புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, த.வெ.க.வுக்கு இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது: செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் போல செயல்படுபவர் எனவும், த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு நெருக்கமாக்க வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ எனவும் ரகுபதி குற்றஞ்சாட்டினார்.
“அமித் ஷா அழைத்தால் உடனே ஓடிச் செல்வார்; இன்னும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்குபவர்தான்” என்றும் அவர் கூறினார். பா.ஜ.க. அவர் மீது அநீதியாக நடந்து கொண்டிருந்தால், அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்குப் பிறகு சேகர்பாபு நட்பு ரீதியில் அழைத்திருக்கலாம் என்றும் விளக்கினார். “தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புனிதமான, சீரிய ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முன்னதாக அதிமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரை அமைச்சர் சேகர் பாபு மற்றும் முத்துசாமி ஆகியோர் திமுகவுக்கு வருமாறு அழைத்ததாக செய்திகள் வெளி வந்தது. அதே நேரத்தில் செங்கோட்டையனிடம் இது பற்றி கேட்டபோது தனக்கு எங்கிருந்து அழைப்பு வரவில்லை என்று கூறிய நிலையில் நேற்று அவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெக கட்சியில் இணைந்தார்.
அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கால கெடு விதித்ததால் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இபிஎஸ் நீக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்துதான் அவர் விஜய் கட்சியில் இணைந்தார். மேலும் தற்போது அமைச்சர் ரகுபதி பாஜகவின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன் எனவும் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்காகவே செங்கோட்டையினை அவர்கள் அங்கு அனுப்பி உள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார்.