நெல்லையில் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கிரேனை ஓட்டிச் சென்ற நபரால், சாலையோரம் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை என் ஜி ஓ காலனி மகிழ்ச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 54). இவர் இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள காய்கறி கடைக்கு சென்று காய்கறி வாங்குவதற்காக சென்று உள்ளார். பின்னர் காய்கறி வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு சாலையோரம் நடந்து வந்திருக்கிறார். அப்போது அதே ரோட்டில் வாலிபர் ஒருவர் கிரேன் ராட்சத வாகனத்தை இயக்கிக்கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
திடீரென கவனக் குறைவால் ரோட்டில் நடந்து சென்ற செல்வி மீது கிரேன் வாகனம் மோதி 15 அடிக்கு மேல் இழுத்துச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி சென்று விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.