மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்
BBC Tamil November 27, 2025 12:48 PM
Getty Images மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளைச் செல்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அக்காலகட்டத்தில், மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனநலக் கோளாறுகளும், டிமென்ஷியாவும் (நினைவாற்றல்) ஏற்படக்கூடிய ஆபத்து வாழ்நாள் முழுவதும் ஏன் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Monty Rakusen / Getty Images மூளை வளர்ச்சியில் ஐந்து வெவ்வேறு நிலைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

புதிய அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, மூளை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் இந்த மாற்றம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே மாதிரி, சீரான முறையில் நடைபெறுவது இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

மனித மூளை 5 கட்டங்களை கடக்கிறது. அவை,

  • குழந்தைப் பருவம் - பிறப்பு முதல் ஒன்பது வயது வரை
  • இளமைப் பருவம் - ஒன்பது முதல் 32 வயது வரை
  • முதிர்வயது - 32 முதல் 66 வயது வரை
  • முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - 66 முதல் 83 வயது வரை
  • முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - 83 வயது முதல்

"மூளை வாழ்நாள் முழுவதும் தனது இணைப்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில இணைப்புகளை வலுப்படுத்தும், சிலவற்றை பலவீனப்படுத்தும். இது ஒரே மாதிரியான, நிலையான முறை அல்ல. இடையிடையே மாற்றங்களும், புதிய கட்டங்களும் ஏற்படுகின்றன" என்று பிபிசியிடம் மருத்துவர் அலெக்சா மௌஸ்லி கூறினார்.

சிலருக்கு இந்த கட்டங்கள் வேகமாகவும், சிலருக்கு தாமதமாகவும் ஏற்படலாம். ஆனால் மாற்றம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட வயது தரவுகளில் எவ்வளவு தெளிவாகத் தனித்து நின்றது என்பது ஆச்சரியமாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை ஸ்கேன்களின் எண்ணிக்கை காரணமாக, இவை இப்போது தான் வெளிப்பட்டுள்ளன.

குழந்தைப் பருவம் – இந்த முதல் காலத்தில், மூளை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும். அதே சமயம், வாழ்க்கையின் தொடக்கத்தில் உருவான மூளைச் செல்களுக்கு இடையேயான அதிகப்படியான இணைப்புகள் (சினாப்சஸ்) மெலிந்துகொண்டிருக்கும்.

இந்தக் கட்டத்தில் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். அது, A-விலிருந்து B-க்கு நேராகச் செல்லாமல், பூங்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு குழந்தை போல, தன்னிச்சையாக விருப்பமான இடங்களுக்கு செல்வது போல செயல்படுகிறது.

Getty Images குழந்தை பருவத்தில் மூளை அதன் விரைவான மாற்றங்களுக்கு உட்படுகிறது

இளமைப் பருவம் – ஒன்பது வயதிலிருந்து மூளையின் இணைப்புகள் திடீரென மாறி, மிக வலிமையான செயல்திறன் கொண்ட ஒரு கட்டத்தை அடைகின்றன. "இது ஒரு பெரிய மாற்றம்," என்று மூளை கட்டங்களுக்கு இடையிலான ஆழமான மாற்றத்தை மருத்துவர் மௌஸ்லி விவரித்து கூறுகிறார்.

இந்தக் காலத்தில் மனநலக் கோளாறுகள் தொடங்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்.

பருவமடைதல் தொடங்கும் நேரத்தில் இளமைப் பருவம் ஆரம்பிப்பது அசாதாரணமான விஷயமல்ல.

ஆனால், இது நாம் நினைத்ததை விட மிகவும் நீண்டகாலமெடுத்து முடிகிறது என்பதைக் காட்டும் புதிய ஆதாரமாக இந்த ஆய்வு அமைகிறது.

முன்பு, இளமைப் பருவம் பதின் பருவ வயதுக்குள்ளேயே முடிவடைகிறது என்று கருதப்பட்டது.

பின்னர், நரம்பியல் ஆய்வுகள் அது 20வயதுக்குப் பிறகும் தொடரும் என்று குறிப்பிட்டன. இப்போது, வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வு முடிவுகள் இளமைக்காலம் 30 வயதின் தொடக்கம் வரை நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மூளை நியூரான்களின் வலையமைப்பு மிகவும் திறமையானவையாக மாறும் ஒரே காலம் இதுதான். முப்பது வயதின் தொடக்கத்தில் மூளையின் செயல்பாடு உச்சத்தை அடைகிறது என்பதை பல அளவீடுகள் காட்டுகின்றன என்று மருத்துவர் மௌஸ்லி கூறினார்.

ஆனால், ஒன்பது வயது முதல் 32 வயது வரை மூளை அதே கட்டத்தில் இருப்பது "மிகவும் ஆர்வமூட்டக்கூடியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

Getty Images மனநலக் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்து ஏன் வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அதன் முடிவுகள் நமக்கு உதவும் என்று ஆய்வுக் குழு கூறுகிறது

முதிர் பருவம் – அடுத்து மூளை அதன் மிக நீண்ட கால கட்டத்தில் நுழைகிறது. இது முப்பது ஆண்டுகள் நீடிக்கும் நிலைத்தன்மை கொண்ட காலமாகும்.

முன்பு இருந்த வேகமான மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் ஏற்படும் மாற்றம் மெதுவாக இருக்கும். ஆனால் இங்கே, மூளையின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தலைகீழாக மாறத் தொடங்குகின்றன.

"இது நம்மில் பலர் நேரில் கண்ட அல்லது அனுபவித்த நுண்ணறிவு மற்றும் ஆளுமையின் சமநிலை நிலையுடன் (plateau) ஒத்துப்போகிறது," என்று மருத்துவர் மௌஸ்லி விளக்குகிறார்.

Getty Images முதிர்வயது என்பது மூளையின் வளர்ச்சியின் மிக நீண்ட காலம் என்றும், அது மிகக் குறைந்த மாற்றத்திற்கு உள்ளாகும் என்றும் ஆய்வுக் குழு கூறுகிறது

முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - இது 66 வயதில் தொடங்குகிறது, ஆனால் இது திடீர் மற்றும் உடனடி வீழ்ச்சி அல்ல. மாறாக, இந்த நேரத்தில் மூளையில் உள்ள இணைப்புகளின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

முழு மூளையாக ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, மூளை படிப்படியாக ஒன்றிணைந்து செயல்படும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, இசைக்குழு உறுப்பினர்கள் தனி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போல இது செயல்படுகிறது.

மூளையின் நலனை பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இந்த வயதில் தான் வெளிப்படத் தொடங்குகின்றன.

முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - பின்னர், 83 வயதில், நாம் இறுதி கட்டத்திற்குள் நுழைகிறோம். ஸ்கேன் செய்வதற்காக ஆரோக்கியமான மூளைகளை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்ததால், மற்ற குழுக்களை விட குறைவான தரவுகளே இதில் கிடைத்துள்ளன. இந்த சமயத்தில், மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு முந்தைய கட்டத்தைப் போலவே தோன்றுகின்றன, ஆனால் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன.

பருவமடைதல், பிற்காலத்தில் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் மற்றும் 30 வயதுகளின் தொடக்கத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது போன்ற "பல முக்கியமான மைல்கல்களுடன் வெவ்வேறு 'வயதுகள்' எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன" என்பது தன்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதாக மருத்துவர் மௌஸ்லி தெரிவித்தார்.

Getty Images விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முதுமையின் பிந்தைய கட்டம் 83 வயதில் தொடங்குகிறது. 'மிக அருமையான ஆய்வு '

இந்த ஆய்வு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்க்கவில்லை, அதனால் மாதவிடாய் நிறுத்தம் (menopause) எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் தகவலியல் பேராசிரியரான டங்கன் ஆஸ்டில் இதுகுறித்துப் பேசுகையில், " பல்வேறு நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மனநலம் மற்றும் நரம்பியல் நிலைகள் மூளை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூளை இணைப்புகளில் உள்ள வேறுபாடுகள் கவனம், மொழி, நினைவு மற்றும் பல்வேறு நடத்தைகளில் ஏற்படும் சிரமங்களை முன்னறிவிக்கின்றன"என்றார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் டிஸ்கவரி பிரெயின் சயின்ஸ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரா ஸ்பைர்ஸ்-ஜோன்ஸ் இதுகுறித்துப் பேசுகையில், " வாழ்நாளில் நமது மூளை எவ்வளவு மாறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் அருமையான ஆய்வு இது"என்கிறார்.

மூளை வயதாவதைப் பற்றிய நமது புரிதலுடன் இந்த முடிவுகள் "நன்றாகப் பொருந்துகின்றன" என்று கூறிய அவர், ஆனால் "அனைவரும் ஒரே வயதில் இந்த மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.