4 முனை தேர்தல் போட்டி உறுதி! அதிமுக ஒன்றாவதே தீர்வு ...! - தினகரன் விளக்கம்
Seithipunal Tamil December 08, 2025 01:48 PM

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க. ஒன்று சேர்ந்தால் மட்டுமே அடுத்த நூற்றாண்டுக்கும் கட்சியை வலுவாக முன்னேற்ற முடியும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள்,இவர்கள் அனைவரும் ஒருங்கிணைவார்கள் என நம்புகிறேன்.

பதவியாசை மற்றும் சுயலாபத்திற்காகவே கட்சி பிரிக்கப்பட்டது; அவர்கள் தாமாகவே திருந்த வேண்டும் அல்லது யாராவது எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.பா.ஜ.க தலைவர்கள் பலமுறை ஒருங்கிணைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இன்னும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“ஒரு கட்சியில் உள்ள பிரச்சினையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. கூட்டணிக்காக பேச வருவது தவறல்ல. அதிமுக விவகாரத்தில் பா.ஜ.க. அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுகிறது என்ற எண்ணமும் எனக்கு இல்லை” என்றார் தினகரன்.இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

“நான் கூறியதை புரிந்து கொள்ளாமல், தினகரன் 5வது அணி உருவாக்குவார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கிறது” என்றார்.மேலும், சில கட்சிகள் கூட்டணிக்காக அணுக்கமாக பேசி வருவதாகவும், இறுதி முடிவு வந்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை; நட்பு ரீதியில் பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்” என்றும் கூறினார்.மேலும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தினகரன் தெரிவித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.