இன்காக்னிடோ மோட் மூலம் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க முடியாது - ஏன் தெரியுமா?
BBC Tamil November 26, 2025 10:48 PM
Getty Images வைரஸ்கள் மற்றும் மால்வேர்களுக்கு எதிரான பாதுகாப்பை பிரைவேட் பிரவுசிங் வழங்குவதாகப் பலரும் நம்புகின்றனர்.

'இன்காக்னிடோ மோட்' (Incognito mode) அல்லது 'பிரைவேட் பிரவுசிங்' (Private browsing), இணைய யுகத்தில் இந்தச் சொற்கள் ஒன்றும் புதிதானவை அல்ல.

'இணையத்தில் ஒரு தரவைத் தேடும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை அணுகும்போது, பிரவுசரில் இந்த வசதியைப் பயன்படுத்தினால் நாம் எதைத் தேடுகிறோம் அல்லது எந்த வலைத்தளத்தைப் பார்க்கிறோம் என்பது ரகசியமாக இருக்கும்' - இதுவே பலரது புரிதலாக உள்ளது.

ஆமாம், அது உண்மை தானே என நீங்கள் கூறினால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. பயனர்கள் தங்களது பிரவுசர்களில் 'இன்காக்னிடோ' (கூகுள் குரோம்) வசதியைப் பயன்படுத்தியபோதும் கூட, பயனர்களின் செயல்பாட்டை கூகுள் தொடர்ந்து கண்காணித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், பல பயனர்கள் 'பிரைவேட் மோட்' (Private mode) குறித்து தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும், அந்த முறையில் இணையத்தைப் பயன்படுத்தும்போது சேகரிக்கப்படும் தரவுகள் குறித்துத் தாங்கள் வெளிப்படையாகவே இருந்ததாக கூகுள் தெரிவித்தது.

பின்னர் 2024-ஆம் ஆண்டு, இந்த வழக்கை தீர்க்கும் விதமாக கோடிக்கணக்கான தரவுகளை அழிக்கவும், பயனர்களைக் கண்காணிப்பதில் சில கட்டுப்பாடுகளை ஏற்கவும் கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அப்போது இணையத்தில் வைரலானது. பலரும் 'இன்காக்னிடோ மோட்' குறித்த சந்தேகங்களை எழுப்பினர்.

Getty Images 2020ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் மீது 'இன்காக்னிடோ மோட்' தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இன்காக்னிடோ அல்லது பிரைவேட் மோட் என்றால் என்ன?

இன்காக்னிடோ அல்லது பிரைவேட் வசதி என்பது பெரும்பாலான நவீன பிரவுசர்களில் காணப்படும் ஒரு அம்சமாகும். இது, கூகுள் குரோம்- இன்காக்னிடோ மோட், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் சஃபாரி- 'பிரைவேட் பிரவுசிங்', மைக்ரோசாஃப்ட் எட்ஜ்- 'இன்பிரைவேட்' என பல பிரவுசர்களில் வெவ்வேறு பெயர்களில் உள்ளது.

"உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பிற பயனர்களிடமிருந்து உங்கள் பிரவுசிங் செயல்பாட்டை மறைக்க இன்காக்னிடோ மோட் உதவும்."- இதுவே கூகுள் அளிக்கும் விளக்கம்.

அதாவது, உங்கள் அலுவலகத்தின் ஒரு கணினியில் இருந்து பிரவுஸ் செய்கிறீர்கள் என்றால், அந்தக் கணினிக்கான அணுகல் பிறரிடமும் உள்ளது என்றால், அதில் என்ன பிரவுஸ் செய்கிறீர்கள் என்பதை பிற பயனர்களிடம் இருந்து மறைக்க இன்காக்னிடோ மோட் அல்லது பிரைவேட் பிரவுசிங் உதவும். அவர்கள் பிரவுசரின் 'ஹிஸ்டரி' (History) பக்கத்தில் சென்று பார்த்தாலும், உங்கள் பிரவுசிங் செஷன் (Session) தரவுகள் அதில் இருக்காது.

இன்காக்னிடோ மோட் ஒரு தற்காலிக பிரவுசிங் செஷனை உருவாக்குகிறது. பிரவுசிங் விண்டோவை (Window) மூடியவுடன் ஹிஸ்டரி, குக்கீகள் அல்லது கேச் (Cache) தரவுகள், லாக்-இன் தரவுகள் சேமிக்கப்படாது. அதேபோல, உங்களது பிரதான பிரவுசிங் செஷனின் தகவல்களை இதில் அணுக முடியாது.

Getty Images உங்கள் சாதனத்தில் பிரைவேட் பிரவுசிங் மூலம் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை அணுகினாலும் கூட, அது நீங்கள் தான் என்பது உங்கள் இணைய சேவை வழங்குநருக்கு தெரியும்

"சிலர், பிரைவேட் பிரவுசிங் மூலம் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை கூட மேற்கொள்வார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அந்த சாதனத்தில் மட்டுமே தரவுகள் சேமிக்கப்படாது. மற்றபடி, உங்களது இணைய சேவை வழங்குநரிடம் (ISP), அந்தத் தரவுகள் இருக்கும்." என்கிறார் இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

காரணம், உங்களது ஐபி முகவரி (IP Address) பிரைவேட் பிரவுசிங் முறையில் மறைக்கப்படாது. நீங்கள் உங்கள் சாதனத்தில் பிரைவேட் பிரவுசிங் மூலம் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை அணுகினாலும் கூட, அது நீங்கள் தான் என்பது அந்த சாதனத்திற்கும், உங்கள் இணைய சேவை வழங்குநருக்கும் தெரியும் என்று குறிப்பிடுகிறார் அவர்.

ஐபி முகவரி என்பது இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான ஒரு அடையாள எண்ணாகும்.

"ஒரு அலுவலக கணினியில் நீங்கள் இன்காக்னிடோ பயன்படுத்தும்போது, அந்த அலுவலகத்தின் இணையத்தை நிர்வகிக்கும் குழுவுக்கும் (Network admin) அனைத்து விவரங்களும் தெரியும். அதேபோல, சட்டவிரோதமான விஷயங்களை பிரைவேட் பிரவுசிங் முறையில் தேடுவதும் நிச்சயம் பதிவாகும். தேவைப்பட்டால் அதை அரசு முகமைகள் அணுகக்கூடும்" என்கிறார் முரளிகிருஷ்ணன்.

"உங்கள் கணினி அல்லது சாதனத்தை இணையத்துடன் இணைக்க, ரூட்டர் (Router) வழியாக தான் செய்ய வேண்டும். ரூட்டர் மூலம், நீங்கள் பார்வையிடும் அனைத்து இணைய முகவரிகளையும் கண்காணிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் பயன்படுத்தினாலும், அதைத் தடுக்க முடியாது"

அதேபோல, பிரைவேட் பிரவுசிங் மூலம் நீங்கள் தரவிறக்கம் (Download) செய்யும் விஷயங்கள், அது காணொளியோ அல்லது ஆவணங்களோ, அவை தானாக அழியாது என்பதையும் முரளிகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

"அது உங்கள் கணினி அல்லது சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்களாக தான் அழிக்க வேண்டும். மற்றபடி ஒரு பிரைவேட் பிரவுசிங் செஷனை நீங்கள் மூடினால், தரவிறக்கம் குறித்த விவரம் மட்டுமே தானாக அழியும்" என்கிறார்.

"நிச்சயமாக இன்காக்னிடோ மோட் என்பது ஒரு இணையக் கவசமல்ல, ஆனால் பலர் அப்படி நினைக்கிறார்கள்" என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.

"பல இணைய பயனர்கள் 'பிரைவேட் பிரவுசிங்' என்ற வார்த்தையைப் பற்றிய தவறான புரிதலையே கொண்டிருந்தார்கள். என்கிரிப்டட் (Encrypted) மின்னஞ்சலை அனுப்ப, தனது அடையாளத்தை மறைக்க அல்லது ஃபிஷிங் (Phishing) வலைப்பக்கத்தை அணுக அதைப் பயன்படுத்தலாம் என்று பலர் தவறாக நம்பினர். ஏனெனில் 'இன்காக்னிடோ பாதுகாப்பானது' என்ற தன்னிச்சையான உணர்வு அவர்களுக்கு இருந்தது" என அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

அதேபோல மற்றொரு ஆய்வு, "இணைய சேவை வழங்குநர் மற்றும் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அல்லது அரசாங்கத்தால், தங்களது இணைய செயல்பாட்டை 'இன்காக்னிடோ' முறையில் கூட கண்காணிக்க முடியும் என்பதை பல இணைய பயனர்கள் உணரவில்லை" என்று குறிப்பிடுகிறது.

மேலும் அந்த ஆய்வில் கலந்துகொண்ட 27 சதவீதம் பேர் பிரைவேட் பிரவுசிங், வைரஸ்கள் மற்றும் மால்வேர்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாக நம்பினர்.

Getty Images 'நிச்சயமாக இன்காக்னிடோ மோட் என்பது ஒரு இணையக் கவசமல்ல'

பிரைவேட் பிரவுசிங் உங்களை இணைய மோசடிகளில் இருந்து பாதுகாக்காது என்று முரளிகிருஷ்ணன் உறுதியாகச் சொல்கிறார்.

"நீங்கள் வழக்கமான பிரவுசிங்கில் ஒரு மோசடி இணைப்பை க்ளிக் செய்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அதேதான், பிரைவேட் பிரவுசிங் முறையிலும்" என்கிறார் அவர்.

"அதேபோல இணைய கண்காணிப்பிலிருந்தும் உங்களை அது பாதுகாக்காது. எளிதாகச் சொல்வதென்றால், நீங்கள் ஒரு புத்தம் புதிய 'பிரவுசிங் செஷனை' அணுகுகிறீர்கள். ஒருமுறை அதை மொத்தமாக மூடிய பிறகு, அந்த சாதனத்தில் மட்டும் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பது இருக்காது."

"உதாரணமாக நீங்களும் உங்கள் மனைவியும் ஒரே சாதனத்தை பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் மனைவிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று தேடியுள்ளீர்கள், ஆனால் அது உங்கள் மனைவிக்கு தெரியவேண்டாம், திடீரென பரிசைக் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தலாம் என்ற திட்டம் இருந்தால், இந்த பிரைவேட் பிரவுசிங் உங்களுக்கு உதவும்." என்கிறார் அவர்.

இது தவிர,

  • (ஒரு செஷனில்) தேடலின் அடிப்படையில் காட்டப்படும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை நீங்கள் விரும்பவில்லை என்றால்,
  • குக்கீகள்/கேச் தரவுகளை நீங்கள் விரும்பவில்லை என்றால்,
  • ஒரே சமயத்தில் இரண்டு ஜிமெயில் கணக்குகளில் லாக்-இன் செய்ய வேண்டும் என்றால் (அல்லது லாக்-இன் தேவைப்படும் வேறு தளங்கள்),

அப்போது பிரைவேட் பிரவுசிங் உங்களுக்கு உதவும் என முரளிகிருஷ்ணன் கூறுகிறார்.

"இப்போது பலரும் பிரைவேட் பிரவுசிங் முறைக்கு மாற்றாக விபிஎன் (VPN) பயன்படுத்துகிறார்கள். பெரிய மென்பொருள் நிறுவனங்கள், தங்களது அன்றாட பணிகளுக்காக அதை முறையான பாதுகாப்புடன் பயன்படுத்துகின்றன. ஆனால், தனிநபர்கள் விபிஎன் பயன்படுத்தும்போது அதில் சில ஆபத்துகள் உள்ளன. எனவே கவனம் தேவை." என்கிறார் அவர்.

"எனவே அடுத்த முறை இன்காக்னிடோ விண்டோவைத் திறக்கும்போது, இணையத்தில் முழு ரகசியம் என்பது இல்லை; விழிப்புணர்வுடன் இருப்பதே நம் கையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.