அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒரு சிறிய பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு என்ஜின்கள் கொண்ட அந்த விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானி விபத்தைத் தவிர்க்கும் நோக்குடன், அதை ஓர் நெடுஞ்சாலையில் (I-95 ஹைவே) அவசரமாகத் தரையிறக்க முயன்றார். விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டொயோட்டா கேம்ரி கார் மீது மோதியது.
இந்த விபத்தின் வீடியோ, காரின் டேஷ்கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விபத்தில், விமானம் அல்லது கார் எதற்கும் தீப்பிடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கார் ஓட்டிய 57 வயதுப் பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஒரு பயணி என இருவருமே பாதுகாப்பாக உள்ளனர்.
இந்தச் சிறிய ரக விமானம் மெரிட் தீவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களும் செயல்படாமல் போனதால், விமானி விவேகத்துடன் நெடுஞ்சாலையில் தரையிறக்க முயற்சித்ததாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.