கடந்த 10-ஆம் தேதி தலைநகர் டில்லியில் செக்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை, தற்கொலைப்படை தாக்குதல் என்று என்ஐஏ அறிவித்துள்ளது. இதற்கு கார் வாங்கிக்கொடுத்த நபரை என்ஐஏ படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த நாசகார சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், கார் ஓட்டிய உமர் நபி, தற்கொலைப்படை பயங்கரவாதியாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் தொடர்புடைய டாக்டர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த டில்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய நபரை என்ஐஏ கைது செய்துள்ளது. காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவனை டில்லியில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், கார் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக உமர் நபிக்கு டில்லியில் இருந்து கார் வாங்கி வந்து கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய உமர் நபிக்கு சொந்தமான மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.