உத்தரப் பிரதேசம், சோன்பத்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஓப்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கல் குவாரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் குவாரி இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF & SDRF) உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்ற எட்டுத் தொழிலாளர்களையும் மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்துத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்தனர். சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.