இன்று தவெகவில் செங்கோட்டையன் இணைகிறார் என்கிற செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் மற்றும் இணையதளம், சமூக வலைத்தளங்களிலும் நேற்று முதல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், அவருக்கு என்ன பதவி வழங்கப்படுகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. தலைவர் விஜய் என்று செங்கோட்டையன் அழைப்பதும், தலைவர் விஜய் வாழ்க என்று செங்கோட்டையன் சொல்வதுமாக கார்ட்டூன்கள், மீம்ஸ்கள் நேற்று முதலே பரவி வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடியது. முதலில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாகத் தெரிந்த பிறகு, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையனும் அதிருப்திக்கு உள்ளானார்.
கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், அவர் வகித்து வந்த கட்சிப் பதவியில் இருந்த அவரது ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்ததே செங்கோட்டையனின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும். இதனால், தனது மனக்குமுறலை அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்ததால், அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டுக் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
நீக்கப்பட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று கூடி, டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அனைவரும் மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்குச் செவிமடுக்காத நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் புதிய அரசியல் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது அனைத்து ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு முக்கிய நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்துள்ளார். அதற்குப் பிறகு, அவர் தனி கட்சி தொடங்குவாரா அல்லது கே.ஏ.செங்கோட்டையனைப் போல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும். கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த அதிரடி முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!