திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குறித்து பேசியபோது, அவர் சிறந்த நிர்வாகி என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமானவராக இருந்தார் என்றும் தெரிவித்தார். “எனக்கும், செங்கோட்டையன் அவர்களுக்கும் 40 ஆண்டுகால நட்பு உள்ளது. அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது யாருக்கு பின்னடைவு என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்திருக்கின்றன,” என்றார்.
செங்கோட்டையன் விஜய்யை சந்தித்தது குறித்தும், ராஜினாமா முடிவைப் பற்றி தமக்குத் தகவல் தரவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார். “அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதை அவர் சொன்ன பின் தான் எனக்கும் தெரியும்,” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து கூட்டணி குறித்து கேட்கப்பட்டபோது, “எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. சில கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகி வருவது உண்மை. ஆனால் அந்தக் கட்சிகளின் பெயரை இப்போது கூறுவது பொருத்தமல்ல. கூட்டணி உறுதியானபின் நானே அறிவிப்பேன்,” என்றார்.
ஓ. பன்னீர்செல்வம் கூறிய ‘அரசியலில் எதுவும் நடக்கலாம்’ எனும் கருத்தை பற்றி, “அதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு எதிர்பாராத மாற்றங்கள், புதிய கூட்டணிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கான நகர்வுகள் நடந்து வருகின்றன,” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தீவிரவாதம் இல்லை என்றாலும், போதைப்பொருள் பிரச்சினை காரணமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைகிறது என்றும், இதை இரும்புக் கரத்தால் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது, “கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்,” எனத் தெரிவித்தார். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி சீராக நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.