“விஜய் இப்போ தான் அரசியலுக்கு வந்திருக்காரு”… அதுக்குள்ள லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் தாண்ட முடியாது… நயினார் நாகேந்திரன்..!!!
SeithiSolai Tamil November 28, 2025 05:48 PM

நடிகர் விஜய் அவர்கள் தனது புதிய கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ தொடங்கிய உடனேயே, முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை என பா.ஜ.க. மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவராக இருந்தபோதே தீவிரமாகக் கட்சி பணியாற்றி பின்னர் புதிய கட்சியைத் தொடங்கி, மக்கள் செல்வாக்கால் முதலமைச்சர் ஆனார்.

ஆனால், விஜய் நடிகராக இருந்து தற்போதுதான் கட்சியைத் தொடங்கி உள்ளார். அதற்குள் ‘லாங் ஜம்ப்’, ‘ஹை ஜம்ப்’ தாண்ட வேண்டும் என்று நினைத்தால், அது சாத்தியமாகாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், விஜய் ஒரு கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை என்றும், அவர் முதலில் தேர்தலைச் சந்தித்து தனது பலத்தை நிரூபிக்கட்டும் என்றும் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்தார்.

மேலும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையன் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்தது குறித்தும் நயினார் நாகேந்திரன் பேசினார். “அவர் த.வெ.க.வில் இணைந்தது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று உறுதியாகக் கூறினார். அத்துடன், “செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக இருந்தால், அவர் ஏன் த.வெ.க.வில் இணைய வேண்டும்? அவர் பா.ஜ.க.விற்கு வந்திருக்க வேண்டும்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றும், அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பிரச்சினையைப் பேசுவது நியாயமாக இருக்காது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது, நான்காவது அணிகள் வந்தாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்ல அனைவரையும் ஒன்றிணைக்க இன்னும் காலநேரம் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.