”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
Vikatan December 08, 2025 03:48 AM

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வந்தது. இதற்கு எதிராக பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ், குமார், உத்திராபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட 22 பேர் கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்

அப்போது, ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சரத்ராஜ், பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் 5 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 18 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் அழைத்து சென்ற போலீஸ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் விடுதலை செய்யக்கோரியும், ஓ.என்.ஜி.சியை கண்டித்தும் இன்று போராட்டம் நடத்தினர். திருவாரூரில் ரயில் நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ்

இந்தத் தீர்ப்பு போராடுகின்ற விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், விவசாயிகளுக்காக போராட வரும் தலைவர்கள் மீது ஓ.என்.ஜி.சி நிர்வாகம் தொடர்ந்து வழக்கு போட்டு அச்சுறுத்துவதை கைவிடவேண்டும். மத்திய, மாநில அரசுகள் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும்.

பழைய பணிகள், புதிய பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளையும் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் தஞ்சாவூரில் தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.