறை பண உதவி செய்ததாக மகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகா கூறுகையில், “நான் கிராமிய கச்சேரி நடத்தி வருகிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எனக்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். எனது நிகழ்ச்சிகளை காயத்ரி மற்றும் கார்த்திக் பாண்டியன் ஆடியோ, வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது.
ஒரு நாள் அவர்கள், ‘எங்களுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, உடனே பணம் தேவை’ என்று கூறினர். அவர்களை நம்பி நான் என்னுடைய தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொடுத்து உதவினேன். பின்னர் அவர்கள் மீண்டும் மீண்டும் கடன் கேட்டு வந்ததால், பல நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கடனாகப் பெற்று மொத்தம் ரூ.80 லட்சம் அளவுக்கு பணம் கொடுத்தேன்.

அவர்கள் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்த போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது அவர்கள் ஏற்கனவே இது போன்ற முறையில் பலரையும் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் போது, அவர்கள் சாக்கு காட்டி தள்ளி வந்தனர். இதனால் புதுக்கோட்டை காவல் நிலையத்திலும், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளேன். என்னை நம்ப வைத்து மோசடி செய்த தம்பதியை கைது செய்து, என்னிடம் இருந்து மோசடி செய்த ரூ.80 லட்சம் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும்,” எனக் கூறினார். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் புகாரை விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!