ICC T20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு!
Top Tamil News November 26, 2025 05:48 PM

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை 2026க்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். அதில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதியில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் களம் காணும். இந்த தொடரின் முதல் போட்டி பிப். 7ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இறுதி போட்டி மார்ச் 8 ஆம் தேதி நடக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடக்கிறது.

  • குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ளன.
  • குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.
  • குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் பங்கேற்றுள்ளன.
  • குரூப் டி பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பங்கேற்றுள்ளன.

மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பைக்கான விளம்பர தூதுவராக ம டி20 இந்திய அணிக்கான முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் 5 மைதானங்களிலும், இலங்கையில் 3 மைதானங்களிலும் நடைபெறவுள்ளன.

இந்தியாவில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் மும்பையிலும், இலங்கையில் கண்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்திலும் நடக்கின்றன. குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் லீக் போட்டிகள் உட்பட 7 போட்டிகள் நடக்கவுள்ளன. ஆனால், சென்னையில் நடக்கும் லீக் போட்டிகள் எதிலும் இந்திய அணி விளையாடவில்லை. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி மட்டும் சென்னையில் நடக்கிறது. அதில் எந்த அணிகள் விளையாடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக டி20 உலகக்கோப்பைக்கான விளம்பர தூதுவராக தான் நியமிக்கப்பட்டிருப்பதை குறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, '' இந்த கௌரவத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் மற்றும் மரியாதை. கடந்த ஆண்டு நாங்கள் செய்த (இந்திய அணி) மேஜிக்கை எங்களால் மீண்டும் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.'' என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.