தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 408 ரன்களில் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன?
BBC Tamil November 27, 2025 12:48 AM
Getty Images முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்தார் செனுரன் முத்துசாமி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.

இதன் மூலம் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.

முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான 5 காரணங்கள் என்ன?

1. சவால் கொடுத்த லோயர் மிடில் ஆர்டர்

இந்தப் போட்டியின் முதல் நாள் இந்தியா ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது. தென்னாப்பிரிக்க அணி 201/5 என்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால், வழக்கம் போல் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்திய அணி பௌலர்களுக்கு சவால் கொடுத்தது.

வழக்கமாகவே பல போட்டிகளில் டாப் ஆர்டரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்தபின் அதன் பிறகு வரும் வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் இந்தியா தடுமாறும். சமீபத்திய போட்டிகளிலேயே அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

Getty Images

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் (பெங்களூரு, 2024) வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 65 ரன்கள் எடுத்து இந்தியாவை சோதித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் (2025) இரண்டாவது இன்னிங்ஸில் 91/6 என்றிருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு மட்டும் 47.4 ஓவர்கள் ஆடியது. கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஸ்காட் போலாண்ட் இருவரும் மட்டும் 19.3 ஓவர்கள் ஆடினார்கள்.

சமீபத்தில் கூட இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டின் (2025) முதல் இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் 55 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகப்படுத்தினார்.

இது இந்த கவுஹாத்தி போட்டியிலும் தொடர்ந்தது. செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் மற்றும் கைல் வெரெய்னே ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்தனர்.

ஏழாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, எட்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். அதன் விளைவாக அந்த அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் அடிக்க, யான்சன் 93 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

Getty Images 2. பதம் பார்த்த 12 ஓவர்கள்

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்தியாவும் நல்ல தொடக்கத்தையே கண்டிருந்தது. 32.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்காவின் தொடக்கத்தை விட இது ஓரளவு சிறப்பானதாகவே இருந்தது. ஆனால், அங்கிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியா.

32.1 ஓவர்களில் 95/1 என்ற இந்தியா 43.3 ஓவர்கள் முடிவில் 122/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இடைப்பட்ட 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தார்கள். அதில் பெரும்பாலானவை மோசமான ஷாட்களினால் வீழ்ந்த விக்கெட்டுகள்.

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 'ஷார்ட் லென்த் பால்'களாக வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் அதை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அப்படியே வீழ்ந்தன. ஹார்மர் பந்துவீச்சில் அவுட்டான சாய் சுதர்ஷன் கூட தவறான ஷாட் ஆடித்தான் ஆட்டமிழந்தார்.

அது இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. அதிலிருந்து கடைசி வரை இந்திய அணி மீண்டு வரவேயில்லை.

3. அனைத்து திசையிலும் அணைபோட்ட யான்சன்

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலுமே இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் யான்சன்.

முன்னர் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயரச் செய்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் அவர். இது இந்திய பௌலர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்படுத்தியதோடு, மறுபக்கம் பேட்டிங் செய்துகொண்டிருந்த முத்துசாமி மீதான நெருக்கடியையும் குறைத்தது.

பேட்டிங்கில் சோபித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக பந்துவீச்சிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் யான்சன். இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் அந்த பெரும் சரிவை சந்திக்க அவர்தான் முக்கியக் காரணமாக இருந்தார்.

'ஷார்ட் லென்த்' பந்துகளாக தொடர்ந்து வீசிய அவர், இந்திய பேட்டர்களை பெருமளவு சோதித்தார். அதில் வேகமும் இருந்ததால், இந்திய பேட்டர்களால் அதிரடியும் காட்ட முடியவில்லை. அதன் விளைவாக பண்ட், ஜுரெல், ஜடேஜா, நித்திஷ் ஆனைவரும் அவரது ஷார்ட் லென்த் பந்துகளில் பெவலியின் திரும்பினார்கள். கடைசி கட்டத்தில் வந்து குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 19.5 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர்.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 288 என்ற மிகப் பெரிய முன்னிலை பெறுவதற்கு அவர் மிக முக்கியக் காரணமாக விளங்கினார்.

Getty Images முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டு பிரிவிலும் சோபித்தார் மார்கோ யான்சன் 4. சவாலான தருணத்தில் தரப்பட்ட டிக்ளரேஷன்

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் பலருக்கும் புதிராக இருந்தது. விரைந்து ரன்கள் சேர்த்து, நல்ல முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ வேறொரு திட்டம் வைத்திருந்தார்கள்.

83.5 ஓவர்கள் பேட்டிங் செய்த அந்த அணி 260 ரன்கள் எடுத்து, 548 ரன்கள் முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியபோது 450 - 480 என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு டிக்ளேர் செய்வார்கள் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்தார்கள்.

அதற்கு அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 170 - 200 ரன்கள் அடித்திருந்தாலே போதும், அதை அவர்கள் அதிரடியாக அடிப்பார்கள் என்றுதான் வர்ணனையாளர்கள் விவாதித்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியது தங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாகக் கூறியவர்கள், அதற்கான காரணத்தை பெருமளவு விவாதித்தார்கள்.

பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவேண்டாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்று தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியாவை ஆல் அவுட் செய்ய 100 -110 ஓவர்கள் கொடுப்பது முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது செஷன் முடிந்ததும் கூட டிக்ளேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதைச் செய்யவில்லை.

மூன்றாவது செஷனிலும் 8 ஓவர்கள் ஆடிவிட்டு அந்த அணி டிக்ளே செய்ய, வெளிச்சம் சற்று குறைவான, மிகவும் சவாலாக கடைசி கட்டத்தில் புதிய பந்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இறுதியில் நான்காம் நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இது கடைசி நாள் சரிவுக்கு அடித்தளம் போட்டதாக அமைந்துவிட்டது.

ஒருவேளை முன்னதாகவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தால் அவர்கள் நல்ல தொடக்கம் கண்டிருக்கலாம். அது போட்டியை டிரா நோக்கி நகர்த்தியிருக்கலாம். ஒருவேளை அந்த இரு விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் போட்டி டிரா ஆகியிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. அவர்கள் அதிக ஓவர்கள் பிடித்து இந்தியாவை கடைசி கட்டத்தில் ஆடவைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தினார்கள்.

Getty Images 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி 5. 'உத்வேகம் இல்லையா?'

இந்தப் போட்டியின்போது வல்லுநர்கள் பலரும் விவாதித்த இன்னொரு விஷயம், இந்திய வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்பது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் ரிஷப் பண்ட் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இதை அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஶ்ரீதர் கூடக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூட இதைப் பற்றி வர்ணனையில் விவாதித்தார். "இந்தப் போட்டியில் இந்திய வீரர்களிடம் பெரிதாக உத்வேகம் காணப்படவில்லை" என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.