ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி ரவுடி கருக்கா வினோத் சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அடிதடியில் ஈடுப்பட்ட கருக்கா வினோத் அந்த கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதிபதி பாண்டியராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத் ஆளுனர் மாளிகை வழக்கில் தமக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டுவாறு தனது காலணியை கழட்டி நீதிபதியை நோக்கி வீச முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து நீதிபதி, இது போன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொளி மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.