நீதிக்கட்சி எப்படி உங்களுக்கு “தாய் அமைப்பாகும்” முதல்வர் அவர்களே?
நீதிக்கட்சியின் பிரமுகர்கள் மிகுந்த தெய்வபக்தி உள்ளவர்கள். ஆற்காடு இரட்டையர்கள் எனப்படும் ராமசாமி முதலியார் – லட்சுமணசாமி முதலியார் ஆகிய இருவரும் நெற்றியில் திருமண் துலங்க காட்சியளிப்பார்கள். முதலியார்களில் ஒரு பிரிவினரான வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்தவர்கள்.
ஆனால் உங்கள் “திராவிட மாடல்” ஆட்களோ – கோயிலில் திருநீறு இட்டுவிடுடால் உடனே அதை அழித்துக் கொள்பவர்கள்! எப்படி ஜஸ்டிஸ் கட்சி உங்களுக்கு தாய் அமைப்பாகும்?
நீதிக்கட்சியின் தலைவர்களில் பலர் பிட்டி தியாகராஜ செட்டியார், ஆற்காடு ராமசாமி – லட்சுமணசாமி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டி, டாக்டர் நாயர், கோபதி நாராயணசாமி செட்டி (அவர் பெயரில்தான் GN செட்டி ரோடு – தி.நகர்) இப்படிப் பலரும் தங்களுடைய சாதியப் பின்னொட்டை சேர்த்தே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.
ஆனால் உங்கள் “திராவிட மாடல்” ஆட்சியோ பெரியார்தான் சாதிகளை ஒழித்தார் என்கிறீர்கள். அதாவது ஈவேரா நீதிக்கட்சித் தலைவர்களின் பெயரில் சாதிகளை எல்லாம் ஒழித்தார் என்ற பொருளில் பேசுகிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு எப்படித் தாய் அமைப்பு ஆயிற்று? எப்படி உங்கள் ஆட்சி அதன் நீட்சி ஆயிற்று?
1921 ல் அப்போதைய சென்னை ராஜதானியில் நீதிக்கட்சிதான் ஆண்டது. பனகல் ராஜா ராமராயனிங்கர் ப்ரீமியராக இருந்தார். அப்போது முலமைச்சரை ப்ரீமியர் என்பார்கள்.
அப்போது 1921 ல் நீதிக்கட்சி ஆட்சியில் – பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் ஆன இட ஒதுக்கீடு அரசாணை எண் 613 என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே? முதலில் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்த இட ஒதுக்கீடு பிறகு பிற துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. (ஆதாரம்: திமுக உருவானது ஏன்?- மலர்மன்னன் – கிழக்கு பதிப்பகம் பக்கம் 32)
நீங்கள் நீதிக் கட்சியின் நீட்சிதான் திராவிட மாடல் என்கிறீர்களே – உங்கள் ஆட்சியில் “பிராமணர்கள் உள்ளிட்ட” அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டா?
10% EWS (Economically Weaker Sections) க்கு ஆன இட ஒதுக்கீட்டை – அதாவது இட ஒதுக்கீடு மூலம் பலனடையும் சமூகங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் – பொதுப் பிரிவில் இருந்து – பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு – அதை மாநிலத்தில் அமல்படுத்தினீர்களா நீங்கள்?
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதே ஆரிய சதி – பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் – என்று கூச்சல் போடும் “திராவிட மாடல்” எப்படி நீதிக்கட்சியின் நீட்சியாக முடியும்?
தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவான அமைப்பு – அவர்கள் நடத்திய பத்திரிகை “ஜஸ்டிஸ்” என்ற பெயரால் ஜஸ்டிஸ் கட்சி, நீதிக் கட்சி என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
அவர்களுடைய ஒரே நோக்கம் – கோரிக்கை – “கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிராமணர்களுக்கு சமமாக இதர சாதியினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்”- என்பது மட்டுமே?
மற்றபடி பிராமண துவேஷம், பூணூலை வெட்டுவது, குடுமியை அறுப்பது, பகுத்தறிவு என்ற பெயரில் இந்து நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்வது இதை எல்லாம் நீதிக்கட்சி செய்ததாக வரலாறு இல்லையே?
பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்று போராடுவது வேறு – பிராமண துவேஷம் என்பது வேறு!
ஈ.வே.ராமசாமியும், அண்ணாதுரையும் நீதிக் கட்சிக்குள் புகுந்து அதை “திராவிடர் கழகமாக” மாற்றிய பிறகுதானே இத்தனை பிராமண துவேஷமும், நாத்திகப் பிரசாரமும், பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்வதும் தலைதூக்கியது?
உங்கள் “திராவிட மாடல்” எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆகும்? ஈ.வே.ராமசாமி ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழித்தார் என்பது கூட மேலோட்டமாகத் தெரிவதுதான்! அதன் உள்ளேயே கூட அவர் எவன் சாதுவாக இருக்கிறானோ அவனுடைய நம்பிக்கையை கேலி செய்தார் – எவன் உக்ரமாக இருக்கிறானோ அவனிடம் பயந்து பின் வாங்கினார் என்பதுதானே வரலாறு?
கம்பராமாயணம் பெரியபுராணம் இரண்டுமே ஆரியர்களின் பெருமையைப் பறை சாற்றும் நூல்கள். அவை ஆரிய அடிமைகளால் எழுதப்பட்டவை. பகுத்தறிவுக்குப் புறம்பானவை. எனவே கம்பராமாயணம் – பெரிய புராணம் இரண்டையும் எரிப்போம் என்றார் ஈவேரா. அதன்படி கம்பராமாயணம், பெரியபுராணம் எரிப்புப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. “கம்பராமாயணம் எரிக்கப் பட்ட போது பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை.
ஆனால் பெரியபுராணத்தை எரிப்போம் என்றவுடன் மறைமலை அடிகளார் – பெரிய புராணத்தை எரித்தால் உன் குடலை உருவி மாலையாகப் போடுவேன் – என்று சாமியாடினார். உடனே பெரிய புராணம் எரிப்பு கைவிடப்பட்டது!” (ஆதாரம் தமிழ் – திமுக – கம்யூனிஸ்ட் – சிகரம் செந்தில்நாதன் – சிகரம் வெளியீடு)
இப்படி எவன் சாத்வீகமாக இருக்கிறானோ அவனிடம் வாலாட்டுவதுதானே திராவிடமாடல்? நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாருமே ஆழ்ந்த பக்திமான்கள் ஆயிற்றே? இப்போதுள்ள PTR பழநிவேல் தியாகராஜனின் பாட்டனார் சர்.பி.டி.ராஜன் மதுரை மீனாட்சி அம்மனின் பக்தர் ஆயிற்றே? அவர்கள் குடும்பமே மீனாட்சி அம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் ஆயிற்றே?
நீதிக் கட்சித் தலைவர்கள் எவரும் – இஸ்லாமியர் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு – இந்து திருமணத்தில் ஓதப்படும் வேத மந்திரங்களுக்கு தனக்குத் தோன்றிய வகையில் விளக்கம் கூறி அவை எல்லாம் ஆபாசம் என்று சொன்னதில்லையே?
சாதிகளை ஒழிப்போம் என்று புரட்சி செய்வதாக பறை சாற்றிக் கொண்டு – வ.உ.சிதம்பரம் பிள்ளையை – சிதம்பரனார் என்று கூறிவிட்டு – மேம்பாலத்துக்கு மட்டும் ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்றெல்லாம் வசதிக்குத் தகுந்தாற்போல் நீதிக்கட்சித் தலைவர்கள் நடந்து கொள்ளவில்லையே?
தங்கள் பெயரை ஆற்காடு ராமசாமி முதலியார், லட்சுமண சாமி முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டி, டாக்டர் நாயர், நடேச முதலியார்… என்று தங்களின் சாதிப் பெயரை சொல்லிக் கொள்ளத் தயங்கியதே இல்லையே நீதிக்கட்சித் தலைவர்கள்?
அப்படியானால் உங்கள் திராவிடமாடல் எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆக முடியும்?
நீதிக்கட்சி எப்படி திமுக.,வின் தாய் அமைப்பு ஆகும்?! News First Appeared in Dhinasari Tamil