ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு சிறப்புரையாற்றினார்.
ராஜேந்திர பாலாஜி
அப்போது பேசிய அவர், “பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது என தெரிவித்தார். இன்றைக்கு இருப்பது காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து உழைத்த காங்கிரஸ் கிடையாது.
நேதாஜி இருந்த காங்கிரஸ் கிடையாது. இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக்கொடுக்கிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நாட்டில் என்னமோ நடக்கிறது ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கிடையாது. வீணாப்போன காங்கிரஸ் கட்சியை தி.மு.க தான் தூக்கி பிடித்திக் கொண்டிருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் நிலவும். 220-ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார். ஆலமரத்திற்கு எப்படி வேர் முக்கியமோ அதுபோல அ.தி.மு.க- விற்கு வாக்குச்சாவடி முகவர்கள் முக்கியம்.
ராஜேந்திர பாலாஜி
தி.மு.க தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும் காலம் வந்துவிட்டது. அ.தி.மு.க வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கிச் செல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்குள் பல பிளவுகள் உள்ளன. அந்தக் கூட்டணியில் உள்ள 10 கட்சியும் பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுங்கள் என பல பிரிவினை ஓடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கூட்டணி வலுவாகிக் கொண்டிருக்கிறது.