நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்து வருவது, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. குடும்பம், கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது நடந்து செல்லும் பெண்களுக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.
அதன் நீட்சியாக, சென்னை மாதவரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய நபர் ஒருவரைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அந்தப் பெண், மாலையில் மாதவரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அப்பெண்ணின் தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாகப் பேசியுள்ளார்.
இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அவரது கையைத் தட்டிவிட்டு, மாதவரம் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு நின்று கொண்டிருந்த அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்ற அப்பு (வயது 25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மோசஸ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மோசஸ் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.