எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் விஜய் படம்... செங்கோட்டையன் அலுவலக பேனர் மாற்றம்... காரிலும் தவெக கொடி!
Dinamaalai November 28, 2025 04:48 PM

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தின் முகப்புத் தோற்றத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் அலுவலகத்தின் முன்புறம் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பேனரில் அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் படமும் இடம்பெற்றுள்ளது.

தவெகவில் தனக்கு வழங்கப்பட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய புதிய பதவிகளையும், செங்கோட்டையன் தனது பெயருடன் சேர்த்துப் போட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் என்ற பெயரும் தவெக கட்சியின் கொடி வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

அலுவலக பேனர் மட்டுமின்றி, செங்கோட்டையன் தனது காரிலும் புதிய மாற்றத்தைச் செய்துள்ளார். அவர் தனது காரில் இருந்த பழைய கட்சிக் கொடியை நீக்கிவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை மாற்றியுள்ளார். முன்னதாக, தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசினார்.

"அதிமுகவை எம்.ஜி.ஆர்தான் எனக்கு அடையாளம் காட்டினார். 50 ஆண்டுகால வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த எனக்கு, கிடைத்த பரிசுதான் உறுப்பினர் பதவி கூட இல்லாத நிலை. இயக்கம் மூன்று கூறுகளாகப் பிரிந்தபோதும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அந்தக் கருத்துக்களைச் செயல்படுத்த இயலவில்லை" என்று தெரிவித்தார்.

"இன்று திமுக, அதிமுக இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணிக்கின்றன என்பது நாடு அறிந்த ஒன்று. தூய்மையான ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் விஜய் இடம்பெற்று இருக்கிறார். 2026-ல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, புனித ஆட்சி உருவாகும் வகையில் விஜய் வெற்றி பெறுவார். மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை எட்டுவார்," என்று நம்பிக்கை தெரிவித்தார். எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவில் அரை நூற்றாண்டு காலம் செயல்பட்டு வந்த மூத்த தலைவர் செங்கோட்டையனின் இந்தத் திடீர் கட்சி மாற்றம், தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.