Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை
Vikatan November 20, 2025 04:48 AM

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சச்சின் டெண்டுல்கர், ``பல உலகக் கோப்பைகளில் விளையாடிய நான், 2011-ம் ஆண்டு விளையாடிய உலகக் கோப்பைதான் என் இறுதியானது. அந்த போட்டிக்காக நாங்கள் பெங்களூருவில் ஒரு முகாமில் இருந்தபோது, `பாபா தனது புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்' என ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

Sachin Tendulkar - Puttaparthi

அந்த நிமிடம் நான் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போதே, நான் விளையாடப் போகும் உலகக் கோப்பை எங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்தப் புத்தகம் எனக்கு அந்த நம்பிக்கையையும், அந்த உள் வலிமையையும் அளித்தது. அந்தப் புத்தகம் எனது நிலையான தோழனாகவே மாறியது.

அதன் பிறகு 2011-ம் ஆண்டு மும்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடி அந்த கோப்பையை வென்றோம். அப்போது என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். முழு தேசமும் அந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பொன்னான தருணம்.

முழு தேசமும் ஒன்றுகூடி கொண்டாடிய எனது வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை என்று நினைக்கிறேன். அது எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் எங்கள் குருக்களின் ஆசீர்வாதங்களாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பாபாவின் ஆசீர்வாதங்களாலும் மட்டுமே சாத்தியமானது" என்றார்.

Sachin Tendulkar: ``ரோஹித் சிறந்த கேப்டன், விராட் உண்மையான சாம்பியன்" - சச்சினின் புகழாரம்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.