கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய மைல்கல்லாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்தின் தொழில்துறை பன்னாட்டுத் தாளத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மூலம் ₹43,844 கோடி முதலீடு உறுதிசெய்யப்பட்டதோடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தியை முன்னேற்ற, கோவை ஆவாரம்பாளையத்தில் ₹14.43 கோடி முதலீட்டில் திறன் மேம்பாட்டு மையம் ஏற்படுகிறது.
அதேபோல், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பை மேம்படுத்த மோப்பிரிப்பாளையத்தில் ₹26.50 கோடி மதிப்பீட்டில் இன்னொரு தொழில் மையத்தின் அடிக்கல் முதலமைச்சரால் நாட்டப்பட்டது.உலகத்தரம் வாய்ந்த பல பன்னாட்டு நிறுவனங்களும் கோவை வளர்ச்சிப் பாதையில் கைகோர்க்க முன்வந்துள்ளன.
ஜவுளி, வான்வெளி-பாதுகாப்பு, மின்னணுவியல், ஐடி-பூங்காக்கள், சுற்றுலா, பொது உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் மிகுந்த நிதி ஓட்டம் பாயவிருக்கிறது. மேலும், சூலூரில் கோவை சேர்ந்த ZEPTO Logic Technology, ₹250 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் எலக்ட்ரானிக் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
கரவளி மாதப்பூரில் லாஜிஸ்டிக் பார்க் உருவாக்கப்படும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் முதலீடுகள் விரைவாக அதிகரித்து வருவதால், குறிப்பாக கோவை கிழக்குப் பகுதி புதிய தொழில் மையமாக எழும் நிலை அமைகிறது.
“உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு உயர்வதால் கோவையில் தொழில்துறை வேகம் பலமடங்கு அதிகரிக்கிறது,” என தொழில்துறை நிபுணர்கள் உற்சாகத்துடன் மதிப்பிடுகின்றனர்.