கோலி–ரோஹித் இல்லாதது இந்தியாவுக்கு பலவீனம்… டி20 தொடரில் வெற்றிக்குத் தயாராகும் தென்னாப்பிரிக்கா – கேப்டன் மார்க்ரம் பேட்டி
Seithipunal Tamil December 09, 2025 10:48 PM

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வென்ற தென் ஆப்பிரிக்கா, அதற்குப் பிறகு ஒருநாள் தொடரில் இந்தியா காட்டிய பதிலடியில் அதிர்ந்து போனது. இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கும் 5-போட்டி கொண்ட டி20 தொடரில், இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா முழுமையாகத் தயாராகி வருகிறது.

ஒருநாள் தொடரை வெல்ல இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா காட்டிய தாக்குதலான ஆட்டம் தென்னாப்பிரிக்காவை சிக்கலாக்கியது. அந்த இரு மூத்த வீரர்களும் டி20 தொடரில் இல்லை என்பது தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மார்க்ரம் கூறியதாவது:“விராட், ரோஹித் டி20 அணியில் இல்லை என்பது எங்களுக்கு நிச்சயமாக உகந்த விஷயம். ஆனால் அவர்கள் இல்லாவிட்டாலும் இந்தியா மிக வலுவான அணிதான்,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்தது:“T20 என்பது அடிப்படையில் பொழுதுபோக்குத் தரும் ஃபார்மெட். எனவே மிகப் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் ஸ்டைலில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாட விரும்புகிறோம். எதிரணியிடம் சிறந்த சவால் விடுவது எங்களின் நோக்கம்.”

முதல் போட்டி நடைபெற உள்ள கட்டாக் மைதானத்தில், இதற்கு முன் இந்தியாவை எதிர்த்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வென்றிருக்கிறது. “அந்த வெற்றிகளில் இருந்து வீரர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும்,” என்றும் மார்க்ரம் கூறினார்.

மேலும் பிட்ச் குறித்து அவர் விளக்கும்போது,“T20 தொடரில் பெரும்பாலும் அதிக ரன்கள் எடுக்க உகந்த பிட்ச் இருக்கும். அப்படியில்லாவிட்டாலும் சூழ்நிலைபடி நாங்கள் விளையாட்டை மாற்றிக் கொள்வோம். தொடரை நல்ல முறையில் தொடங்குவது மிக முக்கியம்,” என்றார்.

இதனால், கோலி–ரோஹித் இல்லாத இந்திய அணியை குறிவைத்து தென்னாப்பிரிக்கா வெற்றிக்கான முழு திட்டத்தையும் தயார் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.
டி20 தொடரின் முதல் போட்டி இந்தியா – தென்னாப்பிரிக்கா போருக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.