"AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்" - விஜய் ஆண்டனி
Vikatan November 21, 2025 08:48 AM

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் 2

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, "இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான்.

அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்." என்று பேசியிருக்கிறார்.

AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்

நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, "AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது.

"விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்!" - விஜய் ஆண்டனி

AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.