இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்கள் இல்லாத வாழ்க்கை சாத்தியம் என்று சொல்ல முடியாது. Facebook, YouTube, Instagram, WhatsApp போன்றவை நம் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. தகவல் பெறவும், வேலை தேடவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், பொழுதுபோக்காகவும் நாம் இவற்றை பயன்படுத்துகிறோம்.
ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் அது நம்மை மனஅளவில் அடிமைப்படுத்தி, சமூக தொடர்புகள் குறைந்து, தனிமை உணர்வை உண்டாக்கும்.
முதலில், சமூக ஊடகத்தை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். கல்வி, வேலை, அல்லது தகவல் பகிர்வுக்காகவா? அதன்படி தினசரி 30 நிமிடம் அல்லது 1 மணி நேரம் என்ற நேர வரம்பை நிர்ணயிக்கலாம்.
இதையும் படிங்க: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உஷார்.! இனி அலட்சியம் செய்யாதீர்கள்.!
Instagram, YouTube, Facebook போன்ற செயலிகளுக்கு “Time limit” மற்றும் “Reminder” அமைத்து பயன்படுத்தலாம். படிக்கும் நேரம் அல்லது வேலை நேரத்தில் சமூக ஊடகங்களைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்புகள் (Notifications) தொடர்ந்து வரும் போது கவனம் சிதறும். அவற்றை ‘Mute’ செய்து வைத்தால் தேவையற்ற ஈடுபாடு குறையும். முக்கியமில்லாத செயலிகளை நீக்கி விட்டால் கவனச்சிதறலும் குறையும்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாள் முழுவதும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள். இது மன நிம்மதிக்கும் நேர மேலாண்மைக்கும் உதவும்.
சில சமூக ஊடகங்கள் வெறுப்பு, ஆபாசம், வன்முறை போன்ற விஷயங்களைப் பரப்பும் இடங்களாக மாறியுள்ளன. அவற்றில் ஈடுபடாமல், நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை கருத்துக்கள் மன அழுத்தம், பயம், பதட்டம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, நம் கையில் இருக்கும் இந்த மாய உலகை விவேகத்துடன் பயன்படுத்துங்கள். அதில் எல்லை மீறினால் அது நஞ்சாக மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.