மனிதர்கள் முத்தமிடுகிறார்கள், குரங்குகள் முத்தமிடுகின்றன, துருவக் கரடிகள் கூட முத்தமிட்டுக் கொள்கின்றன.
இந்நிலையில், இப்போது விஞ்ஞானிகள் முத்தத்தின் பரிணாம வரலாற்றை மீண்டும் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வு, வாயோடு வாய் வைத்து முத்தமிட்டுக் கொள்வது, 21 மில்லியன் (2.1 கோடி) ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும், மனிதர்களுக்கும் பிற பெரிய குரங்கு இனங்களுக்கும் பொதுவான மூதாதையராக இருந்த இனம் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறுகிறது.
இந்த ஆய்வு, நியாண்டர்தால்களும் முத்தமிட்டிருக்கலாம் என்றும், மனிதர்களும் நியாண்டர்தால்களும் ஒருவரையொருவர் முத்தமிட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
விஞ்ஞானிகள் முத்தத்தை ஆய்வு செய்ததற்குக் காரணம், அது ஒரு பரிணாம புதிராக இருப்பது தான்.
அதாவது, உயிர் வாழ்வதற்கோ இனப்பெருக்கத்திற்கோ முத்தமிடுவதால் நேரடி பயன் இல்லாவிட்டாலும், அது பல்வேறு மனித சமூகங்களில் மட்டுமல்லாமல், விலங்கு உலகிலும் பரவலாகக் காணப்படுகிறது.
Getty Images
மற்ற விலங்குகளும் முத்தமிட்டுக் கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்ததன் மூலம், அது எப்போது தோன்றியிருக்கலாம் என்பதை அறிய விஞ்ஞானிகள் ஒரு "பரிணாம குடும்ப மரத்தை" உருவாக்கினர்.
பல்வேறு உயிரினங்களில் ஒரே மாதிரியான நடத்தையை ஒப்பிட வேண்டியிருந்ததால், ஆராய்ச்சியாளர்கள் "முத்தம்" என்பதற்கு மிகவும் துல்லியமான, காதல் உணர்வு இல்லாத ஒரு வரையறையை வழங்க வேண்டியிருந்தது.
பரிணாமம் மற்றும் மனித நடத்தை (Evolution and Human Behaviour) என்ற இதழில் வெளியான ஆய்வில், முத்தம் என்பது எந்தவித ஆவேசமும் இல்லாத, நேரடியாக வாய்க்கும் -வாய்க்குமான தொடர்பு என்றும், அதில் "உதடுகள் அல்லது வாயின் பகுதிகள் சற்று அசைவதுடன், உணவு பரிமாற்றம் இல்லாமல்" நடைபெறும் நடவடிக்கை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
"மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள் போன்ற அனைத்தும் முத்தமிடுகின்றன," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் முனைவர் மாடில்டா பிரிண்டில் விளக்குகிறார்.
அதனால், "இவற்றின் சமீபத்திய பொதுவான மூதாதையரும் முத்தமிட்டிருக்கலாம்" என்று அவர் முடிவு செய்தார்.
" சுமார் 21.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய குரங்குகள் முத்தமிடத் தொடங்கியிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்," என அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வில், ஓநாய்கள், புல்வெளியில் வாழும் அணில் வகைமையைச் சேர்ந்த விலங்குகள் (பிரேரி), துருவக் கரடிகள் மற்றும் அல்பட்ராஸ் பறவைகள் போன்ற விலங்குகளில் முத்தமிடுவதற்கான அறிவியல் வரையறைக்கு பொருந்தக்கூடிய நடத்தைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
மனிதர்கள் முத்தமிட்டுக் கொள்வதற்கான பரிணாம வரலாற்றை புரிந்துகொள்ள, ஆய்வாளர்கள் ப்ரிமேட்ஸ் (மனிதர்கள், குரங்குகள், வாலில் இல்லாத குரங்குகள் போன்ற பெரிய பாலூட்டி வகைகள்) மீது, குறிப்பாக குரங்கினங்கள் (apes- வால் இல்லாத பெரிய பாலூட்டி குரங்கு வகைகள் -மனிதர்களும் இந்த வகை சார்ந்தவர்களே) மீது கவனம் செலுத்தினர்.
அதே ஆய்வு, சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன நமது நெருங்கிய பண்டைய மனித உறவினர்களான நியாண்டர்தால்களும் முத்தமிட்டிருக்கலாம் என்று முடிவு செய்தது.
முன்னொரு ஆராய்ச்சியில், நியாண்டர்தால் டிஎன்ஏவை ஆய்வு செய்தபோது, நவீன மனிதர்களும் நியாண்டர்தால்களும் ஒரே வகையான வாயில் காணப்படும் நுண்ணுயிரியை (உமிழ்நீரில் காணப்படும் ஒரு பாக்டீரியா) பகிர்ந்துகொண்டதாகவும் தெரிந்தது.
"அதாவது, இரண்டு இனங்களும் பிரிந்த பின் கூட, அவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக உமிழ்நீரை பரிமாறிக் கொண்டிருக்க வேண்டும்," என்று முனைவர் பிரிண்டில் விளக்கினார்.
Getty Images
இந்த ஆய்வு முத்தம் எப்போது தோன்றியது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்தாலும், அது ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
ஏற்கெனவே இதுகுறித்து பல கோட்பாடுகள் உள்ளன.
உதாரணத்திற்கு, நமது குரங்கு இன மூதாதையர்களின் பராமரிப்பு பழக்கத்தில் இருந்து (grooming) முத்தம் உருவாகியிருக்கலாம்.
அல்லது, ஒரு துணையின் உடல்நலம், உடலியல் பொருத்தம் போன்றவற்றை நெருக்கமாக புரிந்துகொள்ளும் வழியாகவும் முத்தம் இருந்திருக்கலாம்.
அந்தக் கேள்விக்கு விடை காணும் வாய்ப்பை இது உருவாக்கும் என்று முனைவர் பிரிண்டில் நம்புகிறார்.
"இது நம்முடைய மனிதரல்லாத உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நடத்தை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்" என்று கூறிய அவர்,
"மனிதர்களில் இது காதல் சார்ந்ததாகக் கருதப்படுவதால், அதை ஒரு சிறிய விஷயமாகக் கருதி நிராகரித்து விடாமல், இந்த நடத்தையை நாம் ஆய்வு செய்ய வேண்டும்"என்றும் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு