முகத்தில் நன்னீர் மீன் (trout) விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கொள்வது எப்படி இருக்கிறது என்று ஒருவரிடம் கேட்பேன் என்று எனது பல ஆண்டு கால பத்திரிகையாளர் வாழ்வில் ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால், இதோ நான் இப்போது கேட்கிறேன்.
தெற்கு மான்செஸ்டரில் உள்ள ஒரு சிறிய அழகியல் கிளினிக்கில், ஒரு பெரிய, கருப்பு மெத்தை நாற்காலியில் அபீ படுத்திருக்கிறார்.
அவரது கன்னத்தில் ஒரு சிறிய ஊசி நுட்பமாகச் செருகப்படும்போது அவர் லேசாக முகம் சுளிக்கிறார்.
29 வயதான அபீ, உண்மையில் தூய நன்னீர் மீன் விந்தணுவை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது முகத்தின் கீழ்ப் பகுதியில், பாலினியூக்ளியோடைடுகள் என்று அழைக்கப்படும் டிஎன்ஏ-வின் சிறிய துண்டுகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் துண்டுகள் நன்னீர் மீன் அல்லது சால்மன் மீன் விந்தணுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவை.
ஏன் மீனின் டிஎன்ஏ பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? நமது டிஎன்ஏ மீன்களின் டிஎன்ஏ-வைப் போலவே உள்ளது என்பது சுவாரஸ்யமான தகவல்.
எனவே, இந்தச் சிறிய மீன் டிஎன்ஏ இழைகளை அபீயின் உடல் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவரது தோல் செல்களும் தூண்டப்பட்டு, அதிக கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் நமது தோலின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டைப் பராமரிக்க இன்றியமையாதவை.
சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளித்து ஆரோக்கியமாகப் பராமரிப்பதும், வடுக்கள் மற்றும் சருமம் சிவந்துபோவதைக் குறைப்பதன் மூலம் - பல ஆண்டுகளாகத் தன்னை வாட்டி வரும் முகப்பரு பிரச்னையைச் சரிசெய்வதுமே அபீயின் நோக்கமாகும்.
"நான் அந்தச் சிக்கலான பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்," என்று அவர் விளக்குகிறார்.
BBC 'தோல் பராமரிப்புக்கான அதிசயப் பொருள்'
பாலினியூக்ளியோடைடுகள் தோல் பராமரிப்புக்கான "அதிசயப் பொருள்" என்று பேசப்படுகிறது, மேலும் பல பிரபலங்கள் தாங்கள் செய்துகொண்ட "சால்மன் மீன் விந்தணு முகச் சிகிச்சைகள்" பற்றி வெளிப்படையாகப் பேசிய பிறகு இது வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சார்லி எக்ஸ்.சி.எக்ஸ் தனது ஒன்பது மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களிடம், "ஃபில்லர்கள் பயன்பாடு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது" என்றுதான் உணருவதாகக் கூறினார், மேலும் தான் பாலினியூக்ளியோடைடுகளுக்கு மாறியுள்ளதாகவும், அவை "வைட்டமின்களைப் போன்றவை" என்றும் விளக்கினார்.
கிம் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோரும் இதன் தீவிர ரசிகர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜிம்மி கிம்மல் லைவ் நிகழ்ச்சியில் தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பற்றிக் கேட்டபோது, ஜெனிஃபர் அனிஸ்டன், "எனக்கு அழகான சால்மன் தோல் இல்லையா?" என்று பதிலளித்தார்.
Getty Images ஆய்வுகள் கூறுவது என்ன?
எனவே, மீன்களிடமிருந்து தொடங்கியிருந்தாலும், பாலினியூக்ளியோடைடுகள் தோல் பராமரிப்பை மாற்றியமைக்கின்றனவா?
அழகியல் நிறுவனமான டெர்மாஃபோகஸ்க்காகப் பணிபுரியும் சுசான் மேன்ஸ்ஃபீல்ட் என்னிடம், "நாம் ஒரு பெஞ்சமின் பட்டன் தருணத்தில் இருக்கிறோம்" என்று கூறுகிறார்.
அது 2008ஆம் ஆண்டு வெளியான 'தி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்' திரைப்படத்தைப் பற்றிய மேற்கோள். அதில் பிராட் பிட் வயது ஆக ஆக இளமையாகும் ஒரு மனிதராக நடித்திருப்பார். அவரது பிந்தைய ஆண்டுகளில் அவரது தோல் ஒரு குழந்தையின் தோல் போல மாறும்.
அத்தகைய விளைவு மிகவும் சாத்தியமற்றது என்பதுடன் சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், தோல் புதுப்பிப்பு பராமரிப்பில் பாலினியூக்ளியோடைடுகள் முன்னோடியாக உள்ளன, என மேன்ஸ்ஃபீல்ட் கூறுகிறார்.
'பாலினியூக்ளியோடைடுகளைச் செலுத்துவது தோலைப் புத்துணர்ச்சியடையச் செய்யலாம். ஆரோக்கியமாக்குவது மட்டுமல்லாமல், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வடுக்களைக் குறைக்கலாம்' என்று ஒரு சிறிய அளவிலான, ஆனால் அதிகரித்து வரும் ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
அதிக விலை"நாம் அழகியல் துறையில் இதைப் பயன்படுத்துவதன் மூலம், உடல் ஏற்கனவே செய்யும் ஒன்றைப் மேம்படுத்துகிறோம். அதனால்தான் இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை," என்று சுசான் மேன்ஸ்ஃபீல்ட் கூறுகிறார்.
ஆனால் அவை மிகவும் விலையுயர்ந்தவை.
பாலினியூக்ளியோடைடு ஊசிகளை செலுத்திக்கொள்ளும் ஒரு அமர்வுக்கு 200 பவுண்டுகள் முதல் 500 பவுண்டுகள் வரை செலவாகலாம் - மேலும் அடுத்து வரும் வாரங்களில் இதுபோன்ற மூன்று சிகிச்சைகளை எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
அதற்குப் பிறகு, தோற்றத்தைப் பராமரிக்க ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும் என்று கிளினிக்குகள் பொதுவாக அறிவுறுத்துகின்றன.
இதற்கிடையில் கிளினிக்கில், அபீயின் சிகிச்சை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
ஸ்கின் ஹெச்டி (Skin HD) என்ற அந்த அழகியல் கிளினிக்கை நடத்தும், செவிலிய நிபுணரான ஹெலினா டங்க், அபீயிடம், "இன்னும் ஒரே ஒரு பகுதிதான் பாக்கி உள்ளது," என்று உறுதியளிக்கிறார்.
கடந்த 18 மாதங்களில் பாலினியூக்ளியோடைடுகளின் புகழ் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
"எனது வாடிக்கையாளர்களில் பாதி பேர் உண்மையிலேயே ஒரு பெரிய வித்தியாசத்தை உணர்கிறார்கள். அவர்களின் தோல் அதிக நீர்ச்சத்துடனும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் உணரப்படுகிறது. மற்ற பாதி பேர் அவ்வளவு பெரிய மாற்றத்தைக் காண்பதில்லை. ஆனால் அவர்களின் தோல் இறுக்கமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதை உணரமுடிகிறது."
அபீ ஏற்கனவே கிளினிக்கில் ஒரு மூன்று கட்டச் சிகிச்சையின் ஒரு பகுதியாகத் தனது கண்களுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஊசிகளைப் போட்டுக் கொண்டுள்ளார். அதன் விளைவுகளால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
அவர் ஏராளமான சிறிய பாலினியூக்ளியோடைடு ஊசிகளை செலுத்திக்கொண்டார். இது ஒரு "மிகவும் வலிமிகுந்த செயல்முறை," ஆனால் அது தனது கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைக் குறைக்க உதவியதாகக் கூறுகிறார்.
Charlotte Bickley சார்லோட் தனது திருமணத்திற்கு முன் பாலினியூக்ளியோடைடுகள் செலுத்தப்பட்ட பிறகு தனது கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார். அபாயங்கள் உள்ளதா?
இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாகக் கருதும் ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், இது இன்னும் புதியதுதான். மேலும் சில வல்லுநர்கள் இந்த விஷயத்தில் மிகைப்படுத்தல் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தோல் மருத்துவர் ஜான் பாக்லியாரோ, ''நியூக்ளியோடைடுகள் நமது உடலில் முக்கிய பங்கு வகிப்பதை, குறிப்பாக அவை நமது டிஎன்ஏவின் அடிப்படை கட்டமைப்புகள் என்பதையும் நாம் தெரிந்திருந்தாலும், சால்மன் டிஎன்ஏ-வை, சிறிய துண்டுகளாக வெட்டி, நமது முகத்தில் செலுத்துவது நமது சொந்த நியூக்ளியோடைடுகளைப் போல நன்றாக வேலை செய்யுமா?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
"நம்மிடம் உறுதியான தரவு இல்லை," என்று அவர் கூறுகிறார்.
"ஒரு மருத்துவ நிபுணர் என்ற வகையில், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்கும் பெரிய, நம்பகமான ஆய்வுகளை, மேலும் சில ஆண்டுகள் பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே, நான் அவற்றை எனது சிகிச்சையில் பயன்படுத்தத் தொடங்குவேன். அதற்குத் தேவையான ஆதாரங்கள் இன்னும் எங்களிடம் இல்லை"
தான் பாலினியூக்ளியோடைடுகளின் உலகில் நுழைந்ததை "சால்மன்-மோசடி" என்று விவரிக்கிறார் சார்லோட் பிக்லி.
நியூயார்க்கைச் சேர்ந்த 31 வயதான இவர் கடந்த ஆண்டு தனது திருமணத்திற்குச் சற்று முன்பு தனது "பொலிவுக்காக" இந்தச் சிகிச்சையைப் பெற்றார்.
ஆனால் சார்லோட்டிற்குச் சிகிச்சைக்குப் பிறகு தோல் தொற்று, வீக்கம் மற்றும் கண்களுக்குக் கீழே முன்பை விட அதிக கருமையான வளையங்கள் ஏற்பட்டன.
"நான் விரும்பியதற்கு முற்றிலும் எதிர்மாறானதைப் பெற்றேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த மருத்துவரை நான் நம்பினேன், ஆனால் அவர் எனக்கு வடுவை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்."
தனது கண்களுக்குக் கீழ் மிகவும் ஆழமாக ஊசி போடப்பட்டதாலேயே, தனக்கு இந்தத் தீங்கு விளைவிக்கும் எதிர்வினை ஏற்பட்டதாக ஷார்லட் நம்புகிறார். சிவத்தல், வீக்கம் மற்றும் சிராய்ப்பு போன்ற பக்க விளைவுகள் இருக்கலாம், ஆனால் இவை பொதுவாகத் தற்காலிகமானவை.
சில சமயங்களில், மக்களுக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படலாம், அல்லது பாலினியூக்ளியோடைடுகள் சரியாகச் செலுத்தப்படாவிட்டால், தோல் நிறமாற்றம் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற நீண்ட கால அபாயங்கள் உள்ளன.
பாலினியூக்ளியோடைடுகள் பிரிட்டன் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை மருத்துவச் சாதனங்கள் என மருந்துகள் சுகாதார மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (MHRA) பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை மருந்துகள் போல ஒழுங்குபடுத்தப்படவில்லை.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அவை அங்கீகரிக்கப்படவில்லை.
"நான் ஏன் இதைச் செய்தேன் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்," என்று சார்லோட் கூறுகிறார். "என் முகத்தில் ஏதாவது தவறு நடந்தால், நான் அதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன்."
நிலைமையைச் சரிசெய்ய அவர் மருத்துவ செலவுகளை செய்துள்ளார், ஆனால் 10 மாதங்கள் கடந்தும், இன்னும் அவரது கண்களுக்குக் கீழே சில வடுக்கள் உள்ளன.
"நான் என் முகத்தில் மீண்டும் சால்மன் டிஎன்ஏ-வைச் செலுத்த மாட்டேன்," என்று சார்லோட் கூறுகிறார்.
நிபுணர்கள் கூறுவது என்ன?அழகுசாதனத் துறையைச் சிறப்பாக முறைப்படுத்துவதற்காகப் பரப்புரை செய்து வரும், பிரிட்டனில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்குகளின் பதிவேட்டை நடத்தி வரும் சேவ் ஃபேஸ் (Save Face) அமைப்பின் இயக்குநர் ஆஷ்டன் காலின்ஸ் இதுபற்றிக் கூறுகையில்,
"மருத்துவப் பயிற்சி பெற்ற நிபுணரால் பாலிநியூக்ளியோடைடுகள் செலுத்தப்படும்போது, மேலும் பயன்படுத்தப்படும் அந்தப் பிராண்ட் ஒரு நம்பகமான நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருந்தால், இந்தச் சிகிச்சை பாதுகாப்பானது என்றே கருதப்படுகிறது," என்று தெரிவித்தார்.
"ஆனால், இப்போது சரியாகச் சோதிக்கப்படாத தயாரிப்புகள் சந்தைக்கு வருவதைப் பார்க்கிறோம், அதுதான் கவலையளிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
பிரிட்டிஷ் அழகியல் மருத்துவக் கல்லூரியின் தலைவரான மருத்துவர் சோஃபி ஷோட்டர் இதை ஒப்புக்கொள்கிறார்.
"போதிய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் இல்லாததால் சரியாகச் சோதிக்கப்படாத தயாரிப்புகளை யாராலும் பயன்படுத்த முடியும். இது ஒரு உண்மையான பிரச்னை."
இருப்பினும் அவரது கருத்தில், பாலினியூக்ளியோடைடுகள் பயனுள்ளவையா?
"அவை என் அலமாரியில், என் மருத்துவப்பெட்டியில் உள்ளன. ஒரு இயற்கையான தோற்றத்தை விரும்பி, நீண்ட கால முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நான் நிச்சயமாக அவற்றை வழங்குகிறேன்," என்று மருத்துவர் ஷோட்டர் கூறுகிறார்.
"ஒரு சிகிச்சை முறையாக பாலினியூக்ளியோடைடுகள் எல்லா பிரச்னைகளுக்கும் முழுமையான தீர்வு அல்ல. இதே போன்ற பலன்களை அளிக்கக்கூடிய, மேலும் அதிக தரவுகளை கொண்ட பிற சிகிச்சைகள் நிறைய உள்ளன."
எல்லோருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை என்று எதுவும் இல்லை, என்று அவர் கூறுகிறார்.
"நாம் அனைவரும் வெவ்வேறு விஷயங்களுக்கு வெவ்வேறு விதமாக வினையாற்றுகிறோம், அது எப்போதும் கணிக்கக்கூடியது அல்ல."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு