இந்தியாவின் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
நெகிழிப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
பழைய சேலைகளைக் கொண்டு துணிப்பைகளைத் தைத்த பெண் தையற்காரர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது.
பத்து மணி நேரத்தில் 9,000 பைகளைத் தைக்க வேண்டும் என இலக்கு வகுக்கப்பட்ட நிலையில், அதற்கும் மேலாகவே அவர்கள் தைத்து வியப்பளித்தனர்.
‘டிஸ்கவர் அனந்தபூர்’ அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொண்டூழியர்களாகக் களமிறங்கிய மாணவர்கள், பழைய சேலைகளை நகரம் முழுவதும் விநியோகம் செய்தனர்.
பின்னர், தைக்கப்பட்ட துணிப்பைகளை எடுத்துச்சென்று சந்தைகளிலும் பழ வணிகர்களிடமும் அவர்கள் விநியோகம் செய்தனர்.
இந்தச் சாதனை முயற்சிக்கு டக்குபதி அறநிறுவனம் ஆதரவளித்தது.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் பழைய சேலைகளிலிருந்து 51,000 துணிப்பைகளைத் தைத்து வழங்கியுள்ளதாக ‘டிஸ்கவர் அனந்தபூர்’ அமைப்பின் நிறுவனர் ஏ.ஜி. அனில் குமார் தெரிவித்தார்.