வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகிவரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழகக் கடலோரத்தை நோக்கி நகர்வதால், இன்று (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் கனமழையை எதிர்கொள்வது மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக:நாளை நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலைக்குள்: இது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். நாளை நள்ளிரவு வட இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
புயலாக மாறிய பிறகு, இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலை கொள்ளவோ வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற நவம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு மற்றும் மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இதற்கிடையே, கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!