செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) தாம்பரம் பணிமனை ஜே.இ. (Junior Engineer) ஆகப் பணிபுரிந்து வந்தவர் யுவராஜ். இவர் மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, யுவராஜ், தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியுள்ளார். அந்தக் குறுஞ்செய்தியில், “எனது தற்கொலைக்குக் காரணமே என்னுடைய உயரதிகாரிகள்தான்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் கடந்த ஆகஸ்ட் 12, 2025 முதல் கழுத்து வலி காரணமாகப் பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும், விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் என்பவர் அதை நிராகரித்ததாகவும், பணிக்கு வரக்கூடாது என்று உயரதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏ.இ. கோவிந்தராஜ் மற்றும் மற்றொரு அதிகாரி சொர்ணலதா ஆகிய இருவருமே தனது தற்கொலைக்குக் காரணம் என்று அவர் அந்தக் குறுஞ்செய்தியில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். யுவராஜின் இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரது குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.