விடுதலைப் புலிகள் தலைவர் மறைந்த பிரபாகரனின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று (நவ. 26) தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.
இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். அண்மையில் விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், “நடிகர்களுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா?” என்று கேள்வியெழுப்பியதை சுட்டிக்காட்டி, “நடிகர்களுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா? தற்குறிகள் மட்டும்தான் கூடுவார்களா? தத்துவக்காரர்களும் கூடுவார்கள்!” என்று பதிலடி கொடுத்தார்.
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக, ‘எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், கார் வாங்கும் அளவுக்குப் பொருளாதார வசதியை ஏற்படுத்துவோம்’ என்று பேசியிருந்தார். இதனைக் குறிப்பிட்டுச் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். “சோறு இல்லாத மக்களுக்கு, எதற்கு கார், இருசக்கர வாகனம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இது தேர்தல் வாக்குறுதியா, அல்லது மக்களை ஏமாற்றும் வேலையா என்றும் அவர் சாடினார். மேலும், திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.