மனித வாசனையால் கொசுக்கள் ஈர்க்கப்படுகிறதா - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?
BBC Tamil December 08, 2025 03:48 AM
Getty Images கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது.

(கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை, மறுபகிர்வு செய்யப்படுகிறது)

கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன.

உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.

2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன.

அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயிரினங்கள் பட்டியலில் மனிதர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் மனிதர்களின் இறப்புக்கு காரணமாகியுள்ளனர்.

அதன் பிறகு, பாம்புகள், நாய்கள், விஷத்தன்மை கொண்ட நத்தைகள், முதலைகள், நீர்யானைகள், யானைகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் சுறாக்களின் கூட்டுத் தாக்குதல் அதற்கு அடுத்த எண்ணிக்கையில் மனித மரணங்களுக்கு காரணமாகியுள்ளது.

இதனால்தான் உலக நோய்பரப்பிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை (Global Vector Control Response (GVCR) 2017-2030) 2017ம் ஆண்டு தொடங்க ஒப்புதல் அளித்தது உலக சுகாதார நிறுவனம்.

நோய்ப் பரப்பிகளை, குறிப்பாக இந்த பட்டியலில் முக்கியமாகத் தனித்து நிற்கும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வெஸ்ட் நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, செயின்ட் லூயிஸ் மூளை அழற்சி போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பக்கூடியவை கொசுக்கள். மலேரியா நோயால், கடந்த 2020ல் மட்டும் 62 ஆயிரத்து 700 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

கரியமில வாயுவும் உடல் வாடையும் Getty Images

ஆண், பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும்.

ஆனால் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க, பெண் கொசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கரியமில வாயு (CO₂) கொசுக்களை ஈர்க்கும் வாயுவாக அடையாளம் காணப்பட்டது. முட்டைகளை உருவாக்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

ஆனால், சிலரை அதிகமாக கடிக்கவும், சிலரை கடிக்காமல் விடுவதற்கும் குறிப்பிட்ட நபர்களின் கரியமில வாயு உமிழ்வு அளவே காரணம் என்று கூறுவது சரியான விளக்கமாக இருக்காது.

வேறு என்ன காரணம்? Science Photo Library

குறிப்பிட்ட நபர்களை ஒரு கொசு கடிக்க தீர்மானிப்பதற்குக் காரணமாகும், பிற உடலியல் மற்றும் வேதியியல் சமிக்ஞைகள் உள்ளன.

குறிப்பாக, வெப்பம், ஈரப்பதம், அதற்கு தென்படும் விஷயங்கள் மற்றும், மிக முக்கியமாக, தோலில் இருந்து வெளிப்படும் ஒருவித வாடை ஆகியவையே கொசுக்கள் யாரை அதிகம் கடிப்பது என்பதைத் தீர்மானிக்கின்றன.

நம் உடலில் இருந்து வரும் எந்த வாடை, கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பல ஆய்வுகள் இண்டோல், நோனானோல், ஆக்டெனோல் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவையே இப்படி ஈர்ப்பதாக சுட்டிகாட்டுகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் மேத்யூ டிஜென்னாரோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, அயனோட்ரோபிக் ரிசெப்டர் 8ஏ (Ionotropic receptor - IR8a) எனப்படும் தனித்துவமான வாசனை ஏற்பியை அடையாளம் கண்டுள்ளது. இது டெங்கு சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) வகை கொசுக்கள் லாக்டிக் அமிலத்தைக் கண்டறிய வழி செய்கிறது. ஜிகா வைரசையும் இவையே பரப்புகின்றன.

விஞ்ஞானிகள் பூச்சி ஆன்டெனாவில் காணப்படும் IR8a ஏற்பியை மாற்றியமைத்தபோது, கொசுக்களால் லாக்டிக் அமிலம் மற்றும் மனிதர்கள் வெளியிடும் பிற அமில வாசனைகளை கண்டறிய முடியவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

கொசுக்களை ஈர்க்கும் வாசனை

பொதுவாக, மனிதர்கள் மற்றும் எலிகளின் தோல் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்ட்டைடுகள் (Peptides) உருவாக்குகிறது. இது பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

ஆனால், டெங்கு அல்லது ஜிகாவால் பாதிக்கப்பட்ட எலிகளில், அசிட்டோபீனோனின் (acetophenone) உற்பத்தியைத் தூண்டுகிறது.

மனிதர்களில் இதேபோன்ற ஒன்று நடக்கிறது: டெங்கு நோயாளிகளின் அக்குள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வாடையில், ஆரோக்கியமான நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாடையை விட அதிகம் அசிட்டோபீனோன் (acetophenone) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த வேறுபாட்டை சரி செய்யமுடியும்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட சில எலிகளுக்கு ஐசோட்ரெட்டினோயின் (isotretinoin) கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது அசிட்டோபெனோன் வெளியேற்றத்தை குறைக்க வழிவகுத்தது, இதனால் கொசுக்களுக்கு ஈர்ப்பு குறைந்தது.

வாசனையை மாற்றும் நுண்ணுயிரிகள் Getty Images பெண் கொசுக்கள், முட்டைகளை உற்பத்தி செய்யும்போது மட்டுமே ரத்தத்தை உறிஞ்சும்.

ஒரு நுண்ணுயிரி கொசுக்களையும், மனித உடலையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

உதாரணமாக, மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆரோக்கியமான நபர்களை விட, நோயை பரப்பும் அனோபிலிஸ் காம்பியா என்ற ஒரு வகை கொசுக்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடியவார்களாக மாறுகின்றனர்.

இதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், இது (E)-4-hydroxy-3-methyl-but2-enyl pyrophosphate (HMBPP) எனப்படும் ஐசோபிரனாய்டு உருவாக்கும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது கொசு ரத்தத்தை உறிஞ்சும் வழக்கத்தை பாதிக்கிறது. அத்துடன் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் தன்மையும் உள்ளது.

குறிப்பாக, (HMBPP) எச்.எம்.பி.பி.பி என்பது மனித ரத்த சிவப்பணுக்களை தூண்டி கரியமில வாயுவையும், ஆல்டிஹைடுகள் மற்றும் மோனோடெர்பீன்களின் உமிழ்வையும் அதிகரிக்கச் செய்கிறது . இவை ஒன்றாக சேர்ந்து கொசுவை மிகவும் வலுவாக ஈர்த்து 'நம் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு' வழிவக்குகிறது.

மேலும், ரத்த மாதிரிகளில் (HMBPP) எச்.எம்.பி.பி.பியைச் சேர்ப்பதன் காரணமாக அனோபிலிஸ் கொலுஸி (Anopheles coluzzi,), அனோபிலிஸ் அராபியென்சிஸ் (Anopheles arabiensis), ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) மற்றும் குலெக்ஸ் பைபியன்ஸ்/குலெக்ஸ் டோரன்டியம் காம்ப்ளக்ஸ் ( Culex pipiens/Culex torentium) போன்ற பிற கொசு இனங்களுக்கு கணிசமான அளவில் ஈர்ப்பு அதிகரிக்கிறது.

கொசுக்கள் சிலரை மட்டும் அதிகம் கடிப்பதற்கும், சிலரை தவிர்ப்பதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வது, கொசுக்கள் தொற்று நோய்களைப் பரப்பும் அபாயத்தைக் கண்டறியவும் குறைக்கவும் உதவும்.

ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் ஸ்பெயின் நாட்டில் உள்ள சலாமன்கா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் பேராசிரியராக உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.