உலகம் முழுவதும் இன்று பேசப்படும் விஷயம் தங்கம். அதன் விலை உயர்வு, குறைவு மட்டும் அல்ல, உலக அரசியலையும், பொருளாதாரத்தையும் தங்கமே தீர்மானித்து வருகிறது. ஆனால், பூமியில் தோண்டி எடுக்கும் அந்த தங்கம்… உண்மையில் பூமியில் உருவானதே இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். வான்வெளியில் கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த பேரழிவுகள்தான் இன்று நம் கைகளில் இருக்கும் தங்கத்தின் உண்மையான பிறப்பிடமாம்.
தங்கத்தின் ஆரம்பக் கதையைப் பலரும் பூமியோ, எரிமலையோ, கடலடிப் படிமங்களோ என நினைத்தாலும், உண்மை அதைவிட அசரீரமானது. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் — மிகுந்த அடர்த்தி கொண்ட நட்சத்திர எச்சங்கள் — ஒன்றை ஒன்று வளைத்து ஈர்த்துக் கொண்டு மோதும்போது, பிரபஞ்சமே அதிரும் அளவுக்கு ஒரு பெரும் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த மோதலின் போது உருவாகும் “r-process” எனப்படும் அணுக்கரு மாற்றமே தங்கம் போன்ற கனரக உலோகங்களை உருவாக்குகிறது.
2017-ல் கண்டறியப்பட்ட GW170817 ஈர்ப்பு அலைச் சிக்னல் மூலம் இதற்கான அறிவியல் ஆதாரம் கிடைத்தது. அந்த நியூட்ரான் நட்சத்திர மோதலில் தங்கம் உருவான சான்றுகள் தெளிவாகப் பதிவானது. எனினும் இது மட்டுமே அல்ல, 2025-ல் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அனிருத் படேல் தலைமையிலான குழு, மக்னட்டார் ஃபிளேர் எனப்படும் இன்னொரு விண்வெளிப் பேரழிவும் தங்கத்தை உருவாக்கும் என்பதையும் கண்டுபிடித்தது. அதிக காந்தப்புலம் கொண்ட மக்னட்டார்களின் காந்தத்தட்டு திடீரென உடையும் போது, ஒளி வேகத்தை நெருங்கும் அளவில் நியூட்ரான்கள் பறந்து கிடப்பதால், தங்கம் போன்ற கனஉலோகங்கள் உருவாகும் என்பது இந்த கண்டுபிடிப்பு.
இதனால், தங்கத்தின் உருவாக்கம் முழுக்க முழுக்க விண்வெளியின் பரபரப்பான பேரழிவுகளையே சார்ந்தது என்பது உறுதி.
அப்படியானால் இந்த தங்கம் பூமிக்கு எப்படி வந்தது?பூமி உருவான ஆரம்பகட்டத்தில் தங்கம் இருந்தாலும், அதன் எடையால் அது உருகிய பூமியின் மையத்தில் மூழ்கிப் போயிற்று. இன்று நம்மிடம் உள்ள தங்கம் பெரும்பாலும் Late Heavy Bombardment எனப்படும் விண்கல் தாக்குதல்களின் மூலம் பூமிக்கு விழுந்தவையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மோதிய விண்கற்கள் தங்கம், பிளாட்டினம் போன்ற கன உலோகங்களை பூமியின் மேலடுக்கு பகுதிகளில் சேர்த்தன. பிற்காலத்தில் பூமியின் சூடான நீரோட்டங்கள் பாறைகளின் பிளவுகளில் ஊறிச் சென்று குளிரும் போது, தங்கம் துகள்களாக படிந்து இன்று நாம் காணும் தங்கச் சுரங்கங்களாக உருவானது.
வானுலக வெடிப்புகளிலிருந்து பூமிவரை பயணம் செய்து இன்று நம் கைகளில் அணிந்திருக்கும் நகைகளாக மாறியுள்ளது இந்த தங்கம். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, “தங்கம்” என்ற ஒரு உலோகத்தின் விலை மட்டுமல்ல, அதன் பின்னால் இருக்கும் பிரபஞ்ச வரலாற்றையும் மனிதர்கள் புரிந்து கொள்ள வைத்துள்ளது.