பிகாரை அடுத்து மேற்கு வங்கத்தை குறிவைக்கும் பாஜக - மமதா பானர்ஜி கோட்டையை உடைக்க முடியுமா?
BBC Tamil November 21, 2025 05:48 AM
Getty Images கொல்கத்தாவில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பேரணியில் மமதா பானர்ஜி பங்கேற்றார்

நவம்பர் 14 அன்று பிகார் சட்டமன்றத் தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியானபோது, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.

இதனிடையே இரவு 12:05 மணியளவில், மேற்கு வங்க பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், "அடுத்ததாக மேற்கு வங்கம்" எனப் பதிவிட்டிருந்தது.

பிகார் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளியான பிறகு, பிரதமர் நரேந்திர மோதி கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

அப்போது, "கங்கை நதி பிகாரில் இருந்து வங்கம் வரை பாய்கிறது. வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு பிகார் பாதை அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை அழித்தொழிக்க உங்களுடன் பாஜக இணைந்து வேலை செய்யும் என்று என் சகோதர, சகோதரிகளுக்கு உறுதி கூறுகிறேன்" என்றார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், மோதியின் இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான், பிகார் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மேற்கு வங்கம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

கோவிட் 19 தொற்றின் ஆபத்தான இரண்டாம் கட்டத்திற்கு நடுவே 2021ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கு வங்கத்தில் கடைசியாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை தோற்கடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் அந்தத் தேர்தலில் 219 தொகுதிகளையும் பாஜக 77 தொகுதிகளையும் வென்றன. திரிணாமுல் காங்கிரஸ் கிட்டத்தட்ட 48% வாக்குகளையும் பாஜக 38% வாக்குகளையும் பெற்றன.

அரசியல் ரீதியாக பிகார், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களும் எப்படிப் பார்க்கப்படுகின்றன? பிகாரில், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக இதுவரை வென்றதில்லை.

இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன? அம்மாநிலங்களின் அரசியலை உற்றுநோக்கி வரும் நிபுணர்களின் பார்வை என்ன? இதைப் புரிந்துகொள்ள முயன்றோம்.

Getty Images கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வின் போது மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யாவுடன் பிரதமர் நரேந்திர மோதி (கோப்புப் படம்) இரு கட்சிகளும் கூறுவது என்ன?

பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மேற்கு வங்கம்தான் தங்கள் இலக்கு என பாஜக கூறி வருகிறது.

'பாஜக மேற்கு வங்கத்திலும் வெல்லும்' என சில கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். எனினும், இந்தக் கூற்றை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் நிராகரிக்கிறார்.

அவர் தனது சமூக ஊடக பதிவில், "வங்கத்தின் அரசியல் தலையெழுத்து பாட்னா அல்லது டெல்லியில் எழுதப்படவில்லை. அது பாஜகவின் பிரிவினை அரசியலைத் தொடர்ந்து நிராகரித்து வரும் மேற்கு வங்கத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மமதா பானர்ஜி மீது நம்பிக்கை கொண்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலும் பாஜக, தோல்வி மற்றும் மாநிலத்துடன் பொருந்தாதது என்ற ஒரே மாதிரியான தலையெழுத்தையே பெறும்" எனப் பதிவிட்டுள்ளார்.

எஸ்ஐஆர் குறித்து விவாதம் எழுவது ஏன்?

பிகாரில் தேர்தலுக்கு முன்பாக முழுமையான வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைபெற்றது, அங்கு குறிப்பிடத்தக்க அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியது.

பிகாரில் தோல்வியை ஒப்புக்கொண்ட பின்னரும், காங்கிரஸ் தலைவர்களுள் சிலர் எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினர்.

Getty Images மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி

இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, பிகாருக்கு அடுத்த படியாக மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் நடைபெற்று வருகிறது.

பிகார் போன்று இந்த இரண்டாம் கட்டத்திலும் பல எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், "பிகாரில் எஸ்ஐஆர் ஆடிய விளையாட்டு, மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எடுபடாது. ஏனெனில் இப்போது இந்தத் தேர்தல் சதி வெளியே தெரிந்துவிட்டது. இந்த விளையாட்டை ஒருபோதும் அவர்கள் விளையாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," எனப் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையுடன் இருக்கும் என்றும் பாஜகவின் நோக்கங்களை முறியடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் நடைமுறை என்ஆர்சி-யை (தேசிய குடிமக்கள் பதிவேடு) "கொல்லைப்புறம்" வழியாக நடைமுறைப்படுத்துவதற்கான 'சூழ்ச்சி' என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி விவரித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசியல் பிரிவு ஆசிரியர் சுனெத்ரா சௌதரி பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "பிகார் தேர்தல் முடிவுகளை மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் இருவரும் மிகவும் கவனமாக பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.

"தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு எஸ்ஐஆர்-ஐ காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார் அகிலேஷ் யாதவ். மமதாவும் அதையே செய்வார் என்று சந்தேகிக்கிறேன். மமதா தேர்தல் ஆணையம் மீது இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்பு உண்டு."

சுனெத்ரா கூறுகையில், "மமதா மிகவும் வேகமாக கற்றுக்கொள்ளக் கூடியவர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியைவிட பாஜகவுக்கு எதிராக மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட, வலுவான போட்டியை அவர் ஏற்படுத்துவார் எனக் கருதுகிறேன்" என்றார்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆலோசனை ஆசிரியர் அதிதி ஃபட்னிஸ் பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, எஸ்ஐஆர் நடைமுறை மேற்கு வங்கத்தில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இப்போதே கூறுவது மிகவும் முன்கூட்டியதாக இருக்கும் என்றார். தற்போது நடைபெறும் எஸ்ஐஆர் நடைமுறை டிசம்பர் 4 வரை தொடரும்.

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்த மேலதிக தெளிவான தகவல்கள் இனிமேல்தான் வரும் என்றாலும், பெண் வாக்காளர்களைத் தன் முக்கிய பலமாக மாற்றுவதில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார் என்றே நம்பப்படுகிறது.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து கிடைத்த தரவுகளின்படி, பிகார் தேர்தலில் பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களைவிட அதிகம் வாக்களித்துள்ளனர்.

இந்தியாவில் மிகவும் குறைவாகவே பெண் முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் மமதா பானர்ஜியும் ஒருவர். பெண் வாக்காளர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் அவ்வப்போது பாராட்டப்படுகிறார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் பலன் பெறும் வகையிலான திட்டங்களை அவரது அரசு தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கான நிதியுதவி, கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.

எனினும், அந்த மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால், பெண்கள் மத்தியில் அதேபோன்று வலுவான சூழல் உள்ளதா என்பது குறித்த கேள்வி எழுகிறது.

ANI மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற எஸ்ஐஆர்-க்கு எதிரான பேரணியில் உரையாற்றுகிறார். பிகார், மேற்கு வங்கம் - ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

இரு மாநிலங்களும் அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. பிகார் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்கு வங்கம் வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இந்த எல்லைகள் பல பகுதிகளில் திறந்த நிலையில் உள்ளன, எனவே, வெளிநாட்டவர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் தங்கள் மாநிலங்களுக்குள் நுழைவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இரு மாநிலங்களிலும் தனிநபர் ஆண்டு வருமானம் தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது. மேலும் இரு மாநிலங்களும் பல்வேறு விஷயங்களில் வித்தியாசமானதாக உள்ளன.

நிதி ஆயோக் தரவுகளின்படி, மேற்கு வங்கத்தின் தற்போதைய சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 1,54,000 ரூபாய். ஆனால், அது பிகாரில் ரூ. 60,337 ஆக உள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் இரு மாநிலங்களும் வேறுபடுகின்றன. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, பிகாரில் எஸ்.ஐ.ஆருக்கு பிறகு 7.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின்படி, 7.6 கோடி வாக்களர்கள் உள்ளனர்.

அதிதி ஃபட்னிஸ் இதுகுறித்துப் பேசியபோது, இந்த இரண்டு மாநிலங்களும் முற்றிலும் வெவ்வேறானவை எனத் தான் கருதுவதாகக் கூறினார். "பிகாரில் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது, மேலும் பிராந்திய கூட்டணிக் கட்சிகளுடன் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் அப்படியல்ல" என்று விளக்குகிறார் அவர்.

"மேலும், பிகாரில் நிதிஷ் குமாரின் இருப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் உதவியிருக்கும். ஆனால், மேற்கு வங்கத்தில் போட்டி மிகவும் பிளவுபட்டதாக இருக்கும் என்பதால் அங்கு அது சாத்தியமில்லாமல் இருக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவை சேர்ந்த ஆய்வாளர் சுதிப்தா சென்குப்தா பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "பாஜக பிகாரில் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக மேற்கு வங்கத்தில் போட்டி எளிதாக இருக்கும் என்று அர்த்தமாகிவிடாது. பிகாருடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தின் கள எதார்த்தம் முற்றிலும் வித்தியாசமானது. மேற்கு வங்கத்தில் வலுவான கட்சி ஆட்சியில் உள்ளது" என்றார்.

அதோடு, "சமீப காலமாக மாநில தேர்தல்கள், தலைவர்களை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. இது பாஜகவைவிட திரிணாமுல் காங்கிரஸுக்கு கூடுதல் பலனை தருகிறது. மமதா பானர்ஜியை போன்று பாஜகவில் அத்தகையை தலைமைத்துவம் வாய்ந்த முகம் இல்லை" என்றும் குறிப்பிட்டார்.

"அமைப்புரீதியான பலத்தைப் பொறுத்தவரை, இடதுசாரிக் கட்சிகளிடம் இருந்த வலுவான மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மற்றொருபுறம், எதிர்க்கட்சியாக இருந்தும் பாஜக அதன் வியூகத்தை உறுதியாக வகுக்க முடியவில்லை."

"Fourth Pillar: We the People" எனும் இணையதளத்தின் முதன்மை ஆசிரியராகவும் உள்ள சுதிப்தா சென்குப்தாவிடம், மேற்கு வங்கத்தில் தற்போதைய சூழலைப் பொறுத்து பாஜக எத்தகைய உத்தியைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "மேற்கு வங்கத்தில் இந்துத்துவம் சார்ந்து பெரியளவிலான வாக்கு வங்கி இல்லாத போதும், பாஜகவின் உத்தி இந்துத்துவத்தை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. தற்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய வங்கதேசம்) வரும் அகதிகள் குழுவான மடுவா (Matua) சமூகத்தினர் மீது பாஜக கவனம் செலுத்துகிறது" என்றார்.

"பாஜக சாதியை அடிப்படையாக வைத்து வாதிடுகிறது, அதாவது மாநிலத்தில் உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்கிறது. பாஜக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனக் கூறப்படும் சமூகத்தில் இருந்து ஒருவரை (முதலமைச்சர்) வேட்பாளராக முன்னிறுத்தலாம். ஆனால், அப்படிச் செய்வது எந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் சுதிப்தா சென்குப்தா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.