'பல விக்கெட் கீப்பர்களுக்கு இவரை பிடிக்காது' - கில்கிறிஸ்ட் செய்த மாற்றம் என்ன?
BBC Tamil November 14, 2025 03:48 AM
Getty Images

''முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்'' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது.

நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், பாபா இந்திரஜித் என விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்ட இருவரிடம் பேசினோம்.

'வெகுதூரம் பாய்ந்த கீப்பர்'

தான் கிளவுஸ் வாங்க நினைத்தபோது, கில்கிறிஸ்ட் என்ன கிளவுஸ் வைத்திருந்தாரோ அதேபோல வாங்க வேண்டுமென பாபா இந்திரஜித் யோசித்திருக்கிறார்.

ஆடம் கில்கிறிஸ்டை மிகவும் ஸ்டைலிஷான, அதேநேரம் டெக்னிக்கலாக சிறந்த கீப்பர் என்கிறார் அவர்.

"அவர் ஒரு முழுமையான கீப்பர். ஸ்டம்புக்கு நெருக்கமாக இருக்கும் போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசும்போதும் நன்றாகச் செயல்படுவார். சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போதுகூட ஸ்டம்புக்கு பின்னாலேயே நின்று பந்துகளைப் பிடித்திருக்கிறார்.

அதேபோல் பெரியளவு திரும்பும் ஷேன் வார்னேவின் பந்துகளைப் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. அதையும் அவர் நன்றாகக் கையாண்டிருக்கிறார். பந்தைப் பிடிக்க நெடுந்தூரம் அவரால் பறக்கவும் பாயவும் முடியும்" என்றார்.

Getty Images

கில்கிறிஸ்ட்டின் இந்தப் பாயும் திறன், ஆஸ்திரேலிய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங்கையும் பலப்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

இதுபற்றிப் பேசிய அவர், "கில்கிறிஸ்ட்டின் பவர் ஜம்ப் (power jump) அவருக்குப் பெரிய பலம். அதன் மூலம் அவரால் அதிக தூரம் போக முடியும். இது ஒரு வகையில் அந்த அணியின் ஸ்லிப் யூனிட்டையே பலப்படுத்தியது.

பொதுவாகவே கீப்பர் திறமையாகச் செயல்படும்போது அது அந்த ஸ்லிப் யூனிட்டை பலப்படுத்தும். இதனால் அந்த ஸ்லிப் ஃபீல்டர்கள் கொஞ்சம் பின்னால் நிற்கலாம், சற்று இடைவெளி விட்டு விலகி நிற்கலாம். உதாரணமாக முதல் ஸ்லிப்பில் நிற்கும் வீரர் "one and a half slip" (முதல் ஸ்லிப்புக்கும் இரண்டாவது ஸ்லிப்புக்கும் நடுவில்) பொசிஷனில் நிற்கலாம்.

இவ்வாறாக நிற்பது அவர்களுக்கு கேட்ச் பிடிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும். அதனால் ஒட்டுமொத்தமாக அந்த ஸ்லிப் யூனிட் சிறப்பாகச் செயல்படும்" என்றார்.

ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த கீப்பர் மற்றும் சில சிறந்த ஃபீல்டர்கள் இருந்ததால், அவர்களின் ஸ்லிப் யூனிட் எப்போதும் அச்சுறுத்துவதாகவே இருந்தது என்று கூறுகிறார் ஆர்த்தி.

Getty Images ஒரு சிறந்த கீப்பர் இருக்கும்போது ஸ்லிப் யூனிட் மேலும் வலுப்பெறுகிறது என்கிறார் ஆர்த்தி

அதுமட்டுமல்லாமல் கில்கிறிஸ்ட்டின் தினசரி பயிற்சி முறை தனக்குமே உதவிகரமாக இருந்தது என்று அவர் கூறினார்.

"போட்டிகளுக்கு முன்பு ஒரு சிலர் பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடிப்போம். ஆனால், கில்கிறிஸ்ட் அப்படியல்ல. அவர் எளிதாக சில கேட்ச்கள் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார். அவருடைய காலும், கையும் நன்கு நகர வேண்டும், பந்து அவர் கிளவுஸ்களில் நன்கு அமர வேண்டும் என்பதுதான் அவருடைய தேவையாக இருக்கும். இதெல்லாம் சிறிய விஷயங்கள்தான். ஆனால், அதையெல்லாம் தன்னுடைய வழக்கமாக மாற்றியிருந்தார் கில்கிறிஸ்ட்" என்றார் ஆர்த்தி.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சேர்ந்து மொத்தம் 905 ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார் கில்கிறிஸ்ட். இதன் மூலம் அதிக ஆட்டமிழப்புகளுக்குக் காரணமான வீரர்களின் பட்டியலில் மார்க் பவுச்சருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சராசரியாக ஒரு போட்டிக்கு 1.865 ஆட்டமிழப்புகள் செய்திருக்கிறார் அவர்.

பேட்டிங் மூலம் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியவர்

விக்கெட் கீப்பர்களின் ரோலை கில்கிறிஸ்ட் மறுவரையறை செய்ததாகச் சொல்கிறார் இந்திரஜித். "அப்போதெல்லாம் கீப்பர்களின் வேலை கீப்பிங் செய்வது மட்டும்தான். அவர்களிடம் பேட்டிங்கில் அதிகம் எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், கில்கிறிஸ்ட் அதை மாற்றினார்" என்கிறார் அவர்.

"டி20 போட்டிகள் இல்லாத காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளையே அவர் அப்படித்தான் எதிர்கொண்டார். அவருடைய அதிரடியான ஆட்டம் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அவர் ஹெய்டன் போல் கட்டுமஸ்தான் ஆள் கிடையாது. இருந்தாலும் அவரால் எளிதாக பௌண்டரிக்கு வெளியே பந்தை அடிக்க முடிந்தது" என்றார் இந்திரஜித்.

அவரால் பிரத்யேகமாக ஒரு பேட்டராகவும் அணியில் ஆட முடியும், பிரத்யேகமாக கீப்பராகவும் அணியில் ஆட முடியும் என்றும் அவர் கூறினார்.

"ஆஸ்திரேலிய அணி என்றாலே அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயம் அவர்கள் அக்ரஸிவான வீரர்கள் என்பதுதான். ஆனால், அதற்கு மத்தியில் இவரை எல்லோருக்கும் பிடிக்கும். இவரிடம் ஒரு அமைதியான அக்ரஸன் இருக்கும். பேட்டிங்கில் அக்ரஸன் காட்டுவார். ஆனால், அவருடைய குணம் அப்படி இருக்காது" என்றார் இந்திரஜித்.

கீப்பர்கள் தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் பேட்டிங்காலும் பங்களிக்க முடியும் என்று ரொமேஷ் கலுவிதரனா முதலில் தொடங்கி வைத்ததை, கில்கிறிஸ்ட் அனைத்து ஃபார்மட்களுக்கும் எடுத்துச் சென்றார் என்கிறார் ஆர்த்தி.

மேலும், "பொதுவாக கீப்பர்கள் கட் மற்றும் ஸ்வீப் ஷாட்களை நன்றாக அடிப்பார்கள் என்பார்கள். ஆனால், கில்கிறிஸ்ட் தன்னுடைய 'பவர் ஹிட்டிங்' மூலம் அதை மாற்றி அமைத்தார். ஒருநாள் போட்டிகளை அவர் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றார் என்று கண்டிப்பாக சொல்லலாம். நானுமே கூட அவரைப் போல் அதிரடியாக ஆடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், என்னால் அது முடியவில்லை" என்றும் ஆர்த்தி கூறினார்.

Getty Images

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரோலையும் சிறப்பாகச் செய்த ஆல்ரவுண்டர் என்றே கில்கிறிஸ்ட்டை சொல்லலாம் என்றும் ஆர்த்தி சொல்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 9619 ரன்கள் எடுத்திருக்கும் கில்கிறிஸ்ட், 96.94 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவரது ஸ்டிரைக் ரேட் 81.95!

விக்கெட் கீப்பர்களின் பேட்டிங் திறன் பற்றிய பார்வையை கில்கிறிஸ்ட் மாற்றியது பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரவுமே ஒருமுறை பேசியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் இ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோவிடம் பேசியபோது, "என்னிடம் மட்டுமல்ல, அணிகளின் தேர்வாளர்கள் மத்தியிலும் கூட அவர் தாக்கம் ஏற்படுத்தினார். கீப்பர்கள் பேட்டிங்கில் பங்களிக்காவிட்டால் அவர்கள் இடம் கேள்விக்குறி என்ற சூழலை அவர் ஏற்படுத்தினார். அதனால் கீப்பர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற சவாலை அனைவரின் முன்பும் அவர் வைத்தார். பல ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு நிச்சயம் கில்கிறிஸ்ட்டைப் பிடிக்காது. ஏனெனில், அந்த ரோலுக்கு முடிவுரை எழுதியவர் அவர். ஆனால், நான், தோனி போன்றவர்கள் அவர் ஏற்படுத்திய இந்த மாற்றத்துக்கு கடமைப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார் சங்கக்காரா.

Getty Images ஆச்சர்யப்பட வைத்த கில்கிறிஸ்ட்டின் குணம்

"பேட்டிங், கீப்பிங் எல்லாவற்றையும்விட, கில்கிறிஸ்ட் என்றாலே நினைவுக்கு வருவது உலகக் கோப்பை போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும் அவர் வெளியேறியதுதான்" என்கிறார் ஆர்த்தி.

2003 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அரவிந்த் டி சில்வா வீசிய ஒரு பந்தை கில்கிறிஸ்ட் ஸ்வீப் ஆடுவார். அதை இலங்கை கீப்பர் சங்கக்காரா பிடித்துவிட்டு அப்பீல் செய்வார். ஆனால், நடுவர் ரூடி கோர்ட்ஸன் அவுட் கொடுக்கமாட்டார்.

இலங்கை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, கில்கிறிஸ்ட் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்த்தி, "அவர் மிகவும் நேர்மையானவர் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அந்த இடத்தில் தன் மனதுக்கு என்ன தோன்றியதோ அதைச் செய்திருக்கிறார். இதுபோன்ற தருணங்களில் தான் ஒரு நபரின் அடிப்படை குணங்கள் தெரியவரும்" என்றார்.

Getty Images 2003 உலகக் கோப்பை அரையிறுதியில் நடுவர் அவுட் கொடுக்காதபோதும் வெளியேறினார் கில்கிறிஸ்ட்

மேலும், "அப்படியொரு தருணத்தில் யாரும் அவ்வளவு எளிதாக அப்படிச் செய்துவிடமாட்டார்கள். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை உலகின் மிகப் பெரிய அரங்கில் செய்யத் துணிந்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றும் ஆர்த்தி தெரிவித்தார்.

கில்கிறிஸ்ட்டிடம் தனக்குப் பிடித்த இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார் ஆர்த்தி.

"அவர் இயான் ஹீலியின் மிகப் பெரிய இடத்தை ஆஸ்திரேலிய அணியில் நிரப்பினார். அவ்வளவு பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயமில்லை. கில்கிறிஸ்ட் அதை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாகவும் செய்தார். அதுவும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்" என்று அவர் கூறினார்.

Getty Images 2008ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார் கில்கிறிஸ்ட் விமர்சனங்களும் சர்ச்சைகளும்

தன்னுடைய குணத்துக்காக கில்கிறிஸ்ட் கொண்டாடப்பட்டாலும், சில தருணங்களில் அவர்மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அவர் இலங்கைக்கு எதிரான அந்த அரையிறுதியில் வெளியேறியதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு வீரர் அப்படிச் செல்வது என்பது தனிப்பட்ட முடிவாக இருக்கக்கூடாது, அது அணியின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும் என்று முன்னணி வீரர்கள் சிலர் கருதினார்கள். மேலும், இப்படி செய்வதன்மூலம், அது அப்படி வெளியே செல்லாத மற்ற வீரர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்ற தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் அப்போது வாதிட்டார்கள்.

அதேபோல், கில்கிறிஸ்ட் தன்னுடைய சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் பற்றி எழுதியிருந்த கருத்துகளும் கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 'மன்கி-கேட்' (Monkey-Gate) பிரச்னையின் விசாரணைகளின்போது சச்சின் தன்னுடைய அறிக்கைகளை மாற்றியதாக 'ட்ரூ கலர்ஸ்' (True Colours) எனும் தன் சுயசரிதையில் குறிப்பிட்டார் அவர்.

அதுமட்டுமல்லாமல் போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்கச் சென்றபோது சச்சின் அங்கு இல்லை என்று குறிப்பிட்டு அவருடைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மீது கேள்வி எழுப்பியிருந்தார் கில்கிறிஸ்ட்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முத்தையா முரளிதரனின் பந்துவீச்சையும் தன் சுயசரிதையில் விமர்சித்திருந்த கில்கிறிஸ்ட், அவர் மீண்டும் பந்துவீச அனுமதிக்க ஐ.சி.சி விதிகளை மாற்றியதாக அந்த அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தினார்.

இப்படி பெரிய வீரர்களின் மதிப்பைக் கேள்வி கேட்டு கில்கிறிஸ்ட் தன்னுடைய மதிப்பைத்தான் கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போது பேசியிருந்தார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மார்வன் அட்டப்பட்டு.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.