Hulton Archive/Getty Images பிரிட்டன் உளவு வரலாற்றில் சிட்னி ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன.
ஆண்டு: 1925, நாள்: நவம்பர் 5, இடம்: ரஷ்யா
ரஷ்யாவின் லுப்யான்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 73-ஆம் எண் கொண்ட கைதி அங்கிருந்து அருகில் உள்ள சோகோல்நிக்கி காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சோவியத் ராணுவ உளவு அமைப்பைச் சேர்ந்த (ஓஜிபியூ) மூன்று பேர் அவருடன் சென்றனர். பகோர்ஸ்க் சாலையில் அமைந்துள்ள ஒரு குளம் அருகே கார் நின்றது. காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து செல்லுமாறு அந்த கைதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதில் அசாத்தியமாக எதுவும் இல்லை. இதற்கு முன்னரும் கூட கைதிகள் இது போல நடப்பதற்காக சில நாட்கள் இடைவெளியில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
2004-ஆம் ஆண்டு வார்ஃபேர் ஹிஸ்டரி நெட்வொர்க்கில் வெளியான 'தி மிஸ்டீரியஸ் சிட்னி ரைலி' என்கிற கட்டுரையில் வின்ஸ் ஹாவ்கின்ஸ் பின்வருமாறு எழுதுகிறார் - "கைதி காரிலிருந்து 30-40 அடிகள் நடந்திருக்க மாட்டார். அப்போது ஓஜிபியூ உளவாளியான ஆப்ரஹாம் அபிசாலோவ் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அக்கைதியை பின்னிருந்து சுட்டார். தான் இவ்வாறு கொல்லப்படுவோம் என அவர் அறிந்திருக்கமாட்டார். ஒருவேளை அறிந்திருந்தாலும் அவர் தப்பிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரைக் கொல்வதற்கான உத்தரவை ஸ்டாலினே பிறப்பித்திருந்தார். பிரிட்டன் உளவு வட்டாரங்களில் மிகச்சிறந்த உளவாளியாக கருதப்பட்ட சிட்னி ரைலி, இறுதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்."
இவரை அடிப்படையாக வைத்துதான் பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
Biteback Publishing யுக்ரேனிய யூத குடும்பத்தில் பிறந்தவர்
பிரிட்டன் உளவு வரலாற்றில் ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. இவை 1931-ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வெளியான அவருடைய சுயசரிதை புத்தகமான, "அட்வெஞ்சர்ஸ் ஆப் ஏ பிரிட்டிஷ் மாஸ்டர் ஸ்பை" என்கிற புத்தகத்தின் மூலமாகத்தான் வெளி உலகிற்கு முதலில் அறிமுகமானது.
இந்த சுயசரிதையின் சில பகுதிகள் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஸ்டீபன் க்ரே தனது, "தி நியூ ஸ்பைமாஸ்டர்ஸ்" புத்தகத்தில், "ரைலியிடம் ஒரு சிறந்த உளவாளிக்கான அனைத்து தகுதிகளும் இருந்தன. அவர் பல மொழிகள் பேசுவார், எளிதாக மக்களை ஏமாற்றக்கூடியவர், எந்த இடத்திலும் நுழையக்கூடிய திறமை அவரிடம் இருந்தது. நண்பர்களாகி அவர்களிடம் ரகசியங்களைப் பெறுவது அவருக்கு எளிதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பிரிட்டனின் சிறந்த உளவாளிகளில் அவரும் ஒருவர்." என எழுதுகிறார்.
யுக்ரேனில் உள்ள ஒடேசாவில் ஒரு யூத குடும்பத்தில் 1873-ஆம் ஆண்டு பிறந்தார் ரைலி. 1890-ஆம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தவர், அங்கு ஒரு அயர்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு அவரின் குடும்ப பெயரையும் தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார்.
தன்னையும் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என விவரிக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து வணிகராகவும் பகுதிநேர துப்பறிவாளராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
Tempus பிரிட்டன், ஜப்பானுக்கு உளவு பார்த்தவர்
தகவல்களைச் சேகரித்து அவற்றை விற்பதுதான் அவரின் பணி. காக்கேசியா பகுதியில் உள்ள எண்ணெய்க்கான சாத்தியம் பற்றிய துல்லியமான தகவல்களையும் பிரிட்டன் உளவுப் பிரிவுக்கு வழங்கினார். ரஷ்யா-ஜப்பான் போரின்போது ரஷ்யாவின் பாதுகாப்பு திட்டங்களை திருடி அவற்றை ஜப்பானியர்களிடம் விற்றார்.
ஆண்ட்ரூ குக் தனது 'ஏஸ் ஆஃப் ஸ்பைஸ், தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் சிட்னி ரைலி' புத்தகத்தில், "போர் தகவல்களை வாங்கி விற்பதில் ரைலி முக்கியப் பங்கு வகித்தார். 1917-இல் ரஷ்ய புரட்சிக்கு முன்பாக அங்கு 1915-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் கடைசியாக காணப்பட்டார். 1914-இல் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஜெர்மன் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து ஜெர்மனியின் கடற்படை விரிவாக்கத்தின் முழுமையான ப்ளூபிரிண்டை திருடி அதை பிரிட்டன் உளவுப் பிரிவிடம் விற்றார்" என எழுதியுள்ளார்.
ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து பிரிட்டன் ராணுவத்தில் இணைய முடிவெடுத்தார் ரைலி. அப்போது நியூயார்க்கில் போர் ஒப்பந்தங்கள் தொடர்பாக வேலை செய்து வந்தார்.
அவருடைய சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ குக், "ரைலி வேறு சில நோக்கங்களுக்காக மீண்டும் ரஷ்யாவிற்குள் நுழைய திட்டமிட்டு வந்தார். செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் அதிக அளவிலான விலையுயர்ந்த பொருட்களையும் ஓவியங்களையும் விட்டுவிட்டு வந்திருந்தார். அவற்றை பிரிட்டனுக்கு எடுத்து வரும் முயற்சியில் இருந்தார்." எனத் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவில் உளவுப்பணிபிரிட்டன் ரகசிய உளவு சேவையின் (எஸ்ஐஎஸ்) தலைவரான சார் மேன்ஸ்ஃபீல்ட் கம்மிங்ஸ், 1918-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி இவரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு முன்பாக இவரின் பின்னணியை முழுமையாக விசாரித்திருந்தார்.
நியூயார்கில் உள்ள எஸ்ஐஎஸ் நிலையம் இவர் நம்பகமான நபர் இல்லையென்றும் ரஷ்யாவில் இவருக்கு வழங்கப்பட உள்ள பொறுப்புகளுக்கு உகந்தவர் இல்லையென்றும் தந்தி அனுப்பியிருந்தது.
"நார்மன் துவெய்ட்ர்ஸ் என்கிற எஸ்ஐஎஸ் அதிகாரி, ரைலி ஒரு சிறந்த வணிகர், ஆனால் தேசப்பற்று அல்லது கொள்கை கொண்டவரோ இல்லை. எனவே விசுவாசம் தேவைப்படும் ஒரு வேலைக்கு இவரைத் தேர்வு செய்யக்கூடாது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் கம்மிங்ஸ் இவரின் பரிந்துரைகளைப் புறக்கணித்து ரைலியை ரஷ்யாவில் ஒரு உளவு திட்டத்தில் அனுப்ப முடிவெடுத்தார்." என குக் எழுதியுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள தனது உளவாளிகளுக்கு ரைலியைப் பற்றிய குறிப்பு ஒன்றை கம்மிங்ஸ் அனுப்பியிருந்தார்.
அதில், "அவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருப்பார். கண்கள் பழுப்பு நிறத்திலும் புடைத்துக் கொண்டிருப்பதைப் போலவும் இருக்கும். முகம் கருப்பாகவும் பல வெளிப்படையான கோடுகளைக் கொண்டும் இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ரைலியிடம் உள்ள ஏதோ ஒன்று பெண்களை ஈர்த்துள்ளது. உளவு தகவல்களைச் சேகரிப்பதற்காக அவர்களைப் பயன்படுத்தி வந்தார்.
'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' என்கிற தனது புத்தகத்தில் ராபர்ட் சர்வீஸ், "ரைலியுடன் தொடர்பில் இருந்தவர்களில் ரஷ்ய நடிகையான யெலிசவெடா ஓட்டனும் ஒருவர். ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினிலிருந்து சில 100 யார்டுகள் தொலைவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அதே குடியிருப்பில் வசித்த டக்மாரா கரோசஸ் என்கிற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஜெர்மன் நாட்டு குடிமகளான டக்மாரா 1915-இல், உளவாளி என்கிற சந்தேகத்தில் ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் விசாரிக்கப்பட்டிருந்தார்." என எழுதியுள்ளார்
ராபர்ட் தனது புத்தகத்தில் நீண்ட பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளார். "கூடுதலாக ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா என்கிற பெண்ணும் அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்றும் அவர் நம்பி வந்தார். காங்கிரஸ் ஆஃப் சோவியத்ஸ் அலுவலகத்தில் அவர் தட்டச்சு வேலை செய்பவராக பணியாற்றி வந்தார். அவர் மீது ரைலி ஆர்வம் காட்டியதற்கு ஒரே காரணம் முக்கியமான ஆவணங்களை அணுக முடியும் என்பதுதான். மரியா ஃப்ரீடே என்கிற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்தார். அவரின் சகோதரர் அலெக்ஸாண்டர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். ராணுவ விவகாரங்களுக்கான அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்." என்று அதில் குறிப்பிடுகிறார்.
ஸ்டீபன் கேரி பின்வருமாறு எழுதுகிறார், "ரகசியமாக வாழ்வதிலும் வெவ்வேறு மாறு வேடங்களை அணிவதிலும் அவர் தேர்ந்து விளங்கினார். பெட்ரோகார்டில் அவரை துருக்கிய வணிகரான கொன்ஸ்டன்டின் மசினோ என மக்கள் அறிவார்கள். மாஸ்கோவில் அவர் கிரேக்க வணிகரான கான்ஸ்டன்டின் என அறியப்பட்டார். மற்ற இடங்களில் அவர் ரஷ்ய உளவு அமைப்பின் கிரிமினல் விசாரணை பிரிவின் உறுப்பினரான சிக்மண்ட் ரெலின்ஸ்கி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்."
லெனினை நெருங்கிய ரைலி1918-ஆம் ஆண்டு ஏப்ரலில் மாஸ்கோவிற்கு வந்த பிறகு அங்கிருந்த பிரிட்டன் உளவாளிகளுடன் தொடர்பை தவிர்த்து வந்தார். சோவியத் சாதனைகள் பற்றிய புத்தகத்திற்கான ஆய்வில் இருப்பதாகக் கூறி அவர் கிரெம்ளினுக்கு (ரஷ்ய அதிபர் மாளிகை) சென்றார். அதன் தொடர்ச்சியாக லெனினின் தலைமை பணியாளரான விளாடிமிர் ப்ரூயேவிசை சந்தித்தார்.
இந்த சந்திப்பை பற்றி ராபர்ட் சர்விஸ் தனது 'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"சிட்னி மற்றும் ப்ரூயேவிச் இடையேயான சந்திப்பு எந்த அளவிற்கு வெற்றிகரமானது என்றால் அவருக்கு அரசு வாகனத்துடன் பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் நடைபெற இருந்த மே தின கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மாஸ்கோவில் இருந்த பிரிட்டன் உளவாளிகளான ராபர்ட் லாக்ஹார்ட் மற்றும் ஜார்ஜ் ஹில், தங்களின் சுயசரிதையில் ரைலி சோவியத் அரசுக்கு எதிராக கலகம் செய்ய திட்டமிட்டார் எனக் குறிப்பிடுகின்றனர்.
லெனின் உட்பட மூத்த சோவியத் தலைவர்களை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்ய வேண்டும் என்பதுதான் ரைலியின் திட்டம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் லெனினைக் கொல்ல வேண்டும் என அவர் திட்டமிடவில்லை. ஏனென்றால் லெனின் வெளிநாட்டு சக்திகளால் கொல்லப்பட்டால் அதற்கு சோவியத் மக்களின் எதிர்வினை மிகவும் கொடூரமானதாக இருக்கும் என அவர் நம்பினார்.
ஜார்ஜ் அலெக்ஸாண்டர் ஹில் தனது 'கோ ஸ்பை தி லேண்ட்' புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "ரைலியின் நிஜ திட்டம் என்பது லெனின் உள்ளிட்ட அனைத்து சோவியத் தலைவர்களையும் மாஸ்கோவின் தெருக்களில் பேரணியாக அழைத்து வந்து ரஷ்யர்கள் எவ்வளவு வலுவிழந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான். இது கடினமான பணி. சிட்னியின் கூட்டாளி இது சாத்தியமானது இல்லை எனக் கூறி நிராகரித்துவிட்டார்."
Biteback Publishing தோல்வியில் முடிந்த திட்டம்
ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரைலியும் இன்னொரு பிரிட்டிஷ் ஏஜென்டான ஜார்ஜ் ஹில்லும் லாட்விய பிரிவு தலைவரைச் சந்தித்தனர். செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் சோவியத் தலைவர்கள் மற்றும் கவுன்சில் ஆஃப் பீப்பில்ஸ் கமிஷர்ஸின் கூட்டத்தின்போது கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்பது தான் திட்டம்.
ஆனால் இறுதி நேரத்தில் நடைபெற்ற சில எதிர்பாராத சம்பவங்கள் இந்த திட்டத்தை குலைத்தது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி, ஒரு ராணுவ வீரர், சோவியத் உளவுப் பிரிவின் தலைவரான மொசல் உரிட்ஸ்கியைக் கொன்றார். அதே நாளில் ஃபன்யா கப்லான் என்பவர் மாஸ்கோ தொழிற்சாலைக்கு வெளியாக லெனினை சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் லெனின் காயமடைந்தார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கினார்.
இந்த கிளர்ச்சியைத் திட்டமிட்ட ரைலியின் கூட்டாளிகளும் இந்த ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் புகுந்து சிட்னி ரைலியின் கூட்டாளியான க்ரோமியைக் கொன்றனர். ரைலியின் மற்றுமொரு கூட்டாளியான ராபர்ட் லாக்ஹார்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த மாக்ஸிம் லிட்வினோவின் விடுதலைக்கு கைமாறாக ராபர்ட் விடுவிக்கப்பட்டார். ரைலியின் தூதுவர் யெலிசவெடா ஆடென், மரியா ஃப்ரீடே மற்றும் இன்னொரு காதலியான ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ரைலியின் கைதுரைலியின் மறைவிடமும் ரஷ்ய உளவுப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரிட்டன் உளவாளிகளின் உதவியுடன் அவர் ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்றார். பின்லாந்து மற்றும் ஸ்டாக்ஹோம் வழியாக நவம்பர் 9-ஆம் தேதி லண்டனை அடைந்தார்.
அதன் பிறகு ரைலி அடுத்த சில வருடங்களை வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் கழித்தார். இதற்கிடையே ரஷ்ய நீதிமன்றம் போல்ஷெவிக் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. 1925-இல் அவர் ஒரு கடைசி மிஷனுக்காக ரஷ்யாவிற்கு திரும்பினார்.
சோவியத் ஒன்றியத்தின் ராணுவ மற்றும் தொழில்துறை திறன்களைப் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது.
யூஜீன் நீல்சன் எழுதிய "சிட்னி ரைலி, ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்" என்கிற கட்டுரை ஜெருசலேம் டைம்ஸில் ஆகஸ்ட் 21, 2023 அன்று வெளியானது. "சோவியத் அரசை கவிழ்க்க வேண்டும் என ரைலி வெறியுடன் இருந்தார். இந்தப் பணிக்கு சோவியத் ஒன்றியத்தில் செயல்பட்டு வந்த ரகசிய போல்ஷெவிக் எதிர்ப்பு அமைப்பான ட்ரஸ்ட் தனக்கு உதவும் என அவர் நம்பினார். ஆனால் இது போல்ஷெவிக் அரசின் எதிரிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ரஷ்யாவிற்குள் வரவைப்பதற்கு ரஷ்ய உளவு அமைப்பு வைத்த பொறி. ரைலி அதற்குப் பலியானார்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு வந்த ரைலி கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுப்யான்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல நாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
1925, நவம்பர் 5-ஆம் தேதி மாஸ்கோ அருகே உள்ள காட்டில் சுடப்பட்டார். அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டார் என்றே ரஷ்யா நீண்ட காலமாக தெரிவித்துவந்தது. ஆனால் 2002-இல் சோவியத் ஏஜென்ட் போரிஸ் குட்ஸ், ரைலியின் சரிதையை எழுதியவரான ஆண்ட்ரூ குக்கிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிட்னி ரைலியை விசாரித்து சுட்டுக் கொன்ற குழுவில் தான் ஒரு உறுப்பினராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிட்னி ரைலி மற்றும் ஜேம்ஸ் பாண்ட்
Bradley Smith/CORBIS/Corbis via Getty Images ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார்.
சிட்னி ரைலியின் வாழ்க்கையை வைத்து தான் இயன் ஃப்ளெமிங் ஜேம்ஸ் 'பாண்ட்' என்கிற உளவாளி கதாபாத்திரத்தை உருவாக்கினார் என நம்பப்படுகிறது.
ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். ரைலியுடன் ரஷ்யாவில் பணியாற்றிய ராபர்ட் லாக்ஹார்ட் புகழ்பெற்ற 'ரைலி: ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற புத்தகத்தை எழுதியிருந்தார்.
அவரின் நல்ல தோற்றம், சிறந்த உடைகள் மீதான அவரின் விருப்பம், பெண்கள், கார்கள் மற்றும் மதுபானம் மீதான அவரின் காதல், பல மொழிகள் மற்றும் ஆயுதங்களின் மீதான அவரின் நிபுணத்துவம் மற்றும் எதிரிகள் மீதான ஆக்ரோஷமான அணுகுமுறை போன்ற குணாதிசயங்களை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஃப்ளெமிங் உருவாக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு