டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு, “இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல்” என உறுதிப்படுத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செங்கோட்டை (லால் குய்லா) மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அங்கு பயணிகள் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், டெல்லியின் பிற மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.வெடிப்புச் சம்பவம் தலைநகரின் பாதுகாப்பு அமைப்பை சோதனைக்கு உட்படுத்திய நிலையில், மக்கள் மத்தியில் அச்சத்தையும் அவதானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.