திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிப்பிலான ஒரு முதியவர் வந்தார். அப்போது, சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு வண்டி ரயில் முன் அவர் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தென்னமர சாலைப் பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன் என்பதும், அவர் வயது 76 என்பதும் தெரியவந்தது.
இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும், திருமணம் ஆகாதவர் என்பதாலும், உறவினர்கள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்தார் என்றும் தெரியவந்தது. சந்திரசேகரன் குடியிருந்த வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு செய்ததில், வாணியம்பாடி வட்டார காவல்துறை ஆய்வாளருக்கு அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், வயது முதிர்வு காரணமாகச் சிரமப்பட்டு வருவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தனது முடிவுக்குத் தானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை என்றும், தனது நண்பர்களுக்குத் தொல்லை கொடுக்க விருப்பமில்லை என்றும், தன்னைப் பார்க்க உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள் என்றும் அவர் எழுதியிருந்தார்.
கடிதத்தில் முதியவர் சந்திரசேகரன் மேலும் குறிப்பிட்டதாவது: தான் இறந்த பிறகு தனது உடலை பிரேதப் பரிசோதனை செய்து மருத்துவமனையிலிருந்து இடுகாடு சென்று புதைத்து விடும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கான செலவுக்கு 25000 ரூபாய் வைத்துள்ளதாகவும், தான் குடியிருக்கும் வீட்டில் சடலத்தை வைக்க விருப்பமில்லை என்றும், தயவுசெய்து தனது விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்வதாகவும் எழுதியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட முதியவர் சந்திரசேகரன், தன்னை அடக்கம் செய்யும் செலவுக்காக, தனது கைப்பேசி மூலம் பணம் எடுப்பதற்குரிய மறைக் குறியீட்டு எண்ணைப் பேப்பரில் எழுதி வைத்திருந்தார். அதேபோல, தனது ஓய்வூதியப் புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, ஓய்வூதியத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் வசித்து வந்த வீட்டைக் கோவில் ஒன்றுக்கு எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.