``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக்
Vikatan December 08, 2025 03:48 PM

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்

இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீரங்கனைகள் ``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆஷிக் அகிய சென்னை திரும்பினர். சாதனை படைத்துத் திரும்பிய அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அப்துல் ஆஷிக், "7வது உலகக் கோப்பை சாம்பியன்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசிற்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதான் எனது முதல் சர்வதேச போட்டி. எனது இந்த முதல் சர்வதேச போட்டியிலேயே நான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.

நாங்கள் உலக கோப்பையில் கலந்து கொள்ள செல்வதற்குப் பண தேவை ஏற்பட்டது. இதனால் நாங்கள் கலந்து கொள்ள முடியுமா முடியாதா என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு பண உதவி செய்தார். அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அனுப்பினார், தற்பொழுது நாங்கள் பதக்கங்களை வென்று உள்ளோம்" என்று நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் கேரம் வீரர் அப்துல் ஆஷிக்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.