Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டு தூங்கினால்தான் திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால் ஏதேனும் பிரச்னைகள் வருமா... தைலம் என்ன செய்யும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
பொதுவாக இந்தத் தைலங்கள் நல்ல மணம் கொண்டவை, அந்த மணமானது இதமான உணர்வைத் தரும். ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கும், வலிகளைப் போக்கும், நெற்றிப் பகுதியில் தடவுவதன் மூலம் மூக்கின் வழியே உள்ளே போய், நெஞ்சு சளியைப் போக்கும் என்றெல்லாம் காலம் காலமாக நம்பப்படுகிறது.
தைலங்களின் மணம் ஏற்படுத்தும் உணர்வை உளவியலில் 'கண்டிஷனிங்' (conditioning) என்று குறிப்பிடுவோம். பல வீடுகளிலும் பெண்கள் இப்படி தைலத்தைத் தடவிக் கொண்டதும், வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை, ஓய்வெடுக்க நினைக்கிறார் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.
வீட்டு வேலை, வெளி வேலைகளைப் பார்த்துக் களைத்துப் போன பெண்களுக்கும், இப்படி ஒரு தைலத்தைத் தடவிக் கொண்டதும் ' வேலை செய்தது போதும்...ஓய்வெடு' என உளவியல்ரீதியான ஓர் உணர்வு ஏற்படுகிறது.
அந்தத் தருணங்களில் அவர்களுக்கு தலைவலியோ, ஜலதோஷமோ இருக்க வேண்டும் என்றில்லை. தைலத்தைத் தடவிக்கொண்டு படுத்ததுமே அவர்களுக்கு உடல் ரிலாக்ஸ் ஆகி, தலைவலி போவதாக உணர்கிறார்கள்.
பெரும்பாலான பெண்களுக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் ஏற்படுத்தும் தலைவலிகளே பிரதானமானவை. அதை கவனிக்காமல் விடும்போதுதான் வலி அதிகமாகி, அடுத்தகட்டத்துக்குப் போகிறது. லேசான டென்ஷனாக உணரும்போதே இப்படி தைலத்தைத் தடவிக்கொள்வதால் டென்ஷன் விடுபடுவதாக உணர்கிறார்கள்.
இந்தப் பழக்கத்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு இந்தத் தைலங்களும் களிம்புகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மெள்ள இதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?