திருத்தணியைச் சேர்ந்த பக்தர்களின் குழுவினர், கடந்த 13-ஆம் தேதி சபரிமலைக்குச் சென்றுவிட்டு, இன்று காலை பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருடணி நோக்கித் திரும்பி கொண்டிருந்தனர்.
ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் - மின்னூர் பகுதியில், தேநீர் குடிப்பதற்காகச் சாலையோரம் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, அதிவேகமாக வந்த வேறொரு சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில், திருத்தணிப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கங்காதரன் மற்றும் சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஹரி, நரசிம்மன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.