திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது…. வேறொருவருடன் போனில் பேசிய மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!
SeithiSolai Tamil November 19, 2025 09:48 PM

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (24). தொழிலாளியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவுக்கும் (19) இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தக் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது.

பின்னர், இருவரும் ஓரத்தி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில், மதுமிதா அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், அது கணவன் சரணுக்குப் பிடிக்கவில்லை. மனைவி மீது சந்தேகம் அடைந்த சரண், யாருடன் பேசுகிறாய் எனக் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால், கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை சரண் வீட்டுக்குத் திரும்பி வந்தபோதும் மதுமிதா வேறு யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரண், மனைவியைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். மதுமிதாவை கோவிலுக்குச் செல்லலாம் என்று அழைத்த சரண், அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுமிதாவின் கழுத்தை அறுத்தார்.

அதிர்ச்சியடைந்த மதுமிதா கூச்சலிட்டபடி ஓட முயன்றபோதிலும், கொலை வெறியில் இருந்த சரண், அவரது கழுத்தை கொடூரமாக அறுத்து துடிக்க, துடிக்க கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வர, கொலையாளி சரண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஓரத்தி போலீசார், மதுமிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதே பகுதியில் பதுங்கி இருந்த சரணை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.